திருலோகம் கண்ட மஹாகவி! (Post No.10,491)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,491
Date uploaded in London – – 27 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருலோகம் கண்ட மஹாகவி!
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரை பல்வேறு அறிஞர்கள் நேரில் கண்டு வியந்து அவரது கவித்வத்தைப் போற்றிப் பாராட்டியுள்ளனர். அது போலவே அவரை நேரில் காணவிட்டாலும் கூட அவரின் கவிதைகளில் அவரை தரிசனம் செய்து பிரமித்தவர்களும் ஆயிரக்கணக்கில் உண்டு.

ஆனால் மஹாகவியை நேரில் காணாவிட்டாலும் கூட அவரைத் தனது தந்தையாகப் பாவித்து மானசீக புத்திரனாக மாறி அவருக்கு ஆண்டு தோறும் திதி கொடுத்த ஒரு “அற்புத மகனைப்” பற்றி உலகம் அறியுமா?
உலகிலேயே இப்படி ஒரே ஒரு அபூர்வ மகனாகத் திகழ்ந்தவர் திருலோக சீதாராம் அவர்கள்.

அவர் கண்ட மஹாகவி அவருக்குத் தந்தையாய் தாயாய், ஆசானாய் ஏன் எல்லாமாய் இருந்தார்.

மஹாகவி பாரதியார் பிறந்தது 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி. அவர் மறைந்தது 1921 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி.
திருலோக சீதாராம் பிறந்தது 1917ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி. அவர் மறைந்தது 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி.


அதாவது மஹாகவி மறைந்த போது அவர் நான்கு வயதுக் குழந்தை!

இந்த நான்கு வயதுக் குழந்தை மஹாகவியைப் பார்க்காவிட்டாலும் கூட
அவனது கவிதைகள் மூலம் அவனையும் அவன் உளத்தையும் நன்கு தரிசித்து விட்டது!

இளம் பருவத்திலேயே கவிதா ஆர்வம் கொண்டு கவிதா ஆவேசம் பெற்ற அவர் தமிழில் தன்னைத் தோய்த்துக் கொண்டார்.
அவரது தாய் மொழி தெலுங்கு என்றாலும் கூட தமிழின் அமுதச் சுவையைக் கண்டு அதில் மூழ்கிப் போனார். அமிர்தத்தின் ஒரு சொட்டு நம் நாக்கில் பட்டாலும் கூட சாவே வராது. அவரோ தமிழ் அமிர்தத்தில் முழுகியே விட்டார் என்றால் அவருக்கு மறைவு என்பது ஏது?

அத்துடன் மட்டுமல்லாமல் கவிதையை ரசிக்க (தாய்)மொழி ஒரு தடை இல்லை என்பதைத் தான் வாழ்ந்து காண்பித்து நிரூபித்தும் விட்டார் அவர்.

‘நவசித்தன் பாரதி என்ற நற்பொருளை நானே பயின்று கொண்டேன்’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்த அவர் அந்த பாரதி பல்கலைக் கழகத்தில், கல்வியில் உயர் பட்டம் பெற்று அதற்கும் மேலான ஆய்வுக்குரிய டாக்டர் பட்டத்தையும் தானே பெற்றுக் கொண்டார்.

மக்களிடையே அவர் பாரதியை எடுத்துச் சென்ற போது மக்கள் வியந்தனர்.
பாரதியாரின் கவிதைகளைத் தனது பாணியில் நீண்ட நேரம் விளக்கி உரை ஆற்றும் அவர் பாணியில் சொக்கிப் போனவர்கள் ஏராளம்.
பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதி நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்ற தகவலைக் கேட்டதும் தன் பணியை நிறுத்தி நேராக செல்லம்மாள் பாரதியைப் பராமரிக்கும் பணியை விரும்பி மேற்கொண்டார்.

அவரது மடியிலேயே செல்லம்மாள் பாரதி தன் உயிரை விட்டார் என்பது மனதை உருக வைக்கும் ஒரு செய்தி.
பாரதியைப் படித்துப் படித்து அவரது வசன கவிதை நடை போலவே தனது நடையையும் அவர் பெற்று விட்டாரோ என்று எண்ணத் தோன்றும் அவரது கட்டுரைகளைப் படிக்கும் போது!
எடுத்துக் காட்டாக அவரது எழுத்திலிருந்து ஒரு அருமையான பகுதியை மட்டும் இங்கு மேற்கோளாகப் பார்க்கலாம்.

‘இலக்கியப் படகு’ என்ற அவரது நூலில் ‘கடமை உணர்ச்சி’ என்ற கட்டுரையில் வருவது இந்தப் பகுதி.
“சங்கற்பம் இல்லாமலேயே ஒருவன் வாழ்வாங்கு வாழும் இயல்புடையவனாகி விடுவது தான் ஒவ்வொருவனுக்கும் உலகத்தில் ஏற்பட்டுள்ள உண்மையான கடமை. அப்படி வாழ்வது தான் பலனை எதிர்பாராமல் செய்கின்ற கரும யோகம்.

பாரதி இதற்கு அருமையானதொரு விளக்கம் கொடுக்கிறார்.

சூரியன் உதிப்பதால் உலகத்தில் இருள் விலகுகிறது. ஒளி வருகிறது, உஷ்ணம் தோன்றுகிறது. மழை பொழிகிறது. உயிர்க்கு அமுதாகிறது. உயிர்கள் வாழ்கின்றன. உலகுக்கு இவ்வளவு நலன்களை இடையறாமற் செய்து கொண்டிருந்த போதிலும் தான் செய்யும் நன்மையும், அந்த நன்மையை அடைபவர் யார் யார் என்ற தகவலும், இதொன்றும் சூரியனுக்குத் தெரியாது. அவன் தருகின்ற ஒளியின் மேன்மையைப் பாராட்டி அவனைப் புகழ்ந்து அவனுக்கு வாழ்த்து மடல் வாசித்தளிப்பதாக இருந்தால் இதெல்லாம் அவனுக்கு விளங்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.

முதலில் அவனிடம் உள்ள, வேறு எவரிடமும் இல்லாத பேரொளியே அவனுக்குத் தெரியாது.

இருள் என்பது இதுவென்று அவனுக்குத் தெரிந்திருந்தாலல்லவோ, ஒளியென்பதொன்று உண்டு என்று அவனுக்கு விளங்கப் போகிறது. ஆயினும் அவனிடமிருந்து ஒளி வருவதும் அதனால் உலகுய்வதும் எவ்வளவு மகத்தான உண்மை. அதைப் பற்றிய அறிவு சிறிதுமின்றி – ஆனால், அதன் பயனை அனைத்துலகும் பெறத்தக்க ஓய்வற்ற இயக்கம் அவனுடையதாக அமைந்திருக்கிறது.

எவன் ஒருவன் பிறந்ததனால், வாழ்வதனால், பேசுவதால், செய்வதால் உலகமே நலன் பெறுமோ, அத்தகையவன் தனது செயலின் விளைவைப் பற்றிச் சிறிதும் எண்ணமற்றவனாக இருந்து கொண்டே பெரும் பயன் விளையக் காரணனாக இருக்கின்றானோ அவனே நிஷ்காம்ய கர்மி.

ஞாயிற்றை எண்ணி – என்றும்
நடுவு நிலைபயின்று
ஆயிரம் ஆண்டு – உலகில் – கிளியே
அழிவற்று இருப்போமடி

கடமையென்று ஒன்று நம்மை அச்சுறுத்திக் கொண்டிருப்பது போன்ற பாவனையில் நாம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருந்து கடமையாளனாக விளங்க முயல்வது வீண் தொல்லை. நம் செயல்கள் எல்லாம் கடமையல்லாது வேறில்லை என்றாகி விடுகின்ற இயல்பு வசமாவது போல மானிட வெற்றி பிறிதொன்றில்லை.
கடமையுணர்ச்சி சுமையாகும். கடமை இயல்பே இனிதாகும்”.

இப்படி அழுத்தம் திருத்தமாக அற்புதமான ஒரு கருத்தை, பாரதியில் தோய்ந்து, எளிய நடையில் இனிய தமிழில் தருபவரை “பாரதியைக் கண்டவர்” என்று தானே கூற முடியும்!

பாரதியை நினைக்கும் போதெல்லாம் அவரது பக்தர்களின் நினைவும் கூட வருவது இயல்பே.
அந்த பக்தர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் திருலோக சீதாராம்!

tags– திருலோக சீதாராம், பாரதி


Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: