திருத்தணி – ஆலயம் அறிவோம்! (Post No.10,492)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,492

Date uploaded in London – – 27 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 26-12-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருத்தணி
நினைத்த தெத்தனையில் தவறாமல்
நினைத்த புத்திதனைப் பிரியாமல்
கனத்த தத்துவமுற் றழியாமல்
கதித்த நித்திய சித்தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக்கெளியோனே
மதித்த முத்தமிழிற் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்தணிப் பதியில் பெருமாளே
அருணகிரிநாதர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாக அமையும் சிறப்புத் தலமான திருத்தணி திருத்தலம் ஆகும். தமிழகத்தில், சென்னைக்கு மேற்கே 88 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

மூலவர் : ஸ்ரீ சுப்ரமண்யர்
தனி சந்நிதி : தெய்வானை தனி சந்நிதி : வள்ளி
தல விருக்ஷம் : மகுட மரம்

இந்தத் தலம் முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட தலமாகும். வள்ளியம்மையைக் கரம் பிடிக்க வேடர்களுடன் சிறு போர் நடத்தி சினம் தணிந்து முருகன் ஓய்வு பெற்ற தலம் இது என்பதால் இது தணிகை ஆகும். இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. தேவர்களுக்கு ஓயாத தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சூரபன்மனை வதம் செய்த முருகப்பிரான் தன் கோபம் தணிந்து அமர்ந்த தலம் இது. ஆகவே தணிகை என்ற பெயரைப் பெற்றுள்ளது. தேவர்களின் பயம் நீங்கப் பெற்ற இந்தத் தலத்தில் காம வெகுளி பகை தணியும். பக்தர்களின் துன்பம், கவலை உள்ளிட்டவை தணியும்.

முருகன் சினம் தீர்ந்து அருள் பாலிக்கும் திருத்தலம் என்பதால் இந்த ஒரு முருகன் கோவிலில் மட்டும் சூர சம்ஹாரத் திருவிழா நடை பெறுவதில்லை.

இந்தத் தலத்தில் ஆண்டு தோறும் நடைபெரும் திருத்தணிப் படித் திருவிழா சிறப்பு மிக்க ஒன்றாக விளங்குகிறது. 365 நாட்களைக் குறிக்கும் விதத்தில் இங்கு 365 படிகள் உள்ளன. பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்புகழை ஓதி படி ஏறி முருகனைத் துதிக்கின்றனர். வள்ளிமலை சுவாமிகளால் இந்த திருத்தணித் திருப்படி திருவிழா 1917ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மற்றும் 1918 ஜனவரி முதல் தேதியன்று துவங்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை பெருகி இப்போது வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

அருணகிரிநாதர் இங்கு முருகனை வழிபட்டு 64 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அவற்றுள், ‘நிலையாத சமுத்திரமான’ என்று தொடங்கும் திருப்புகழில் ‘பலகாலும் உனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படிமீது துதித்துடன் வாழ அருள் வேளே’ என்று கூறுவது குறிப்பிடத் தகுந்தது.
கர்நாடக சங்கீத மும்மணிகளுள் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரும் இங்கு வந்து பாடி முருகனின் அருளைப் பெற்றுள்ளார்.

கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் அமைந்துள்ள சிறிய குன்று இது. இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே வெண்மை நிறமாக உள்ள மலை பச்சரிசி மலை என்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலை அடிவாரத்தில் புகழ் பெற்ற குமார தீர்த்தத் திருக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குன்றில் முருகன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரமும் நான்கு வளாகங்களும் உள்ளன.

இத்தலத்தில் முருகனின் வலது கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ர வேல் அமைந்துள்ளது. இது, இடி போன்ற ஒலி எழுப்பும் சூலக் கருவி. இடக்கையைத் தொடையில் வைத்து ஞானம் பெற்ற கோலத்தில் முருகன் இங்கு காட்சி அளிக்கிறார். அவர் கையில் வேல் இல்லை. அலங்காரத்தின் போது மட்டும் சேவலும் வேலும் வைக்கப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள் அனைத்து சந்நிதி தரிசனங்களையும் முடித்து விட்டு கடைசியாக இங்குள்ள ஆபத்சகாய விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

இங்குள்ள இன்னொரு சிறப்பு, விஷ்ணு ஆலயங்களில் தலையில் சடாரி வைக்கப்படுவது போல், இங்கு முருகனின் திருப்பாதச் சின்னம் பக்தர்களின் தலையில் வைக்கப்பட்டு முருகனின் ஆசி அளிக்கப்படுகிறது.
மும்மூர்த்திகள், நந்திதேவர், வாசுகி உள்ளிட்ட ஏராளமானோர் முருகனை வழிபட்ட தலம் இது.

இங்கு முருகப்பிரான் பிரணவத்தின் உட்பொருளை ஈசனுக்கு உணர்த்த, அவர் மகிழ்ந்து, வீ ர அட்டகாசமாகச் சிரித்தார். அதனால் அவருக்கு ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் என்ற பெயர் வந்தது. அவரது திருக்கோவில் திருத்தணிக்குக் கிழக்கே நந்தியாற்றின் வட கரையில் அமைந்துள்ளது.

இந்திரன் இந்தத் தலத்திற்கு வந்து சுனை ஒன்று அமைத்து முருகனை வழிபட்டான். அந்த இந்திர நீலச் சுனையில் நீலோற்பலக் கொடியை வளர்த்து அந்த மலர்களால் மூன்று வேளைகளிலும் முருகனை பூஜித்து சங்க நிதி பதும நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளையும் பெற்றான். ஆகவே முருகனுக்கு இந்திர நீலச் சிலம்பினன் என்ற பெயர் ஏற்பட்டது. அபிஷேகத்திற்கு இந்த சுனை தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது.

வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள் இங்கு மலையின் தென்புறத்தில் ஏழு சுனைகளை அமைத்து முருகனை வழிபட்டனர். அந்த சுனைகளும் கன்னியர் கோவிலும் இப்பகுதியில் உள்ளன. இது இப்போது ஏழுசுனை கன்னியர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் முருகப் பிரான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

நீறது இட்டு நினைப்பவர் புத்தியில்
நேசமெத்த அளித்தருள் சற்குரு
நீல முற்ற திருத்தணி வெற்புறை பெருமாளே!
என்ற அருணகிரிநாதரின் வாக்கால் முருகனை நாளும் துதிப்போமாக

நன்றி, வணக்கம்!

             ***
tags- திருத்தணி
Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: