WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,500
Date uploaded in London – – 29 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தாயுமானவர்! – 2
ச.நாகராஜன்
ஒரு நாள் திருச்சிக்கு சுவாமி தரிசனம் செய்ய திருமூலர் மரபிலே தோன்றி, மெய்கண்ட தேவ நாயனாரது வழி வந்த குரவரிடத்தில் ஞானோபதேசம் பெற்ற மௌனகுருசாமிகள் என்பார் வந்தார்.
அவரைக் கண்டவுடன் உளம் மிக மகிழ்ந்தார் தாயுமானவர். அவர் கையில் வைத்திருந்த புத்தகம் யாதோ என்று அவருக்கு ஆர்வம் மேலிட்டது. கேட்டார். ஆனால் சுவாமிகளோ பதில் சொல்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று ஊர் அடங்கிய பின் தாயுமானவர் சந்நிதிக்குச் சென்று பத்மாசனத்தில் அமர்ந்தார். தொடர்ந்து அந்தப் புத்தகம் யாது யாது என்று தாயுமானவர் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் வந்தது.
சிவஞான சித்தி என்றார் ஸ்வாமிகள். பின்னர் தாயுமானவரின் கேள்விகளுக்கெல்லாம் அவர் தக்க விடையிறுத்தார். பதியிலக்கணம், பசுவிலக்கணம், பாசவிலக்கணம், ஞானாஞ் ஞான இலக்கணம், அத்துவித இலக்கணம் உள்ளிட்ட அனைத்தையும் மௌன குரு ஸ்வாமிகள் விவரிக்க அவரைத் தன் குருவாக ஏற்றார் தாயுமானவர்.
“இன்னும் சிறிது காலம் இல்லறம் நடத்தி, புத்திரனைப் பெறுக; பின்னர் யாம் வந்து நிஷ்டை கூடும் உபாயத்தை உமக்கு அளிப்போம்” என்று கூறி விட்டுச் சென்றார் மௌனகுரு ஸ்வாமிகள்.
தாயுமானவருக்குத் திருமணமும் நடைபெற்றது. மட்டுவார் குழலம்மை என்ற மாட்சி வாய்ந்த நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார்குழலியார் சிவபதம் அடைந்தார்.
இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். ஒரு முறை சேது தரிசனம் செய்த பின்னர் குமரிக் கடலில் நீராடி அங்கிருந்து பொதிய மலை சென்றார். அங்கே அகத்திய மஹரிஷியின் தரிசனம் பெற்று பெரும் ஞான நிலையை அடைந்தார்.
அவரது அருள் சக்தியைக் கண்டு வியந்த அரசன ஒரு நாள் அவரை அழைத்து, “இனீ நீர் எனக்குச் சேவை செய்ய வேண்டாம். நான் தான் உமக்குச் சேவை செய்ய வேண்டும்” என்று கூறி அவரை அரசுப் பணியிலிருந்து விடுவித்தான்.
அவருக்கு ஏவல் செய்ய ஆரம்பித்து, “எனது அரசு மற்றும் உடைமைகளை ஏற்று அருள்க” என்று அவரிடம் வேண்டினான். தாயுமானவரோ அவருக்கு அரிய உபதேசங்களை அருளித் தன் குருநாதரை அடைந்தார். அவரிடம் ஞானாவுத்திரி என்னும் தீட்சை செய்யப்பெற்று துறவறம் பூண்டார்.
அன்று முதல் ஆடைகளைத் துறந்து கௌபீனதாரியாகத் திகழலானார். ஜோதிடர்கள் கூற்று மெய்யாகும்படி அரசர்களிலிருந்து சாமானியர் வரை அவரை நாடி அவர் அடி பணிந்தனர். ஒரு பெரிய அரசனுக்குரிய, ஒரு பெரியவருக்கான, தச அங்கங்களான நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி ஆகிய பத்தும் அவருக்கு இயல்பாகவே அமைந்தன.
அவர் மெய்யரசராக விளங்கியமையால் அவாவின்மை, மெய்யுணர்வு துறவு ஆகியவை குணம் என்னும் மலையாக அமைந்தன.
நித்தியானந்தம் நதியாக ஆனது. வேதம் முதலிய கலைகளாலும் அறிய முடியாத சிற்சத்தித் தானம் நாடாக ஆனது..அநுபூதி அவருக்கு ஊராகவும் அருள் அவருக்கு மாலையாகவும் வியாபகத்வம் என்பது குதிரையாகவும் சிவஞானம் யானையாகவும் அமைந்தன. வைதிக சைவ சித்தாந்தம் அவரது வெற்றிக் கொடியாக ஆனது. நாதம் என்னும் முரசும், அறிவித்தல் என்னும் ஆணையும் கூடிய தசாங்கங்கள் அவருக்குக் கிட்டின. பேரறிவு பெருஞ்சுடர் முடியாக ஆனது. அந்தண்மை வெண்கொற்றக் குடையாக ஆக, சமாதி சிம்மாசனம் ஆனது. மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் அவருக்கு நால்வகைச் சேனைகளாக ஆயின. நிஜமாகவே தவ அரசராக அவர் ஆனார்.
அவர் வாயிலிலிருந்து அருட் பாடல்கள் மழையெனப் பொழிய ஆரம்பித்தன. அருகே இருந்த அவர் மாணாக்கர்கள் உடனுக்குடன் பாடலைப் படி எடுத்தனர்.
நீண்ட நாள் வாழ்ந்த அவர் இராமநாதபுரம் சென்று சிவத்தோடு கலக்க எண்ணினார். அவர் ஒரு தைமாதம் விசாக நட்சத்திர நாள் அன்று சமாதி எய்தினார். அவரது சமாதி இராமநாதபுரத்தில் லக்ஷ்மிபுரம் வெளிப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது. தவறாமல் குருபூஜை வருடந்தோறும் அங்கு நடைபெறுகிறது.
ஸ்வாமி சித்பவானந்தர் அண்மைக் காலத்தில் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து நிர்வகித்து வருகிறது.
தாயுமானவரின் காலம் 1705ஆம் ஆண்டு முதல் 1742 முடிய என்று வரலாறு கூறுகிறது.
இதுவே தாயுமானவரின் திவ்ய சரித்திரமாகும்.
தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன.
திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள மூன்று பாக்களின் விளக்கவுரையே பல அறிஞர்களால் மிகப் பரந்து விரித்துரைக்கப்பட்டிருக்கிறது.
அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா
யானந்த பூர்த்தியாகி
யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
யகிலாண்ட கோடி யெல்லாந்
தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினிற்
றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்
தந்தெய்வ மெந்தெய்வ மென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா
யென்றைக்கு முள்ள தெது மேற்
கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது
கருத்திற்கிசைந்த ததுவே
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
இந்தப் பாடல் எல்லாம் வல்ல மன வாக்கிற்கு எட்டாத பெரும் சக்தியைப் பற்றிச் சொல்லி வியக்கிறது.
“எண்ணரிய பிறவி தனில் மானுடப் பிறவிதானியாதினும் அரிது காண். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன்” என்று மானுடப் பிறவியின் சிறப்பைக் கூறி அதில் மெய்யுணர்வு நாட்டம் இருக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்துகிறார்.
**
தொடரும்
tags- தாயுமானவர் 2