ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 1 (Post No.10,524)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,524
Date uploaded in London – – 4 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

broadcasts2,3 jan.2022ஞானமயம் நிகழ்ச்சியில் 3-1-22 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய உரை. மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 1
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம், நமஸ்காரம்.

இசைத் துறையில் காவிரி வளர்த்த மகான்களில் முதலிடத்தைப் பெறுபவர் ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்.

இசை மூலம் பக்தி யோகத்தையும் கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் வாழ்ந்து காட்டி அதன் மூலம் இறைவனுடன் கலந்த மகான் அவர்.

கலியுகாதி வருடம் 4868, சாலிவாகன சகாப்தம் 1689க்குச் சமமான ஸர்வஜித் வருடம், சித்திரை மாதம் 25ஆம் தேதி திங்கள் கிழமை வைசாக சுக்ல ஸப்தமி பூச நக்ஷத்திரம் கடக லக்னம் சூரிய உதயாதி நாழிகை 15 1/2யில் – 1767ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதியன்று(இதை நினைவில் கொள்வது சுலபம் 4,5,6,7) தமிழகத்தில் தஞ்சாவூர் பகுதியில் உள்ள தியாக ராஜ க்ஷேத்திரமாகிய திருவாரூரில் த்ரிலிங்க வைதிக தெலுங்கு பிராமணரான ராம ப்ரம்மம் என்ற பெரியாருக்கு மூன்றாவது மகனாக தியாகராஜர் அவதரித்தார். திருவாரூரில் பிறந்ததனால் இவருக்கு தியாகராஜன் என்ற ஊரின் ஈசன் நாமத்தைத் தாய் தந்தையர் சூட்டினர். ராம பக்தியில் ஈடுபட்ட இவர் ராமபக்தி சாம்ராஜ்யம் என்று தனது இசையில் ராமபக்தியை ஒரு சாம்ராஜ்யமாகக் குறிப்பிட்டதில் வியப்பில்லை. தற்செயல் ஒற்றுமையாக இருப்பினும் கூட தியாகராஜரின் தந்தையாரின் பெயர் ராமபிரம்மம் என்பதையும் அவரது தாயாரின் பெயர் சீதம்மா என்பதையும் நாம் கவனித்துப் பார்த்தால் அவரது அவதார நோக்கம் ராமரையும் சீதையையும் தொழுது பாடுவதே என்று கொள்ளலாம்!

இவருக்கு எட்டு வயதிலேயே உபநயனம் நடைபெற்றது.
இவரது 18 வயதிற்குள்ளே வேதாத்யயனம், ஸம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றில் நல்ல பயிற்சியைப் பெற்றுத் தேர்ந்தார். 18வது வயதில் திருமணமும் நடைபெற்றது. சோந்தி வெங்கடராமையர் என்பவரிடம் சங்கீதம் பயின்று வந்தார்.
ஒரு சமயம் ஶ்ரீ ராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் பெரியார் காஞ்சி மா நகரிலிருந்து தியாகராஜரைத் தேடி வந்தார். அவர் இவருக்கு தாரக நாமத்தை உபதேசித்து, அதைத் தொண்ணூற்று ஆறு கோடி முறை உச்சரிக்கும் படியும் அப்படி உச்சரித்தால் ஶ்ரீராமர் அவர் முன் பிரசன்னமாவார் என்றும் கூறினார்.

அதன்படியே தியாகராஜர் ராம நாமத்தை பயபக்தியுடன் அல்லும் பகலும் அனவரதமும் உச்சரிக்க ஆரம்பித்தார். 21 வயதிற்குள் 96 கோடி ராம நாம உச்சாரணம் முடிந்தது. அது முடிந்த சமயம் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தவுடன் தியாகராஜர் கண்ட காட்சி அவரை மெய்ம்மறக்கச் செய்தது.

எதிரே ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணர் ஆகியோரின் தரிசனம் கிடைத்தது. உடனே அவர்கள் மறைந்து விட்டனர். புளகாங்கிதம் அடைந்த தியாகராஜர் ஏல நீ தயராது என்ற அடாணா ராகத்தில் அமைந்த கீர்த்தனத்தைப் பாடினார்.
அதுமுதல் அவர் வாக்கிலிருந்து சரளமாக கீர்த்தனை மழை பொழிந்து கொண்டே இருந்தது.

79 வருடம் 8 மாதம் 15 நாட்கள் அவர் வாழ்ந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. தனது நீண்ட நெடும் வாழ்வில் அவர் சுமார் 24000 கிருதிகளை இயற்றியதாக அறிகிறோம். நமக்குக் கிடைத்திருப்பவை சொற்பமே.
அவரது வாழ்வில் ஏராளமான அற்புத சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன.

ஒரு சமயம் ஒரு கிழவர் அவருடைய தெய்வீக கானத்தைக் கேட்க வேண்டுமென்று விரும்பினார். பெரியவர் கேட்கிறாரே என்று தியாகராஜர் சுருதி சுத்தமாக கீதம் இசைக்க அதனால் மகிழ்ந்த பெரியவர் அவரிடம் ஒரு ஓலைச் சுவடிக் கட்டைக் கொடுத்து மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றார். ஆனால் அவர் வரவே இல்லை. தியாகராஜரின் கனவில் நாரதர் தோன்றினார். தான் தான் கிழவராக வந்து அவரிடம் ஓலைச்சுவடிக் கட்டைக் கொடுத்ததாகக் கூறினார் நாரதர். அதைப் படியுங்கள் என்று கூறியருளிய நாரதர் மறைந்தார்.

எழுந்தவுடன் ஸ்வரார்ணம் என்ற அந்த ஓலைச் சுவடிக் கட்டைப் படித்த தியாகராஜர் இன்னும் அதிகப் புகழை அன்று முதல் பெற்றார்.
ராமபக்தி அதிகமாகிக் கொண்டே இருக்கவே பஜனைகள் செய்து வாழலானார். அவர் திருமஞ்சன வீதியில் வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி சென்று வீதிகளின் வழியே சென்று கிடைத்ததைக் கொண்டு வாழ்ந்து வந்தார். சீதாராமர், லக்ஷ்மணர், ஹனுமான் ஆகியோர் விக்ரஹத்தின் முன் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருப்பார்.
***
தொடரும்

OLD ARTICLES IN THIS BLOG

SRI TYAGARAJA-24, Differences between Divine Forms (Post …https://tamilandvedas.com › 2020/06/02 › sri-tyagaraja-…2 Jun 2020 — WRITTEN BY R. NANJAPPA Post No. 8090 Date uploaded in London – – – 2 June 2020 Contact – swami_48@yahoo.com Pictures are taken from various …

TAGS– தியாகராஜ ஸ்வாமிகள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: