தாயுமானவர்! – 1 (Post No.10,496)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,496
Date uploaded in London – – 28 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 27-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

தாயுமானவர்! – 1
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

என்றுமுள செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர்.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார்.
கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவருக்கு சிவ சிதம்பரம் என்ற அருமைக் குமரன் பிறந்தான். ஆனால் அந்தக் குமாரனை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.
தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று வருந்திய அவர் திருச்சி தாயுமானவரை வேண்ட அவர் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் வியந்தனர். ஐந்து கிரகங்கள் உச்சமாய் இருப்பதையும் அவை சுப ஹோரையில் இருப்பதையும் கண்ட அவர்கள் தேவாம்சமாகப் பிறந்த இந்தக் குழந்தை உலகை ஆளும் நரேந்திரனாக நிலவும் என்று கூறினர்.

திருச்சி தாயுமானேஸ்வரரின் அருளால் பிறந்த அந்தக் குழந்தைக்கு தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
குழந்தை அறிவில் சிறந்து விளங்கியதோடு தமிழையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின.

அரசன், தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார்.

அப்போது ஒரு நாள் அரசவையில் முக்கியமான ஆவணம் ஒன்றை அனைவருக்கும் முன்பாக, இறைவனுடன் இறை தியானத்தில் ஒன்றி இருந்த நிலையில், கசக்கித் தூக்கி எறிந்தார்.
இதைப் பார்த்துத் திடுக்கிட்ட அவையினர் இது அரசனை அவமதித்த செயலாகும் என்று கூறினர்.

ஆனால் அதே சமயத்தில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலில் அம்பாளின் ஆடையில் நெருப்புப் பிடிக்க, சிவாசாரியர்கள் அதைக் கவனிப்பதற்குள் தாயுமானவர் அங்கே நுழைந்து ஆடையைத் தன் கையால் கசக்கி நெருப்பை அணைத்தார். இதைக் கண்ணுற்ற அவர்கள் அதிசயித்து நடந்ததை மன்னரிடம் தெரிவிக்க அனைவரும் வியப்படைந்தனர். தாயுமானவரின் சக்தியையும் உணர்ந்தனர்.

ஒரு நாள் அவர் அரசனைக் காண்பதற்காக வந்தார். அப்போது அரண்மனையில் புதிய மணல் கொட்டப்பட்டிருந்தது. அதில் தாயுமானவரது காலடிச் சுவடுகள் பதிந்தன. அரசனும் இதர முக்கியஸ்தர்களும் அந்த வழியே வந்த போது அந்தக் காலடிச் சுவடுகளைக் கண்டனர். பத்ம ரேகை படிந்து காணப்பட்ட அந்தச் சுவடுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
“யார் இவ்வழியில் வந்தது?” என்று அவர்கள் கேட்க, “தாயுமானவர்” என்று பதில் வந்தது.

உடனே அவரை அழைத்து அது உண்மை தானா என்பதை அவர் காலடிகளுடன் ஒப்பிட்டு அரசன் ஐயம் தீர்ந்தான்.
சங்கப்பாட்டியியலில் கூறப்பட்ட சாமுத்திரிகா லக்ஷணங்கள் இவை:

அகவடி யுகிர்விரல் புறவடி கரடே
கழலே கணைக்கான் முழந்தாள் குறங்கே
கடிதங் கொப்பூழ் வயிறதின் வரையே
யிடையே மயிரி னொழுக்கே முலையுகிர்
விரலே முன் கை யங்கை தோளிணை
கழுத்தே முக நகை செவ்வாய் மூக்குக்
கண்ணே காது புருவ நுதலெனு
மாறைந் துறுப்பு யனிரண்டும் பாதம்

ஆக இப்படி முப்பத்திரண்டு உறுப்புகளும் தெய்வத்தன்மை சிறந்து விளங்க அமைந்திருப்பதை அனைவரும் கண்டு வியந்தனர்.
இதனால் அரசனுக்கு அவர் மேல் பெரு மதிப்பும் மிகுந்த அன்பும் ஏற்பட்டது.

அரசனிடத்தில் கவிஞர், கவி ராயர், கவிச் சக்கரவர்த்தி, பண்டிதர், பாவலர், பாரதி, நாவலர், வித்துவான், மகா வித்துவான் , வித்வ சிரோமணி, புலவர் உள்ளிட்ட பல பட்டங்களைத் தரித்து வருவோரிடம் தாயுமானவர் யதார்த்தமாக வாதம் செய்து அவர்களைத் தோற்க அடிப்பார். பின்னர், “உண்மையைக் காண்பீர்களாக” என்று உரைத்து அவர்களை அனுப்புவார்.

TAMIL FILM ON THAAYUMAANAVAR


**

தொடரும்

TAGS- தாயுமானவர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: