ஆரோக்கியம் பெற அருமையான வழி! (Post 10,458)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,458
Date uploaded in London – – 18 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆரோக்கியம் பெற அருமையான வழி!
ச.நாகராஜன்

ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை அவலமான வாழ்க்கை. பணம், நண்பர்கள், குடும்பம் என்ன இருந்தும் பயன் என்ன – ஆரோக்கியம் இல்லாவிடில்!
ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், உலக இயல்பையும் அதன் ரகசியத்தையும் உணர்வதற்கு ஒரு உண்மையை அம்ருத பிந்து உபநிடதம் கூறுகிறது.

“மன ஏவ மனுஷ்யானாம்; காரணம் பந்த மோக்ஷயோ:”
மனதே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம் என்பது இதன் பொருள்.

மனிதன் என்பவன் மனமே தான். அதனால் தான் கட்டுப்படுத்தப்படுகிறான்; விடுவிக்கப்படுகிறான்.

இந்த உண்மையின் விளக்கத்தை அருமையான நூலான யோக வாசிஷ்டம் இன்னும் நன்றாகச் சுவைபட விளக்குகிறது.

இது உண்மையா? சில எடுத்துக் காட்டுச் சம்பவங்களைப் பார்ப்போம்.

அந்தோணி ராபின்ஸ் (Anthony Robbins) உலகப் புகழ் பெற்ற ட்ரெயினர். வெற்றிக்கான வழிகளை NLP ( Neuro Linguistic Programme) என். எல்.பி. என்னும் உத்தி மூலம் உலகெங்கும் பரப்பியவர். அவர் தனது ‘அன்லிமிடெட் பவர்’ (Unlimited Power) என்ற நூலில் ஒரு அற்புதமான உண்மைச் சம்பவத்தைக் கூறியுள்ளார்.
ஒரு பெண்மணி. அவருக்கு இரட்டை ஆளுமை இருந்தது. எப்போதெல்லாம் அவருக்குத் தனது உடல் மீது கட்டுப்பாடு இருந்ததோ அப்போதெல்லாம் அவரை சோதனை செய்து பார்த்தால் அவருக்கு டயபடீஸ் இருக்கவே இருக்காது. ஆனால் அவர் தனது கட்டுப்பாட்டை இழந்த மறுகணம் இன்னொரு ஆளாக – இன்னொரு ஆளுமைக்கு உட்பட்டு மாறும் போது,- அவரைச் சோதனை செய்து பார்த்தால் அவருக்கு டயபடீஸ் அபாயகரமான அளவில் இருப்பது தெரியவரும். ப்ளட் ஷுகர் அளவு அபரிமிதமாக இருக்கும். ஆனால் தனது கட்டுப்பாடான ஆளுமைக்கு வரும் போது எல்லா அளவுகளும் சாதாரண நார்மல் நிலையில் இருக்கும்.

இது ஒரு சின்ன உதாரணம் – மனதை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது அனைத்தும் நமக்கு சாதகமாகவே இருக்கும் என்பதை நிரூபிப்பதற்கு.
இன்னொரு எடுத்துக்காட்டு:-

நம்மிடையே வாழ்ந்து மறைந்த பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் இளமையில் 21ஆம் வயதிலேயே முதலாவது திருமணத்திற்கு முன்னர் Motor Neuron Disorder என்னும் மிகக் கொடிய இயக்கு

நரம்பணு நோயால் தாக்கப்பட்டார். உடல் இயக்கங்கள் படிப்படியாகக் குறைந்தன. பேச்சும் போனது. வீல் சேரிலேயே முடங்கிக் கிடந்தார். டாக்டர்களை கையை விரித்தனர். இன்னும் குறைந்த காலமே உயிர் வாழ முடியும் என்று கெடுவும் குறித்துச் சொன்னார்கள். ஆனால் தளராத மனத்துடன் தன் நோயுடன் போராடினார்.

கணினி மூலமாகவும் வாய்ஸ் சிந்தஸைஸர் மூலமாகவும் உலகுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். இயற்பியல் ஆராய்ச்சிகளில் பெரும் கொள்கைகளை உருவாக்கினார். கருந்துளை (Black Hole) பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். டாக்டர்களின் கணிப்பைப் பொய்யாக்கி 76 வயது வரை உயிர் வாழ்ந்தார்.

(பிறந்த தேதி 8-1-1942 மறைந்த தேதி : 14-3-2018). அவர் தனது சுய சரிதத்தை ‘மை ப்ரீஃப் ஹிஸ்டரி’ (My Brief History) என்ற நூலில் விவரித்துள்ளார். 13 அத்தியாயம் கொண்டுள்ள இந்த 126 பக்க நூலில் வாழ்வில் மரணத்தை எதிர் நோக்கி இருந்த தான் உத்வேகம் பெற்றது எப்படி என்று கூறுகிறார். “எனக்கு நரம்புக் கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்து மருத்துவர்கள் என்னைக் கைவிட்ட நிலையில் வாழ்நாள் சீக்கிரம் முடிந்து சாகப் போகிறென் என்ற நிலையில் வாழ்க்கை வாழ்வதற்கு உகந்த ஒன்று. அதில் ஏராளமான விஷயங்கள் செய்வதற்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டே” என்று அவர் அந்த நூலில் உருக்கமாகக் கூறுகிறார்.

மனத்தின் மாண்பு மூலம் செயற்கரிய செயல்களைச் செய்த சாதனையாளர்களுள் ஸ்டீவன் ஹாக்கிங்கின் பெயர் தனி இடத்தைப் பெறும்.

ஸ்டாமடிஸ் மொரைடிஸ் (Stamatis Moraitis) என்பவர் கிரேக்கப் போரில் கலந்து கொண்ட ஒரு போர்வீரர். அவர் அமெரிக்கா சென்று அங்கு வாழலானார். திடீரென்று ஒரு நாள் அவருக்கு நுரையீரலில் புற்று நோய் இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. டாக்டர்கள் அவர் இன்னும் ஒன்பது மாத காலமே உயிர் வாழ்வார் என்று கூறி விட்டனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் கூட பணம் தான் அதிகம் விரயமாகும் என்றும் அவர் உயிர் காப்பாற்றப் பட முடியாது என்றும் அவர்கள் கூறி விட்டனர்.

ஸ்டாமடிஸ் அனாவசியமாகப் பணத்தைச் செலவழிக்காமல் கிரேக்கத் தீவில் இகாரியா (Ikaria) என்ற தனது சொந்த ஊருக்குத் தனது மனைவியுடன் சென்றார். இறந்தாலும் தனது முன்னோர் கல்லறையில் புதைக்கப்பட வேண்டும் என்பது அவரது எண்ணம். தனது பெற்றோருடன் ஒரு சிறு வீட்டில் குடி புகுந்தார் ஸ்டாமடிஸ். ஒவ்வொரு நாளும் இது தான் தனது கடைசி நாள் என்ற உணர்வுடன் அவர் வாழ ஆரம்பித்தார். சர்ச்சுக்குப் போவது, தனது நண்பர்களைச் சந்தித்து அரட்டை அடிப்பது, தோட்டத்தில் கறிகாய்களைப் பயிரிடுவது, சூரிய ஒளியில் நடப்பது, குடும்ப உறுப்பினர்களிடம் அன்பு பாராட்டி வாழ்வது என்று இப்படி அவர் வாழ்க்கை மெல்லப் போனது. என்ன ஆச்சரியம், டாக்டர்கள் கூறியபடி அவர் ஒன்பது மாதங்களில் இறக்கவில்லை.

ஆனால் உடல் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மேம்பட்டு வந்தது. ஒரு நாள் அமெரிக்கா செல்ல நிச்சயித்து அங்கு சென்றார். டாக்டர்களிடம் தனது அனுபவங்களைச் சொல்லித் தான் இன்னும் உயிர் வாழ்வதைக் கூற வேண்டும் என்று அவருக்கு ஆசை. ஆனால், அந்தோ, அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அனைவரும் இறந்திருந்தனர். அவர் 102 வயது வரை உயிர் வாழ்ந்தார்.

எல்லாவற்றிற்கும் மனமே தான் காரணம்!

வனிஸா லோடர் என்ற பெண்மணி நிதி நிர்வாகத்தில் அபாரமான திறமைசாலி. ஆனால் அவருக்கு எதிலும் திருப்தி இல்லை. மகிழ்ச்சி இன்றி இருந்தார். தனது கம்பெனி வேலையை விட்டு விட்டுத் தனியாக ஒரு நிறுவனம் தொடங்க அவருக்கு ஆசை. ஆனால் அது சரிப்படுமா, தான் வெற்றி பெற முடியுமா என்று அவருக்குத் தன் மேலேயே ஒரு சந்தேகம். ஒரு நாள் ஹிப்னோதெராபி சிகிச்சை அளிப்பவரிடம் லோடர் சென்றார். தன் பிரச்சினையைச் சொன்னார். பல அமர்வுகள் நடந்தன. அவருக்குத் தன்னம்பிக்கை பிறந்தது. தன்னால் சாதிக்க முடியும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் அவர் ஒரு பெரிய எழுத்தாளராக மாறினார். அனைவருக்கும் உத்வேகமூட்டும் பேச்சாளராக – ட்ரெயினராக மாறினார். அவரது பழைய நிறுவனமே அவரை மற்றவருக்குப் பயிற்சி தர நியமித்தது.

அனைவருக்குமே தன்னைப் பற்றிய ஒரு சந்தேகம் எப்போதுமே எழுவது இயல்பு. உடனே அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து எதில் எதிலெல்லாம் தன்னை விட மற்றவர் உயர் நிலையில் இருக்கிறார்கள் என்று எண்ணி மனச்சோர்வு அடைவது வழக்கம்.  பருமனாக இருக்கிறோம், முகம் அழகாக இல்லை, பேச்சு சரளமாக வரவில்லை, இப்படி தன் உடலைப் பற்றி ஆயிரம் மோசமான எண்ணங்கள்! இந்த நிலையை உதறித் தள்ளி விட்டு ‘பாடி பாஸிடிவிடி’ (Body Positivity)  என்ற ‘எனது உடலும் சூப்பர் தான்’ என்ற உடன் மறை எண்ணத்தைக் கொள்ள வேண்டும். இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு! ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் ஒரு விதத்தில் அழகு தான்!! இதற்காக நாம் ஏன் சோர்வு அடைய வேண்டும்?! 

எப்போது இந்த பாடி பாஸிடிவிடி உணர்வு நமக்குத் தோன்றி விட்டதோ அப்போதே நமது வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் ஒரு அடி எடுத்து வைத்து விட்டோம் என்பது உண்மை.

மனதை ஒரு நிலைப் படுத்தி யோகா பயிற்சி செய்யலாம்; அப்போது நம்மைப் பற்றிய நல்ல உணர்வு விதைகளை விதைக்கலாம். அது உடனே பயன் அளிக்க ஆரம்பிக்கும்.

ஆரோக்கியத்திற்கும் அதுவே தான் முதல் படி.
உபநிடதம் கூறுவது ஸத்தியமே! மன ஏவ மனுஷ்யானாம்!
மனமே தான் மனிதனை அமைக்கிறது!

மனமது செம்மையானால் மார்க்கமும் செம்மையாகும் என்பது முதுமொழி அல்லவா!


tags- ஆரோக்கியம் பெற , அருமையான வழி, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: