WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,543
Date uploaded in London – – 9 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு! – 1
ச.நாகராஜன்
பாஞ்சால தேசத்தை ஆண்டு வந்த மன்னன் துருபதன். இளமைக் காலத்தில் துரோணருடன் சேர்ந்து அவன் வில் வித்தை கற்று வந்தான். இருவருக்கும் நல்ல நட்பு உண்டாயிற்று.
பின்னால் பாஞ்சால தேச மன்னனாக துருபதன் ஆன போது ஒரு நாள் பழைய சிநேகத்தை முன்னிட்டு துரோணர் அவனைப் பார்க்கச் சென்றார். ஆனால் அவரைச் சற்றேனும் துருபதன் மதிக்கவில்லை. அவமரியாதைச் சொற்களை வேறு சொன்னான்.
இதனால் கொதிப்படைந்தார் துரோணர். நேராக ஹஸ்தினாபுரம் சென்று கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில் வித்தையை அழகுறக் கற்றுக் கொடுத்தார்.
பாண்டவர்களைக் கொண்டு துருபதராஜனை ஜெயித்தார்; அவனைச் சிறைப்படுத்தவும் செய்தார். பின்னர் பாஞ்சால தேசத்தின் வடக்குப் பகுதியைத் தன் வசம் வைத்துக் கொண்டு தெற்குப் பகுதியை மட்டும் துருபதனுக்குத் திருப்பித் தந்தார்.
துருபதனுக்குத் தாங்கொணாத துக்கம் ஏற்பட்டது. துரோணரைப் போரில் தோற்கடிக்கக்கூடிய ஒரு மகனைப் பெற அவன் விரும்பினான். இதற்காக பெரும் யாகம் ஒன்றையும் செய்ய அவன் தீர்மானித்தான்.
யாகத்தை யார் செய்வது? அதைத் திறம்படச் செய்யக் கூடியவர் யார்?
கங்கை யமுனை நதிக் கரையோரம் அலைந்து திரிந்து தகுந்தவர் யார் என்பதைக் கண்டு பிடிக்க முனைந்தான்.
அப்போது அங்கு யாஜர், உபயாஜர் என்ற இரு மஹரிஷிகளை அவன் கண்டான்.
பிராமணர்களான அவர்கள் இருவரும் சகோதரர்கள். யாஜர் அதில் மூத்தவர்.
இவர்கள் இருவருமே யாகம் செய்யத் தக்கவர்கள் என்று தீர்மானித்த துருபதன் அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தான்.
இருவரில் உபயாஜரே அதிகத் தகுதி பெற்றவர் என்பதை அவன் கண்டு கொண்டான்.
ஒரு நாள் உபயாஜரை அணுகிய துருபதன் அவரை வணங்கி, “ஐயனே! துரோணரைக் கொல்லக் கூடிய வல்லமை படைத்த மகன் ஒருவனைப் பெற விரும்புகிறேன். அதற்கான யாகத்தை நீங்கள் எனக்கு நடத்தித் தர வேண்டும். அதற்காக பதினாயிரம் பசுக்களை உமக்குத் தருகிறேன். தயவு செய்து அருள் புரிய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.
அரசன் சொன்னதைக் கேட்ட உபயாஜர், “ஓ! அரசனே! எனது தமையனாரான யாஜர் ஒரு நாள் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது வழியிலே கிடந்த பழம் ஒன்றை எடுத்து அது சுத்தமா இல்லையா என்று பரிட்சிக்காமல் அதை உண்டார். கூடவே சென்ற நான் அதைப் பார்த்தேன். சுத்தமா இல்லையா என்று கூடப் பார்க்காமல் அவர் அந்தப் பழத்தை எடுத்த போது அதில் உள்ள பாவத்தை விளைவிக்கும் தவறுதல் இருப்பதை அவர் உணரவே இல்லை. ஒரு விஷயத்தில் சுத்தத்தை அனுசரிக்காதவன் மற்ற விஷயங்களிலும் சுத்தத்தை அநுசரிப்பான் என்று நினைக்க இடமில்லை.
அவர் ஆசாரியரின் வீட்டிலிருந்து வேத அத்யயனம் செய்யும் போதும் மற்றவர்கள் உண்ட எச்சிலை எடுத்து உண்பது வழக்கம். உணவு என்று வரும் போது அது எதுவாக இருந்தாலும அதை சிலாக்கியமாகவே அவர் கருதுகிறார்.
ஆகவே அவர் உலக விஷயங்களில் அதிகப் பற்றுக் கொண்டவர் என்பதை நான் அறிகிறேன்.
ஆகவே, அரசனே, அவரிடம் நீர் சென்று யாகத்தை நடத்த வேண்டிக் கொள்ளும். அவர் உமக்கு வேண்டியதைச் செய்வார்.” என்றார்.
இதைக் கேட்ட துருபதன் யாஜர் மீது அவ்வளவாக நல்ல அபிப்ராயம் கொண்டிராத போதிலும் அவரிடம் சென்று தன் கோரிக்கையைச் சொன்னான்.
அவருக்கு எண்பதினாயிரம் பசுக்களைத் தருவதாகச் சொன்னான்.
“ ஓ! மஹரிஷியே! துரோணரிடம் உள்ள எனது விரோதம் என்னை எரிக்கிறது. நீரே என் மனதைக் குளிரச் செய்ய வேண்டும். துரோணர் வேதங்களை அறிந்தவர். பிரம்மாஸ்திரத்திலும் சமர்த்தர். ஆகவே தான் அவர் என்னை ஜெயித்து விட்டார். புத்திமானாகிய அவர் கௌரவர்களுக்கு இப்போது ஆசாரியராக இருக்கிறார். வில் வித்தையில் அவரை வெல்லக்கூடிய க்ஷத்திரியன் இப்போது யாருமே இல்லை. அவரது வில் ஆறு முழம் நீளமுள்ளது. பார்ப்பதற்குப் பயங்கரமானது. அவரது பாணங்கள் எந்தப் பிராணிகள் மீது செலுத்தப்பட்டாலும் தப்பாது அவை குறித்தவற்றைக் கொல்லும் தன்மை படைத்தவை.
துரோணர் பிராமணர்களது ஆசாரங்களை அனுஷ்டித்தாலும் கூட அவரது அஸ்திர சஸ்திர திறமையினால் அவர் எல்லா க்ஷத்திரியர்களையும் நாசம் செய்து வருகிறார்.
க்ஷத்திரிய வம்சத்தை அழிக்க வந்த இரண்டாவது பரசுராமராக அவர் விளங்குகிறார். அவரது ஆயுதங்களை எதிர்த்துப் போராட வல்லவர் யாரும் இல்லை. நெய்யால் ஆஹுதி செய்யப்பட்ட அக்னி கொழுந்து விட்டு எரிவது போல பிராமண சக்தி, க்ஷத்திரிய சக்தி ஆகிய இரண்டு சக்திகளையும் சேர்த்து வைத்து யுத்தத்தில் எதிர்ப்பவனை அவர் ஹதம் செய்கிறார்.
ஆனால் உம்முடைய பிராம்மண சக்தியானது துரோணரது பிராம்மண, க்ஷத்ரிய சக்தியை விட வலிமை கொண்டதாக விளங்குகிறது. ஆகவே தான் க்ஷத்திரிய சக்தியில் துரோணருக்குக் குறைவானவனாக நான் இருந்த போதிலும் பிராம்மண சக்தியில் அவரை விடச் சிறந்தவரான உம்மை நாடி வந்திருக்கிறேன்.
யுத்தத்தில் ஒரு காலும் கொல்லப்படாதவனாகவும் துரோணரைக் கொல்ல வல்லவனுமான ஒரு புத்திரனை நான் அடையத்தகுந்த படி எனக்காக ஒரு யாகத்தைச் செய்து அருளும். உமக்கு வேண்டிய பசுக்களைக் கொடுக்க நான் தயார்” என்று வேண்டினான்.
இதைக் கேட்ட யாஜர் துருபதனுக்காக யாகம் செய்ய ஒப்புக் கொண்டார்.
***
தொடரும்
tags– யாஜர், உபயாஜர் , திருஷ்டத்தும்னன், திரௌபதி,