ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 3 (Post No.10,531)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,531
Date uploaded in London – – 6 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் – 3
ச.நாகராஜன்

சங்கதி என்று இன்று பிரபலமாகி இருக்கும் சங்கீத அமைப்பை தியாகராஜரே உருவாக்கினார் என்பது ஒரு சுவையான இசைச் செய்தியாகும்.
ஒரே ராகத்தில் பல கிருதிகளை அவர் இயற்றியிருந்தாலும் ஒவ்வொன்றும் தனிச் சுவையுடன் மிளிரும். தோடி ராகத்தில் அவர் இயற்றியுள்ள பல கீர்த்தனைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

THYAGARAJA ARADHANA HELD IN LONDON 


13வது வயதில் நமோ நமோ ராகவய்யா என்ற முதல் கீர்த்தனையை அவர் இயற்றினார். தொடர்ந்து தனது வாழ்நாளில் அவர் மொத்தம் 24000 கிருதிகளை இயற்றியுள்ளார். இந்தக் கிருதிகளில் இராமாயணம் முழுவதையும் காணலாம். ஆதிகவியான வால்மீகி முனிவர் 24000 ஸ்லோகங்களில் இராமாயணத்தை இயற்றியுள்ளார். அவரே தியாகராஜராக அவதரித்ததாக பக்தர்கள் கூறுவதில் வியப்பில்லை.
அவருக்கு ஏராளமான சீடர்கள் சேர்ந்தனர். தஞ்சாவூர் ராமாராவ், வீணை குப்பையர், வாலாஜா பேட்டை வேங்கடரமண பாகவதர், அவரது குமாரர் கிருஷ்ண பாகவதர், உமையாள் புரம் கிருஷ்ண பாகவதர், அதே ஊர்க்காரரான சுந்தர பாகவதர், சித்தூர் ராதாகிருஷ்ணையர் உள்ளிட்ட பலரும் அவரது சீடர்களே.


ராம நீ சமான மெவரு – ராமா! உனக்கு நிகரானவர் யார்? கரகரப்ரியா ராகத்தில் அமைந்தது இது.


ராமபக்தி சாம்ராஜ்ய – இது சுத்தபங்காள ராகம்.
சாந்தமுலேக சவுக்கியமுலேது – சாமா ராகத்தில் உள்ள இந்த கீர்த்தனை சாந்தம் இல்லை எனில் சௌக்யமில்லை என்கிறது.
பண்டுரீதியில் என்னை சேவகனாக ஏற்றுக் கொள் என்கிறார்.
இந்த கிருதிகளைத் தவிர, பிரகலாத பக்த விஜயம், நவுகா சரித்திரம், சீதாராம விஜயம் ஆகிய மூன்று இசை நாடகங்களையும் அவர் படைத்துள்ளார். அவரது கிருதிகளில் தியாகராஜ என்ற அவரது முத்திரையைக் காணலாம்.


சுமார் 700 கிருதிகளுக்கும் மேற்பட்ட அளவில் இவரது பிரபலமான கிருதிகள் இப்போது கச்சேரிகளில் இசைக்கப்பட்டு வருகின்றன. தியாகோபநிஷத் என்றே சொல்லுமளவு ஏராளமான கட்டுரைகள் இவரது கிருதிகளை விளக்கி எழுதப்பட்டு வருகிறது.

1845ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அவரது மனைவியார் காலமானார்.
தியாகராஜரின் இறுதிக் காலத்தில் அவர் துரீயாஸ்ரமம் ஸ்வீகாரம் செய்து கொண்டார். 1847ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்குச் சமமான பராபவ வருடம் தை மாதம் பகுள பஞ்சமி நாளன்று திருவையாறு தலத்திலேயே அவர் சித்தியாகி மோக்ஷம் அடைந்தார். அவரது இறுதி நாளன்று அனைவரையும் ராம நாமம் கூறுமாறு பணித்த அவர், மனோஹரி ராகத்தில், ‘பரிதாபமு கனியாடின பலுகுல மரசிதிவோ’ என்னும் கிருதியைப் பாடினார்; அவரது கரம் சின் முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவரது சிரத்திலிருந்து ஒரு ஜோதி கிளம்பி ராம விக்ரஹத்தில் சென்று ஐக்கியம் அடைந்தது.


அவரது உடல் காவிரி ஆற்றங்கரையில் அவரது குருவான சொண்டி வெங்கடரமணய்யர் சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டது. பின்னர்
காவேரிக் கரையோரத்தில் அவரது சமாதி கோவிலாக எழுப்பப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்கள் திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை இசை விழாவில் நாட, கவுள, ஆரபி, ஶ்ரீ ராகம், வராளி ஆகிய ஐந்து கனபஞ்சக ராகங்களில் அவர் பாடியுள்ள பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, அவரை தங்கள் சங்கீத கானத்தால் போற்றி வணங்குகிறார்கள். இந்த ஆராதனையில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கு பெறுகின்றனர். சுமார் 174 வருடங்களாக இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இசையால் பிரபஞ்சத்தைக் கவர்ந்தவர் தியாகராஜர் என்று சொல்வது ஒரு புகழுரையாகக் கருதக் கூடாது; புத கிரகத்தில் உள்ள ஒரு பெருவாய் எனப்படும் Craterக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது பொருத்தம் தானே! இந்திய அரசாங்கம் அவரைப் போற்றும் விதத்தில் தபால்தலையை வெளியிட்டுள்ளது.
எந்தரோ மஹானுபாவலு அந்தரிகி வந்தனமுலு என்று சாதாரணமாகக் கூட இன்று மேடைகளில் கூறப்படும் வார்த்தைகளிலிருந்து பக்கல நிலபடி கொலிசே, ராம நீ சமானமெவரு என்ற உச்ச பக்தி கீர்த்தனைகள் பாடப்படுவது முடிய அங்கு இசைமயமாக தியாகராஜர் இருக்கிறார்; என்றும் இருப்பார்!
இசையால் இறைவனை வழிபட்டு இசை மூலம் முக்தி அடைந்த பெரும் மகானான தியாகராஜரைப் போற்றுவோம்; அவரது கிருதிகளைப் பாடுவோம்; பரப்புவோம்.
நன்றி, வணக்கம்!
*** முற்றும்

TAGS– தியாகராஜ ஸ்வாமிகள் – 3

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: