WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,480
Date uploaded in London – – 24 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இசையில் வித்தகக் குரலும், விரலும் : சுவையான நூல் தரும் செய்திகள்!
ச.நாகராஜன்
‘சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே’ என்ற அருமையான பாடல் நாம் அனைவரும் கேட்ட ஒரு பாடல்.
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் என்றார் மஹாகவி பாரதியார்.
இந்த இசையை முறைப்படி பயின்றவர்கள் மற்றவர்களுக்கு இசை வழியாகத் தரும் ஆன்மீக இன்பம் சொல்லுக்கு அப்பாற்பட்டது. இசை வாத்தியங்களோ எனில் இசை கேட்போருக்கு ஒரு புதிய உயரத்தைக் காட்டும்.
இத்தகைய இசைக் கலையில் மிருதங்க வித்வானாகப் பரிமளிப்பதோடு, இசை நுணுக்கங்களை ஆய்ந்து வரும் ஆய்வாளராகவும் இசைப் பேராசிரியராகவும் பல நூல்களைப் படைக்கும் எழுத்தாளராகவும் பன்முகம் கொண்டிருக்கிறார் முனைவர் மதுரை க.தியாகராஜன்.
பாரம்பரியமான இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர். கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அவர்களின் பிரதம சீடரான காலஞ்சென்ற மிருதங்க வித்வான் திரு திருவேங்கடத்தையா அவர்களின் கொள்ளுப் பேரன் இவர்.
மதுரை ஸ்ரீ ஸத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மிருதங்க இணைப் பேராசிரியராக இப்போது பணியாற்றி வரும் இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் எழுதியுள்ள புத்தகம் இசையில் வித்தகக் குரலும், விரலும் என்ற இந்தப் புத்தகம்.
217 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் மூன்று பாகங்களைக் கொண்டுள்ளது. இசைவானின் நட்சத்திரங்கள் என்ற முதல் பாகத்தில் தியாகபிரம்மமும் பக்தர் கண்ணனும், சங்கீத பிதாமகர் செம்மங்குடி R. சீனிவாசய்யர், பதத்திற்கு T.பிருந்தா, ஸங்கீதத்திற்கு பாடுபட்டம்மாள், சங்கீத வாணி M.L. வசந்தகுமாரி,வித்துக்கலை வித்வான்களாக்கிய வித்யாலயம் என்ற ஆறு அத்தியாயங்களில் அபூர்வமான இசைக்கலைஞர்களின் அருமையையும் பெருமையையும் அறிகிறோம்.
அடுத்து ராஜவாத்யம் மிருதங்கம் என்ற பகுதியில் மிருதங்கத்தின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு முறைகள், மிருதங்கம் ஒரு சிறந்த பக்க வாத்தியம், கொன்னக்கோல் மரபு, மிருதங்க வித்வான்கள் கையாண்ட புதிய பாணிகள், மிருதங்கத்தில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் புதிய உத்திகள் என்ற ஐந்து அத்தியாயங்களைக் காணலாம்.
அடுத்து இசையும் லயமும் என்ற பகுதியில் பண்களும் தாளமும், கல்வெட்டுக்களில் இசை, நாவுக்கரசர் காட்டும் முழவு, ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்களில் தாளக்கூறுகள், சிதம்பர க்ஷேத்திரத்தின் இசை உருக்கள், இசையில் கணிதம், உடலின் வடிவமே இசையின் வடிவம், இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசையில் ‘இணைய பஞ்ச தஸ தொழில் நுட்ப மார்க்கங்கள் ஆகிய ஒன்பது அத்தியாயங்கள் பல்வேறு புதிய விவரங்களைத் தருகிறது.
56 வயதான இந்த நூலாசிரியருக்கு தியாகராஜன் என்ற பெயர் வந்ததே சங்கீதத் தொடர்பினால் தான் என்பதை முதல் அத்தியாயமே தருகிறது. இவரது தந்தையார் திரு தே. கண்ணன் தியாகராஜ ஸ்வாமிகளின் பக்தர். அவரைப் பற்றிய பல உருக்கமான செய்திகளைக் கண்டு உருகுகிறோம். தியாகபிரம்மத்தின் மேல் கொண்ட பக்தியினால் தான் இவருக்கு தியாகராஜலு என்ற பெயர் இவர் தந்தையாரால் இடப்பட்டது!
சங்கீத பிதாமகர் என்று அழைக்கப்பட்ட செம்மங்குடி சீனிவாசையர், 40 ஆண்டுகள் இணைபிரியாது கச்சேரி செய்த வீணை தனம்மாளின் பேத்திகளான ப்ருந்தா- முக்தா சகோதரிகளில் ப்ருந்தா – ஆகியோரைப் பற்றிய சுவையான வரலாற்றைத் தரும் நூலாசிரியர் D.K. பட்டம்மாளின் இசை வாழ்க்கையைப் பற்றியும் சுவையான விவரங்களுடன் விவரிக்கிறார்.
சின்னஞ்சிறு கிளியே – பாரதியாரின் பாடல். ராஜா தேசிங்கு படத்தில் இடம் பெறுகிறது இந்த பாரதியின் பாட்டு. மீண்ட சொர்க்கம் படத்தில் பாவம் ராகம் தாளம் சேர்ந்த பரதக் கலை என்ற அருமையான பாடல். இதைப் படித்தவுடன்
உடனே நமது நினைவுக்கு வருபவர் சங்கீதவாணி M.L. வசந்தகுமாரி. அவரது வாழ்க்கைச் சிறப்புகள் பற்றி ஒரு அத்தியாயம் தருகிறது.
அடுத்து 1966ஆம் ஆண்டு மதுரையில் துவங்கப்பட்ட ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயத்தின் தோற்றம், வளர்ச்சி, அது உருவாக்கிய இசைக் கலைஞர்கள் பற்றிய அரிய விவரங்களை முதல் பாகத்தின் இறுதி அத்தியாயம் விவரிக்கிறது.
ராஜவாத்யம் மிருதங்கம் என்ற இரண்டாம் பாகத்தில் அரிய வாத்தியமான மிருதங்கம் பற்றிய ஏராளமான நுட்பமான தகவல்களைப் பெற முடிகிறது.
ராம லட்சுமணர் போரில் வெற்றி பெற்றவுடன் மிருதங்கம் உள்ளிட்ட தாளங்களை வாசித்து வெற்றியைக் கொண்டாடினர் என்கிறது இராமாயணம். ரண பண்டிதனான இந்திரஜித் அனுமனுடன் போரிட வருவதை சுந்தர காண்டம் 48வது அத்தியாயம் விவரிக்கிறது. அதில் 30ஆம் ஸ்லோகம் ‘ததஸ்து தத் ஸ்யந்தந நி:ஸ்வநம் ச ம்ருதங்க பேரி படஹ ஸ்வநம் ச’ என்று அநுமன் இந்திரஜித்தின் தேர் ஓசையையும் மிருதங்கம்,பேரி, படஹ வாத்தியங்களின் கோஷத்தையும் நாணிட்டு இழக்கப்படுகிற வில்லின் கோஷத்தையும் செவியுற்று இன்னும் மேலே துள்ளிப் பாய்ந்தார்’ என்று விவரிக்கிறது. இப்படி பாரத இதிஹாஸம் மற்றும் இலக்கியங்கள் முழுவதும் மிருதங்கத்தைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். ஆக மிருதங்கத்தின் அருமை பெருமைகளை அழகுற இந்தப் பாகம் தருகிறது.
ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் பாடல்களைக் கேட்காதோர் இருக்க முடியாது. அவரது பாடல்களில் சொற்கட்டு, சொற்கட்டு சுர இயல், மத்திமகாலம், விரைவு நடை, சுவை, அபிநயக்கூறு ஆகிய தாளக்கூறுகள் அனைத்தும் அமைந்துள்ளன. அவரைப் பற்றிய சுவையான செய்திகள் மூன்றாம் பாகக் கட்டுரை ஒன்றில் தரப்படுகிறது.
சிதம்பரத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்ட பதிகங்களும், பாடல்களும் ஏராளம் ஏராளம். அவை தரும் சுவையான செய்திகளும் ஏராளம் ஏராளம். அவற்றைத் தொகுத்துத் தருகிறது சிதம்பர க்ஷேத்திரத்தின் இசை உருக்கள் என்ற அத்தியாயம்.
அறிவியல் ரீதியாக இசையை ஆராய்கிறது இசையில் கணிதம், உடலின் வடிவமே இசை வடிவம் ஆகிய அத்தியாயங்கள்.
இசையை அனுபவிப்பது என்பது ஒன்று; இசை பற்றிய தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது வேறொன்று. ஆனால் இசை பற்றிய நுட்பங்களையும் தகவல்களையும் அறிபவர்கள் இசையின் மேன்மையை இன்னும் நன்றாக அறிந்து அதை மேம்பட ரசித்து மேம்படுவர் என்பது உண்மையே.
ஆகவே இந்த நூல் இசைக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாது, இசையை நுகர்வோருக்கும் இன்றியமையாத, படிக்க வேண்டிய ஒரு நூலாக அமைகிறது.
நூலுக்கு ‘இசைத்தமிழ் கலைச்சொல் அகராதியின் தொகுப்பு ஆசிரியர்’, கலைமாமணி, முனைவர் அரிமளம் பத்மநாபன் தகுந்த ஒரு வாழ்த்துரையை அளித்துள்ளார்.
இந்த நூலாசிரியரை தமிழக அரசும் மத்திய அரசும் தகுந்த முறையில் கௌரவிக்கும் என்று நம்பலாம். சங்கீத ஆர்வலர்கள் மறக்காமல் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகமாக இது அமைகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் நூலகங்களிலும் இடம் பெற வேண்டிய ஒரு நூல் இது.
பன்முகப் பரிமாணத்தோடு இலங்கும் முனைவர் மதுரை க. தியாகராஜன் அவர்களுக்கு நமது பாராட்டுகள்!
நூல் வெளியீடு : திஸ்ரத்வனி இசை அறக்கட்டளை, விஸ்வநாத புரம், மதுரை 625014
tags- இசையில் வித்தகக் குரலும், விரலும், திஸ்ரத்வனி, இசை அறக்கட்டளை, க. தியாகராஜன்