WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,476
Date uploaded in London – – 23 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மிருதங்க இசை மரபு : ஒரு அருமையான நூல்!
ச.நாகராஜன்
பாரதம் கண்ட 64 கலைகளில் இசைக் கலை மிக முக்கியமானது. அந்தக் கலையிலும் வாத்தியங்கள் அற்புதமான ஒரு இடத்தைப் பெற்றிருப்பவை.
இந்திய மக்களின் வாழ்க்கையில் இசையும் வாத்தியங்களும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் காலம் காலமாக முழுவதுமாகக் கலந்திருப்பதை நமது இதிஹாஸங்களான இராமாயணம், மஹாபாரதத்தில் காணலாம். வேதங்கள் இசை மஹிமை பற்றியும் ஒலியின் சக்தி பற்றியும் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன; ஒலி பற்றிய பல அபூர்வ இரகசியங்களை அவை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் நமக்கு ஒரு அபூர்வமான நூலைப் படைத்து அளித்திருக்கிறார் முனைவர் மதுரை க.தியாகராஜன்.
பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பிள்ளையவ்ர்களைப் பற்றித் தெரிந்திராதவர்களே இல்லை. அவரது பிரதம சீடரான காலஞ்சென்ற மிருதங்க வித்வான் திரு திருவேங்கடத்தையா அவர்களின் கொள்ளுப் பேரன் இவர். பாரம்பரிய சங்கீதம் இவர் ரத்தத்தில் ஊறியதற்கு இந்த ஒரு காரணம் போதாதா என்ன?
மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிருதங்க இணைப் பேராசிரியராக இப்போது பணியாற்றி வரும் இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இசை சம்பந்தமான மிருதங்க இசை மரபு என்ற அரிய ஆய்வை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தனது ஆய்வின் அடிப்படையில் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
அதில் ஒரு புத்தகம் : மிருதங்க இசை மரபு.
104 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகதம் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது.
முன்னுரை, மிருதங்கம் தோற்றம், வளர்ச்சி, மிருதங்கம் தயாரிப்பு மரபு, மிருதங்கம் பாட மரபு, மிருதங்கம் வாசிப்பு மரபு, முடிவுரை ஆகிய தலைப்புகளில் ஏராளமான சுவையான செய்திகளைப் படித்து வியக்கிறோம். பிரமிக்கிறோம்.
முன்னுரையில் நூலாசிரியர் தரும் சுவையான தகவல்களில் சில :
இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் வழக்கத்தில் இருந்து வந்துள்ளன. 300க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் தமிழகத்தில் இருந்தன. சர்.சி.வி.ராமன் மிருதங்க வாத்தியத்தின் மீது அபார பற்று கொண்டவர். அதன் ஒலி பற்றிய ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.
தினமும் காலையில் எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் ஒன்றாக மிருதங்கத்தை நமது சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன.
அடுத்து மிருதங்கம் அதன் தோற்றம் வளர்ச்சியை விவரிக்கும் அத்தியாயத்தில் சிவபிரானிடமிருந்து எப்படி வாத்தியங்கள் தோன்றின என்ற வரலாறு நமக்குக் கிடைக்கிறது. மஹாபாரதத்தில் அர்ஜுனன் மிருதங்கம் வாசித்தது, சங்க இலக்கியத்தில் வாத்தியங்கள் பற்றிய ஏராளமான குறிப்புகள், கல்வெட்டு தரும் சான்றுகள் என பிரமிக்க வைக்கும் தகவல்கள் ஓரிழையாகத் தரப்படுகிறது.
மிருதங்க வாத்தியம் மரபு வழுவாது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்கிறோம். இந்தத் தயாரிப்பாளர்கள் எந்த ஊர்களில் இருக்கிறார்கள் என்பதும் தரப்படுகிறது.
தாளத்தினைப் போட்டு பாடல்களைப் பாடும் போது அவற்றிற்குத் துணையாகப் பலவகைத் தாள வாத்தியங்கள் பழங்காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. மிருதங்கத்தில் வாசிக்கப்படும் எழுத்துக்களுக்கான தோற்றமும் வளர்ச்சியும், மிருதங்கத்திற்குரிய சொற்கள், கால அளவு மிக நுட்பமாக இங்கு விளக்கப்பட்டுள்ளன.
சில சொற்களை மிருதங்கத்தின் இரு புறங்களிலும் வாசிப்பதனால் தான் நாதம் பிறக்கிறது.
நாதம் நாதம் நாதம்
நாதத்தேயோர் நலிவுண்டாயின்
சேதம் சேதம் சேதம்
தாளம் தாளம் தாளம்
தாளத்திற்கோர் தடையுண்டாயின்
கூளம் கூளம் கூளம்
என்ற மஹாகவி பாரதியாரின் கவிதா சொற்கள் எவ்வளவு உண்மையானவை என்பதை இந்த நூலாசிரியர் திரு க.தியாகராஜன் தக்க தகவல்களைத் தந்து நிரூபிக்கும் போது இவ்வளவு நுட்பமான நாம் அறிய வேண்டிய ஆழ்ந்த விஷயங்கள் உள்ளனவே என்ற வியப்பு மேலிடுகிறது. சங்கீதப் பயிற்சி கொள்வோர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
மிருதங்க சம்பந்தமான தற்போதைய பாட திட்டத்தையும் 1966இல் தோற்றுவிக்கப்பட்டு மிக அருமையாக நடந்து வரும் மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி பற்றிய விவரங்களையும் இந்த அத்தியாயம் கூடவே தருகிறது.
அடுத்து மிருதங்கம் வாசிப்பு மரபை விவரிக்கும் ஆசிரியர் மிருதங்கம் பற்றி பல மிருதங்க நிபுணர்கள் கூறிய கருத்துக்களை அழகாகத் தொகுத்துத் தருகிறார்.
வயலினும் மிருதங்கமும் இல்லாத இசைக் கச்சேரிகளே தற்போது இல்லை. மிருதங்க வாசிப்பில் பாணி, தனித்தன்மைகள் (Different Styles) வேறுபடுகின்றன.
முடிவுரையில் பிரபஞ்சம் உள்ள வரை இயக்கங்கள் உண்டு. இயக்கம் உள்ளவரை லயம் உண்டு. லயம் உள்ளவரை ஜீவன் உண்டு. உயிர் உண்டு. லயத்திற்கே உயிர் கொடுக்கும், உருவைக் கொடுக்கும் மிருதங்க இசை மரபானது இசைத்துறைக்கு மட்டுமல்லாது உலகம் மேம்படவே வழிகளைத் தரும் என்று கூறி நூலை முடிக்கிறார் தியாகராஜன்.
அறிவியல் ரீதியாகத் தரப்பட்டுள்ள சான்றுகளைப் படித்தபின்னர் ஆம் என்று நாமும் இந்தக் கூற்றை ஆமோதிக்கிறோம்.
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் கூறி இருக்கிறாரே, “ஸொகஸுகா மிருதங்க தாளமு” என்பதில் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தம் உள்ளது என்பதை நூலைப் படிப்போர் நிச்சயம் உணர்வர்.
இந்த நூலுக்குத் தமிழக அரசு தக்க விருதைத் தர வேண்டும்; மத்திய அரசு தக்கபடி இவரை கௌரவிக்க வேண்டும் என்ற எண்ணம் இதைப் படிப்போர் மனதில் எழுவது இயல்பே.
இவர் ஆய்வுக்கு தக்க முறையில் ஊக்கம் அளித்த ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலய முதல்வர் திருமதி டாக்டர் லதா வர்மா பாராட்டுக்கு உரியவர்.
இந்த நூல் அனைத்து நூலகங்களையும் சங்கீதத்தில் ஆர்வமுள்ளோர் இல்லங்களையும் அலங்கரித்து, ஏராளமான இசை விற்பன்னர்களை துறை சார்ந்த அறிவுடன் உருவாக்கும் என்று நம்பலாம்.
மொத்தத்தில் நல்ல ஒரு இசைக் கச்சேரியைத் தகுந்த மிருதங்க வாத்தியத்துடன் கேட்டு அனுபவித்த உணர்வை இந்த நூல் தருகிறது.
முனைவர் மதுரை க. தியாகராஜன் அவர்களுக்கு நமது பாராட்டுகள்!
நூல் வெளியீடு : திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை, விஸ்வநாத புரம், மதுரை 625014
tags-மிருதங்க இசை மரபு, க. தியாகராஜன்,
Venugopal Krishnamoorthi
/ December 24, 2021இந்த நூலை எங்கிருந்து பெறலாம் ? விவரம் அளிக்க இயலுமா? நமஸ்காரம்