மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் -2 (Post No.10,546)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,546
Date uploaded in London – – 10 JANUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷிகள் யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி பிறப்பு! – 2

ச.நாகராஜன்

யாகம் செய்ய ஒப்புக் கொண்ட யாஜர் யாகத்திற்குத் தேவையான மந்திரங்கள், விதிமுறைகளை முதலில் ஞாபகப்படுத்திக் கொண்டார். யாகத்திற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கொண்டு வருமாறு துருபதனிடம் தெரிவித்தார்.

யாகம் சற்று சிரமமான ஒன்று என்பதை அறிந்து கொண்ட யாஜர் இதற்கு உதவி தேவைப்படும் என்பதை உணர்ந்து உபயாஜரைத் தனக்கு உதவி செய்யுமாறு அழைத்தார். அவரும் ஒப்புக் கொண்டார்.
யாகத்தை மந்திரபூர்வமாகச் செய்ய ஆரம்பித்த யாஜர் துருபதனின் பத்னியை அழைத்தார்.

“ஓ! ராஹ மஹிஷியே! இங்கு வா! உனக்காக ஒரு புத்திரனும் புத்திரியும் இதோ இங்கே வந்திருக்கிறார்கள்” என்றார்.

உடனே துருபதனின் பத்னி “மஹரிஷியே! நான் என் வாயில் மஞ்சள் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டுள்ளேன். எனது உடலிலும் வாசனை திரவியங்கள் பல உள்ளன. ஆகவே குழந்தைகளை உற்பத்தி செய்யக் கூடிய பரிசுத்தமான நெய்யை இப்போது வாங்கிக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. எனக்காகச் சற்றுக் காத்திருங்க்ள்” என்றார்.

உடனே யாஜர், “நீ வந்தாலும் வராவிட்டாலும் என்னால் அக்னியில் ஆஹுதி செய்ய வேண்டிய வஸ்து முன்னாலேயே உபயாஜரால் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு பரிசுத்தமாக இருக்கும் இந்த வேளையில் எதை உத்தேசித்து இந்த் யாகம் ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறும் தருணத்தில் தயாராக உள்ளது. அதை ஏன் இப்போதே நிறைவேற்றக் கூடாது?” என்று துருபதனின் பத்னியிடம் கூறினார்.

பரிசுத்தமான நெய்யை அவர் அக்னியில் ஆஹுதி செய்த போது தேவனைப் போல மிகவும் பிரகாசமான ஒரு புத்திரன் அக்னி ஜ்வாலையிலிருந்து எழுந்தான். பிரகாசம் பொருந்திய அவன் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தான். அவன் தலையில் கிரீடம் இருந்தது. கவசத்தால் அவன் மூடப்பட்டிருந்தான். அவன் கையில் கத்தி, வில், அம்பு இருந்தன. அழகுடன் திகழ்ந்த அவன் வீராவேசத்துடன் கர்ஜித்தான். கொஞ்ச நேரத்தில் அவன் ஒரு தேரில் ஏறிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தான்.

பாஞ்சாலர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். ஆஹா, ஆஹா என்று உரக்கக் கூவினர். அவர்களை பூமியே தாங்காதோ என்று எண்ணுமளவு சந்தோஷ ஆரவாரம் இருந்தது.

அந்தத் தருணத்தில் ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது.
“இதோ, இந்த ராஜகுமாரன், துரோணரை அழிப்பதற்கென்றே பிறந்திருக்கிறான். பாஞ்சாலர்களுக்கு நேரும் பயத்தையெல்லாம் இவன் போக்குவான். அவர்களுக்கு கீர்த்தி ஏற்படுத்துவான். அரசனின் துக்கத்தையும் போக்குவான்”
இப்படி எழுந்த அசரீரி ஒலியால் அனைவரும் மகிழ்ந்தனர்.

அதற்குப் பின்னர் அக்னி குண்டத்திலிருந்து பாஞ்சாலி என்ற பெயருடைய ஒரு புத்திரி தோன்றினாள். சகல வித சுப லட்சணங்களைக் கொண்டிருந்த அவள் அழகியாகத் திகழ்ந்தாள். அவளது கண்கள் கறுப்பாகவும் தாமரை மலரை ஒத்து விசாலமாகவும் இருந்தன. அவள் நிறம் கறுப்பு. அவளது கூந்தல் நீல நிறமாகவும் நீளமாகவும் சுருட்டையாகவும் இருந்தன. அவளது நகங்கள் நடுவில் அழகாக உயர்ந்து நெருப்பால் சுத்திகரிக்கப்பட்ட தாமரத்தைப் போல பிரகாசமாக விளங்கின. அழகான புருவங்களையும் ஆழ்ந்த மார்பகங்களையும் அவள் கொண்டிருந்தாள். அவள் ஒரு தேவ கன்னிகை. மனிதர்கள் இடையே தோன்றியது போலத் தோன்றினாள். நீலோத்பல புஷ்பத்திலிருந்து வீசும் நறுமணம் போல அவ்ள் உடலிலிருந்து இரண்டு மைல் தூரத்திற்குப் பரவி வீசக்கூடிய நறுமணம் வீசியது. சௌந்தர்ய தேவதையாக விளங்கிய அவளுக்கு நிகராக யாரும் இல்லை என்று சொல்லும் விதத்தில் அவள் ஜொலித்தாள்.
தேவ கன்னிகை போல இருந்ததால் தேவன், தானவன், யக்ஷன் உள்ளிட்ட யாராக இருந்தாலும் சரி அவளை மணம் புரிய விரும்பும் அளவு அழகும் கம்பீரமும் அவளிடம் காணப்பட்டன.

அப்போது ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது.

“ கரிய நிறமுள்ள இவள் பல க்ஷத்திரியர்கள் இறப்பதற்குக் காரணமாக இருப்பாள். இந்தச் சிற்றிடையாள் தேவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவாள். இவளால் கௌரவர்களுக்கு ஆபத்து நேரும்.”

இந்த வாக்கைக் கேட்டு பாஞ்சாலர்கள் ‘ஆ ஆ’ வென்று ஆர்ப்பரித்தார்கள்.

அப்போது துருபதனின் மனைவி யாஜரை அணுகி, “ இக்குழந்தைகள் என்னையே தாய் என்று அறிய வேண்டும்” என்று வேண்டினாள்.

யாஜர், “அப்படியே ஆகுக” என்றார்.

உடனே அங்கு வந்திருந்த பிராமணர்கள் அனைவரும் தமக்குத் திருப்தியாகும் படி தானங்க்ளைப் பெற்றனர்.

குழந்தைகளுக்கு நாமகரணம் செய்யும் வேளை வந்தது. “இந்தக் குமாரன் மிகவும் துடுக்குள்ளவனாக இருப்பதனாலும், தும்னனைப் போல ஆயுதம் மற்றும் கவசங்களுடன் பிறந்திருப்பதாலும் இவனுக்கு “திருஷ்டத்தும்னன்” என்ற பெயர் உண்டாகக் கடவது. கரிய நிறமுடன் இப்பெண் இருப்பதால் இவள் கிருஷ்ணை என்று அழைக்கப்படட்டும்” என்று இவ்வாறு கூறி நாமகரணம் செய்யப்பட்டது.

அடுத்து யாஜரும் உபயாஜரும் விடை பெற்றனர். துருபதன் இவ்விதமாக இரு குழந்தைகளை மஹரிஷிகள் செய்த யாகம் மூலமாக அடைந்தான்.

திருஷ்டத்தும்னன் மற்றும் திரௌபதியின் சரித்திரத்தை மஹாபாரதம் மூலமாக நாம் அறியும் போது மஹரிஷிகளின் வாக்கு எப்படி உண்மையானது என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

இந்த மஹரிஷிகளின் சரிதத்தை மஹாபாரதம் ஆதி பர்வம் விளக்குகிறது.


tags–யாஜர், உபயாஜர் – திருஷ்டத்தும்னன், திரௌபதி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: