திருவையாறு-ஆலயம் அறிவோம் (Post No.10,521)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,521

Date uploaded in London – – 3 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய நேரம் மாலை 6.30க்கு லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 2-1-2022 அன்றுஒளிபரப்பட்ட உரை
திருவையாறு


ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாசமலர் எலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் ஜோதீ
திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது தக்ஷிண கைலாஸம் என்ற புகழைப் பெற்ற திருவையாறு திருத்தலம் ஆகும். தமிழகத்தில், தஞ்சாவூருக்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.


மூலவர் : ஸ்ரீ பஞ்சநதேஸ்வரர், ஐயாறப்பர் ஸ்வயம்பு மூர்த்தி.
அம்பிகை : தர்மஸம்வர்த்தனி, அறம் வளர்த்த நாயகி
32 அறங்களை வளர்த்துக் காத்ததால் அம்மனுக்கு இந்தச் சிறப்புப் பெயர் அமைகிறது.
தல விருக்ஷம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய தீர்த்தம், காவிரி


காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளான குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என ஐந்து ஆறுகள் சேரும் இடம் இது என்பதால் திரு ஐயாறு என்ற பெயரைப் பெற்றது. அத்துடன் இன்னொரு காரணமும் உண்டு. நந்தி தேவர் இந்தத் திருத்தலத்தில் ஏழு கோடி முறை ருத்ர ஜபம் செய்து இறைவனால் ஐந்து தீர்த்தங்களால் தீர்த்தமாடப் பெற்றதாலும் இது திரு ஐயாறு என்ற பெயரைப் பெற்றது.


இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள அந்தணக்குறிச்சி என்னும் இடத்தில் திருவாதிரை நன்னாளில் சிலாத மஹரிஷிக்கு நந்தியெம்பெருமான் அவதரித்தார். அன்று மாலை ஈசன் நந்தியை இங்கு அழைத்து வந்து ஐந்து வித தீர்த்தங்களால் அவருக்கு அபிஷேகம் செய்தார். சூரிய தீர்த்த நீர், சந்திர தீர்த்த நீர், நந்தி வாயில் ஒழுகிய நுரை நீர், காவிரி நீர், அம்பாளின் திருமுலைப்பால் ஆகிய நீர் என ஐந்து தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பெற்ற நந்தி அதிகார நந்தி என்ற பட்டம் சூட்டப்பட்டு காவல் பொறுப்பை மேற்கொண்டார்.


இந்தத் தலத்தில் திருநாவுக்கரசருக்கு சிவபிரான் கைலாஸ தரிசனம் கொடுத்தார். இந்த ஐதீகத்தைக் காட்டும் உற்சவம் ஆண்டு தோறும் ஆடி அமாவாசையன்று நடைபெறும்.சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் தரிசனம் பெற்ற தலமும் இதுவே தான்.


இந்திரனும், வாலியும் இங்கு வந்து பூஜித்துள்ளனர்.


திருவையாறு, ஸ்ரீ வாஞ்சியம், அர்ஜுனம், கௌரிமாயூரம், சாயாவனம்,

ஸ்வேதாரண்யம், ஆகிய ஆறு ஸ்தலங்களும் காசிக்குச் சமமான தலங்கள் ஆகும். திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதுகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு தலங்களும் ஸப்த ஸ்தான தலங்களாகும். இதில் திருவையாறு முதல் இடத்தைப் பெறுகிறது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஏழூர்த் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்று. சித்திரை மாதம் பௌரணிக்குப் பின் வரும் விசாக நக்ஷத்திரத்தன்று பஞ்சநதேஸ்வரர் தர்மஸம்வர்த்தனியுடன் புறப்பட்டு ஒவ்வொரு ஸப்த ஸ்தான தலத்துக்கும் செல்ல அவரை அங்குள்ள பெருமான் எதிர்கொண்டழைப்பார். இப்படி ஏழு தலங்களுக்கும் சென்ற பின்னர், மறு நாள் காலை திருவையாற்றை கண்ணாடிப் பல்லக்குகளில் ஏழுர் மூர்த்திகளும் அடைவர். கோலாகலமாகக் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஈசனின் அருளைப் பெறுகின்றனர்.
பிரம்மாண்டமான கோவிலில் கிழக்கு ராஜகோபுரமே பிரதான வாயில். இது ஏழு நிலைகளை உடையது. உள்ளே வலது புறம் பெரிய மண்டபத்தில் வல்லப விநாயகர் மற்றும் தண்டபாணி சந்நிதிகள் உள்ளன. உட்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. உள்ளே வலமாக வரும் போது சூரிய தீர்த்தத்தைக் காணலாம். தெற்கு வாயிலின் வெளிப்புறத்தில் ஆட்கொண்டார் சந்நிதி உள்ளது. இங்கு இந்த சந்நிதியில் ஜ்வாலையுள்ள ஒரு குழியில் குங்கிலியம் போட்டுக் கொண்டிருப்பார்கள். இதற்கு அப்பால் அப்பருக்குக் கயிலை காட்சி அருளிய கோவில் தனி அமைப்புடன் உள்ளது. மேற்குக் கோபுரம் ஏழு நிலைகளுடன் அமைந்துள்ளது.


அடுத்து இங்குள்ள உலக மாதேவீ ச்சரம் என்னும் தனிக் கோயில் உள்ளது. அங்குள்ள பிரகாரத்தில் ஒலி கேட்கும் இடம் என்ற இடத்தில் கற்சுவரில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள குழியில் வாயொலியாக ஐயாறா என்று கூவினால் அது பலமுறை திருப்பி எதிரொலிக்கும் அதிசயத்தைக் காணலாம்; கேட்கலாம். இங்கு ஆவுடையார் மீதுள்ள ஆவுடையார் விநாயகரை தரிசித்து அருள் பெறலாம். ஏராளமான சிற்பச் சிறப்புகள் கொண்ட கோவில் இது.


இந்தத் தலத்தில் தான் கர்நாடக ஸங்கீத மும்மூர்த்திகளில் முதல்வராக உள்ள ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் வசித்து வந்தார். அவரது சமாதி இங்கு காவேரியாற்றின் கரையில் உள்ளது. அது கோவிலாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் புஷ்ய பகுள பஞ்சமியன்று உலகெங்குமுள்ள சங்கீத வித்வான்கள் இங்கு வந்து அவருக்கு ஆராதனை செய்கின்றனர்.


இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர் ஐந்து பதிகங்களையும் திருநாவுக்கரசர் 12 பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் பாடி அருளியுள்ளனர். அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடலைப் பாடி அருளியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ பஞ்சநதேஸ்வரரும் தர்ம ஸம்வர்த்தனி அம்மனும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.


திருநாவுக்கரசரின் அருள் வாக்கு இது:


கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய்
எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்
விண் ஆனாய் விண் இடையே புரம் எரித்த வேதியனே
அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே


நன்றி, வணக்கம்!

tag-  திருவையாறு


Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: