WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,553
Date uploaded in London – – 12 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த தினம் : ஜனவரி 12.
நினைவைப் போற்றித் துதிக்கும் அஞ்சலிக் கட்டுரை
(அவதார தினம் : 12-1-1863 சமாதி 4-7-1902)
ஸ்வாமி விவேகானந்தர் : அளக்க முடியா, அறிய முடியா, மாபெரும் மஹான்!
ச.நாகராஜன்
அறிய முடியா மாபெரும் மஹான்
வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தைக் காக்க வந்த மாபெரும் மஹான் ஸ்வாமி விவேகானந்தர்.
அவரை யாராலும் அளக்க முடியாது; அவரை யாராலும் முழுவதுமாக அறிய முடியாது.
தான் வந்த நோக்கத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றி விட்டுத் தன் இருப்பிடத்திற்கு மீண்டார் அவர்.
அவரைப் பற்றிய ஏராளமான அனுபவங்களை அவருடன் பாரதத்திலும் மேலை நாடுகளிலும் பழகியவர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர்.
ஜோஸபைன் மக்லியாட் ஸ்வாமிஜியின் அணுக்க பக்தை.
அவர் தனது நினைவலைகளில் குறிப்பிடும் சில சம்பவங்களை இங்கு பார்ப்போம்.
ஏன் ஸ்வாமிஜி நீங்கள் தனிப்பட்ட கடவுளைப் புகழ்கிறீர்கள்?
ஆல்பெர்டா ஸ்டர்ஜெஸ் (Alberta Sturges) என்பவர் ஜோஸபைனுக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண்மணி (Niece). பின்னால் இவர் லேடி சேண்ட்விச் என்ற பெயரால் அறியப்பட்டார். (Lady Sandwich)
அவர் ஸ்வாமிஜியின் அளப்பரிய அறிவைக் கண்டு பிரமித்துப் போனார்.
எதை எடுத்தாலும் அவரை விஞ்ச முடியாது; அப்படி ஒரு பிரம்மாண்டமான பல்துறை அறிவு.
ரோமுக்கு அவருடன் சென்ற ஆல்பெர்டா அங்குள்ள பல்வேறு இடங்களை ஸ்வாமிஜிக்கு விவரித்தார். ஆனால் அவரே அந்த இடங்களைப் பற்றிய ஸ்வாமிஜியின் பேரறிவைக் கண்டு வியந்து போனார். செயிண்ட் பீட்டருக்கு ஸ்வாமிஜியை அழைத்துச் சென்ற அவர் அங்குள்ள ரோமன் தேவாலயத்தில் உள்ள அடையாளச் சின்னங்களையும் நகைகளையும் மகான்களின் மீதிருந்த அற்புதமான அணிகலன்களையும் காண்பித்து விவரித்தார்.
அவர் ஸ்வாமிஜியைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் :”ஸ்வாமிஜி! தனிப்பட்ட கடவுளை நம்பாதவர் நீங்கள். அப்படி இருக்க, இங்கு இப்படி மிகவும் போற்றுகின்றீர்களே”
ஸ்வாமிஜியின் போற்றுதலால் வியந்து இந்தக் கேள்வியைக் கேட்ட ஆல்பெர்டாவை நோக்கி ஸ்வாமிஜி, “ஆனால் ஆல்பெர்டா, நீ இதை நன்கு போற்றித் துதிக்கிறாயே! இதற்கு உரிய மரியாதையைத் தந்து தானே ஆக வேண்டும்”.
ஆல்பெர்டா நெகிழ்ந்து போனார்.
பணமா, நானா, வாங்கவே மாட்டேன்!
இலையுதிர்காலம் வந்தது. ஸ்விட்ஸர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு ஸ்வாமிஜி மிஸ்டர் சேவியர் (Mr and Mrs Sevier) தம்பதிகளுடனும் மிஸ்டர் ஜே.ஜே. குட்வினுடனும் (J.J.Goodwin) வந்தார்.
பிரம்மாண்டமான வரவேற்பு இந்தியாவில் ஸ்வாமிஜிக்காகக் காத்திருந்தது.
குட்வின் தான் ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளைச் சுருக்கெழுத்தில் எடுத்த சுருக்கெழுத்தாளர்.
அவர் மிகுந்த திறமைசாலி. கோர்ட்டில் ஸ்டெனோகிராபராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவரை 54, வெஸ்ட் 33வது தெருவில் நடந்த ஸ்வாமிஜியின் சொற்பொழிவுகளுக்கு அழைத்து அனைத்தையும் பதிவு பெறச் செய்தனர்.
அவை தான் நமக்கு Lectures from Colombo to Almora போன்ற நூல்களில் கிடைத்துள்ளன.
ஒரு நிமிடத்திற்கு 200 வார்த்தைகளைச் சுருக்கெழுத்தாக எடுக்கும் அசகாய சூரர் அவர்.
அவரை இந்த பணிக்கு அழைப்பது என்பது நிறைய செலவாகும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால் ஸ்வாமிஜியின் ஒரு வார்த்தையைக் கூட யாரும் இழக்க விரும்பவில்லை. ஆகவே அவர் அழைக்கப்பட்டார்.
ஒரு வாரம் சுருக்கெழுத்துப் பணியில் ஈடுபட்ட குட்வின் பின்னர் பணம் வாங்க மறுத்து விட்டார்.
“என்ன ஆயிற்று, உங்களுக்கு?” என்று அவரைக் கேட்ட போது, குட்வின் கூறினார்; ”விவேகானந்தர் தன் வாழ்க்கையையே கொடுக்கும் போது நான் எனது சேவையையாவது கொடுக்கக் கூடாதா?” என்று கேட்டார்.
ஸ்வாமிஜியுடன் உலகம் முழுவதும அவர் கூடவே சென்றார்.
ஸ்வாமிஜியின் வாயிலிருந்து உதிர்ந்த பொக்கிஷமான வார்த்தைகள் ஏழு தொகுதிகளாக வெளி வந்ததற்குக் காரணம் குட்வின் தான்!
இதென்ன நெற்றியில் செங்குத்துக் கோடு?! (நாமம்)
ஜோஸபைன் இந்தியா வந்தார். பம்பாயில் அவரை அளசிங்கர் வரவேற்றார்.
அவர் நெற்றியில் செங்குத்தான கோடு (நாமம்) இருந்ததைப் பார்த்து வியந்தார் ஜோஸபைன்.
காஷ்மீருக்கு ஸ்வாமிஜியுடன் ஜோஸபைன் சென்ற சமயம் ஒரு முறை அளசிங்கரைப் பற்றி அவர், “ என்ன பரிதாபம் பாருங்கள், அளசிங்கர் வைஷ்ணவ சின்னத்தை நெற்றியில் போட்டுக் கொண்டிருப்பது?” என்று விமரிசித்தார்.
உடனே அவர் பக்கம் திரும்பிய ஸ்வாமிஜி கடுமையாக, “என்ன, என்ன சொன்னாய் நீ? உனக்கென்ன தெரியும் அவரைப் பற்றி!” என்று கூறினார்.
ஜோஸபைனுக்கு ஒன்றும் புரியவில்லை – ஸ்வாமிஜி ஏன் இப்படிக் கடுமையாக வார்த்தைகளைக் கூறினார் என்று.
பின்னால் தான் அவர் தெரிந்து கொண்டார்.
அளசிங்கர் தான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துப் பணம் சேர்த்து ஸ்வாமிஜியை மேலை நாட்டிற்கு அனுப்பினார் என்று. அளசிங்க பெருமாள் சென்னையில் உள்ள கல்லூரியில் தத்துவப் பாடம் போதித்தவர். அவருக்கு மாதச் சம்பளம் 100 ரூபாய்கள். தந்தை, தாய், மனைவி, நான்கு குழந்தைகளைப் பேணி குடும்பத்தை அவர் நடத்தி வந்தார்.
“அவர் அப்படிப் பணம் சேர்த்திராவிடில் ஒரு வேளை எங்களைப் போன்றவர்கள் ஸ்வாமிஜியைப் பார்த்திருக்கவே முடியாது” என்று பின்னால் நினைவுக் குறிப்புகளில் எழுதினார் ஜோஸபைன்.
இப்படி ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. படித்தால் வியப்போம், பிரமிப்போம்.
பிரம்மாண்டமான ஒரு அவதாரம் பூமிக்கு வரும் போது அதன் ஒவ்வொரு கணமும் நமக்கு ஒரு பாடத்தை போதிக்கும், இல்லையா!
விவேகானந்தரைப் போற்றுவோம்; அவர் காட்டிய வழியில் செல்வோம்!
tag- விவேகானந்தர்