WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,463
Date uploaded in London – – 19 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 19-ஆ ம் தேதி 2021 ஆம் ஆண்டு
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
xxxxx
காணிக்கை நகைகளை உருக்க விதித்த தடை உத்தரவு மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிப்பு
கோவில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்ற உத்தரவை, மேலும் ஆறு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்பாக, அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்த நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் டிபாசிட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நகைகளை பாதுகாக்கும்படி, அறங்காவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தலாம். நகைகளை உருக்கும்படி உத்தரவிட முடியாது.
தமிழகத்தில், ஏராளமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஊழியர்கள், தக்காராக பணியாற்றுகின்றனர். அவர்களால் கொள்கை முடிவு எடுக்க முடியாது. எனவே, அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். நகைகளை உருக்குவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ ‘காணிக்கை நகைகள் மற்றும் இதர பொருட்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளலாம்.ஆனால், அறங்காவலர்கள் இன்றி, நகைகளை உருக்குவது தொடர்பான முடிவை எடுக்கக் கூடாது’ என உத்தரவிட்டது.
இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, நகைககள் கணக்கெடுப்பு பணி நடப்பதாகவும், அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்த முதல் பெஞ்ச், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீட்டிப்பதாகவும் தெரிவித்தது. இதற்கிடையில், அர்ச்சகர்கள் நியமனத்துக்கான விதிகள் மற்றும் அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்த மனுக்களும், நேற்று முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரிக்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.
XXXX
மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ்., இயக்குகிறதா? மோகன் பாகவத் மறுப்பு
“ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறது என கூறப்படுவது உண்மையல்ல,” என, அதன் மூத்த தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
ஹிமாச்சால பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
உலக அளவில் இந்தியா வல்லரசாக இல்லாவிட்டாலும் கொரோனா தொற்றுக்கு பின், உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகின் பல நாடுகள் பின்பற்றத் துவங்கி விட்டன. அந்த நாடுகள் இந்தியாவை குரு ஸ்தானத்தில் வைத்து பார்க்கின்றன.
மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ்., தான் ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல இயக்குகிறது என சில ஊடகங்கள் சித்தரிப்பது உண்மையல்ல. ஆனால் எங்கள் ஊழியர்களில் சிலர் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
XXXX
மாரியம்மன் கோவில் சொத்துக்கள் விற்பனை: விரிவான விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சொத்துக்கள் விற்பனை தொடர்பாக, விரிவான விசாரணை நடத்த, அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், அல்லிக்குட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ‘கும்பாபிஷேகம் நடத்தவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், சொத்துக்களை பாதுகாக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் தேர்தலை நடத்தக் கோரி, திருப்பதி கவுண்டர் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அறநிலையத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதன்படி, கோவில் நிர்வாக அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார்.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
அறிக்கையை பரிசீலிக்கும்போது, அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவிலின் அசையா சொத்துக்களில் மூன்றாம் நபர்களின் குறுக்கீடு இருந்துள்ளது. 2001 மற்றும் 2007ம் ஆண்டுகளில், இரண்டு விற்பனை பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன் வாயிலாக கோவில் சொத்துக்களை விழுங்கி உள்ளனர். இந்த நிலங்களை மீட்க, அறநிலையத் துறையும், பரம்பரை அறங்காவலர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரரான ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்த பின், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட பிறகே, விபரங்கள் தெரிய வருகிறது. சட்டவிரோத செயல்தனக்கு தெரியாமல், கும்பாபிஷேகத்தை திருப்பதி கவுண்டர் நடத்தியதாக, நிர்வாக அதிகாரி தெரிவித்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.
நிர்வாக அதிகாரியின் ஒப்புதல் இன்றி, எப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை.கோவிலின் இரண்டு அசையா சொத்துக்கள் மீட்கப்படவில்லை. பத்திரப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக, நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். சொத்துக்கள் விற்பனை தொடர்பாக, உண்மையை அறிய வேண்டும்.எனவே, அறநிலையத் துறை சார்பில் விரிவான விசாரணை நடத்த வேண்டும். கோவில் மற்றும் அதன் சொத்துக்கள் தொடர்பாக நடந்த சட்டவிரோத செயல்கள், தவறுகள் குறித்து, பொறுப்பான அதிகாரியை நியமித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டு, ஜனவரி 20க்கு தள்ளி வைத்துள்ளார்.
XXXX
சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம்
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை (20ம்தேதி) நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக இன்று காலை 9 மணி முதல் கோயிலுக்குள் சாமி கும்பிட பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடராஜர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்க கோரி நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் நடந்தது. சிதம்பரம் கீழவீதியில் நடராஜர் கோயில் எதிரே உள்ள சாலையில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களும், பக்தர்களும் பங்கேற்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார். சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து குறைந்த அளவிலான பக்தர்களோடு தேரோட்டம் நடத்த வேண்டுகோள் விடுத்தார்.
தேரோட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
XXX
‘பசுமை தமிழ்நாடு’ திட்டம்: சத்குரு பாராட்டு
‘பசுமை தமிழ்நாடு’ திட்டம் கொண்டு வந்துள்ள, தமிழக அரசுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில், ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தில், அடுத்த, 10 ஆண்டுகளில், 265 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளதாவது:
காவிரி கூக்குரல் இயக்கம், பசுமை தமிழ்நாடு திட்டத்துக்கு தனது மனமார்ந்த ஆதரவை தெரிவித்து கொள்கிறது. இத்திட்டம், மண் வளத்தை மீட்டெடுப்பதற்கும், செழிப்பையும், நல்வாழ்வையும் அதிகரிப்பதற்கும் மிகவும் அவசியம். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். இவ்வாறு, சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
XXX
பசுவை பாதுகாக்க மக்கள் ‘வாள்’ வைத்துக் கொள்ளவேண்டும் – விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி
செல்போன் வாங்க லட்சக்கணக்கில் செலவு செய்யும்போது பசுக்களை பாதுகாக்க மக்கள் ஆயுதங்களையும் வாங்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் பெண் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாமியார் சரஸ்வதி கூறுகையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செல்போன்களை வாங்க மக்களிடம் பணம் இருக்கும்போது, அவர்கள் பசுக்களை பாதுகாக்க ஆயுதங்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இது தங்கள் தெய்வீக தாயை பசு வதை செய்வதில் இருந்து மக்கள் தடுப்பதை உறுதி செய்யும். பசுவை பாதுகாக்க மக்கள் வாள் ஆயுதத்தை வைத்துக்கொள்ளவேண்டும்’ என்றார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் பெண் நிர்வாகியான சாமியார் சரஸ்வதி டிசம்பர் 14, பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய சரஸ்வதி, பசுவை பாதுகாக்க மக்கள் ஆயுதத்தை வைத்துக்கொள்ளவேண்டும்’ என்றார்.
XXX
பழநியை புனித நகராக அறிவிக்க வேண்டும்: சிரவை ஆதீனம்
பழநியை புனிதத் திருநகராக அறிவித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது:புகழ்பெற்ற புனிதத் தலம் காசி. அங்குள்ள ஆலயம் சிறியதாக இருந்தது. பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் அக்கோவில் 5 லட்சம் சதுர அடிக்கும் மேலாக விரிவுப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் கூடும் அளவுக்கு ஏராள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் தமிழகத்தில் முக்கியக் கோவில்களை விரிவுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக பழநி கோவிலை விரிவுப்படுத்த வேண்டும். லட்சக் கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் ஆன்மிக பூமி அது. புனித நகரான காசியில் மது, இறைச்சி விற்பனைக் கடைகள் இல்லை; அதுபோல் பழநியைச் சுற்றிலும் குறிப்பிட்ட தொலைவுக்கு மது, இறைச்சிக் கடைகள் இயங்க தடை விதிக்க வேண்டும்.
புனிதத் தலமாக அறிவித்து, கழிப்பிடம், நீராடல் வசதிகளை அதிகரிக்க வேண்டும். திருப்பதியில் செயல்படுவது போல் ஏராளமான போக்குவரத்து வசதிகள், ஆன்மிக சுற்றாத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
xxxx
ஹிந்துக்களுக்கு தனி மயானம்; பிரிட்டன் அரசு அனுமதி
பிரிட்டனில் ஹிந்துக்களுக்கான தனி மயானம் அமைக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
பிரிட்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பக்கிங்ஹாம்ஷையரில் நவீன வசதிகளுடன் ஹிந்துக்களுக்கான ஒரு தனிப்பட்ட மயானம் அமைக்க முடிவானது. அனுாபம் மிஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அருகே மயானம் அமைக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியை பிரிட்டனின் திட்டமிடல் துறை வழங்கி உள்ளது. இதையடுத்து காத்திருப்பு அறை, தகன மண்டபம், சடங்குகள் அறை, குளியல் அறை, விழா மண்டபம் உள்ளிட்டவற்றுடன் ஹிந்துக்களுக்கான தனி மாயனம் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து அனுாபம் தொண்டு நிறுவன ஆன்மிக தலைவர் பரம் புயா சாஹேப்ஜி கூறியதாவது: ஹிந்து சம்பிரதாயங்களின்படி இறுதி சடங்குகள் செய்வது ஆன்மாவிற்கு விடுதலை அளிப்பதற்கான அடிப்படை விஷயம். இதனால் இறந்தவர் குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்கிறது.
டென்ஹாமில் உள்ள எங்கள் மைதானத்தில் இந்த சேவையை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க உள்ளோம். மயானம் அமைக்கும் பணிகளில் அனைத்து ஹிந்து அமைப்பினரும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
xxxx
மத மாற்றத்தால் சமூகத்தில் மோதல்: ஆர்.எஸ்.எஸ் கருத்து
‘மத மாற்றத்தால் சமூகத்தில் பிளவு உண்டாகி மோதல்கள் ஏற்படுகின்றன’ என, ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியதாவது: மத மாற்றம் செய்வது சட்ட விரோதமானது. இதனால் சமூகத்துக்கு சீர்கேடு ஏற்படும். மத மாற்றத்தால் சமூகத்தில் பிளவு ஏற்பட்டு மோதல்கள் உருவாகின்றன. இதனால் நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
மத மாற்றத்தை தடுப்பது நாட்டின் பாதுகாப்புக்கு நல்லது. கர்நாடகாவில் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாடு முழுதும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு இந்திரேஷ் குமார் கூறினார்.
xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
நன்றி, வணக்கம்
tags- Tamilhindunews191221