WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,557
Date uploaded in London – – 13 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 10
அதர்வண வேத பாடல் / மந்திரம் 25,26,27 ஆகிய மூன்றையும் படித்தால் மனிதன், மிருகங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்தையும் புலவர் குறிப்பிடுவதைக் காணலாம். இவை அனைத்திலும் உள்ள வாசனை அனைத்தும் , அதாவது நல்ல குணங்கள் அனைத்தும் என்னுள்ளே இணைய பூமா தேவி அருள் புரியட்டும் என்பது பிரார்த்தனை . “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (உறவினர்) என்ற புறநானூற்று வரிக்கும் ஒரு படி மேலே சென்றார் பாரதி.
காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம் ;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம் — பாரதி.
இவை எல்லாம் வேதத்தில் இருக்கிறது என்பதை அதற்கு முந்திய இரண்டு வரிகளில் பாரதியார் சொல்லிவிடுகிறார்.
வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் –
என்று பாடுகின்றார்
மந்திரம் 24ல் இறவாத தன்மையுடைய ‘அமர்த்யாஹா /தேவர்கள்’ என்ற சொல் வந்துவிட்டது. என்னையும் அப்படி ஆக்குக என்று வேதப்புலவன் வேண்டியதையும் கண்டோம். ஆக மொத்தத்தில் இந்த பூமாதேவியின் மேல் வசிக்கும் ஒரே இனம்! பூமி என்பது சுவாசிக்கும் ஒரு உயிர் (Earth is living; earth is breathing) என்ற கருத்து வேத காலத்திலேயே வந்துவிட்டது. இப்பொழுது ஆண்டு தோறும் ஒருநாளை ஒதுக்கி அன்னை பூமியைக் காப்பாற்றுக (Save Mother Earth Day) என்று கொண்டாடுகிறார்கள். அதை வேத காலத்திலேயே சொல்லிவிட்டார்கள் இந்துக்கள். பூமியை அன்னை என்று 63 பாடல்களில் / மந்திரங்களில் போற்றும் புலவன்/ முனிவன் ஒரு பாடலில் பூமாதேவி ‘கல் , மண் , தூசியால் ஆனவள்’ என்றும் பாடுகிறான் (காண்க மந்திரம் 26)
இதை யெல்லாம் சொல்லிவிட்டு, தாயே உன்னை வணங்குகிறேன் என்கிறார் முனிவர்/புலவர்.
அதர்வண வேத மந்திரம் 25-ஐ உற்று நோக்கினால் இது மேலும் விளங்கும் ; அதில் ஆண்கள், பெண்கள், மகன்கள் , குதிரைகள், காட்டு மிருகங்கள் , யானைகள் , தள , தள , பள பள கன்னிப் பெண்கள் — எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லும் புலவன் — இவர்களிடையே உள்ள ஒளி, வனப்பு பள பளப்பு , ஆகிய அனைத்தும் என்னுள் புகட்டும் என்று வேண்டுகிறார். காட்டு மிருகமானாலும் 16 வயது இளம் மங்கையானாலும் — அவர்கள் எல்லாவற்றிலும் ஒரு சிறப்பு உண்டு என்ற கருத்து வேத கால மக்கள் மனதில் பதிந்திருந்தது.
மந்திரம் 27-ல் தாவரங்கள் அனைத்தும் வந்து விடுகின்றன.
மந்திரம் 28 இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நிற்கும்போது, நடக்கும்போது, உட்காரும்போது, தாண்டும்போது இடது, வலது கால்கள் தடுமாறக் கூடாது என்று வேண்டுவது விநோதமாகத் தோன்றும்.
ஆனால் பிராதஸ்மரணம் என்னும் காலை வழிபாடு செய்வோருக்கு இது வியப்பாக இருக்காது. படுக்கையில் இருந்து எழுந்திருந்து பூமியில் காலை வைத்து மிதிப்பதே தவறு என்று எண்ணி, இந்துக்கள் மன்னிப்பு கோருகிறார்கள்; அவ்வளவு மதிப்பு. அதாவது இந்துக்கள் உதட்டளவில் பூமியை வெறுமனே புகழவில்லை. அடி மனத்தின் ஆழத்திலிருந்து பூமாதேவியை உயிருள்ள அன்னையாகவே மதித்தனர் ; ஆகையால் தாயே கோபித்துக் கொள்ளாதே! என் நடையும் செயல்பாடும் நன்றாகவே இருக்கட்டும் என்கிறார்.
இப்படி நமக்கு நாமே சொல்லிக்கொள்வது நமக்கு நம்பிக்கையையும் பலத்தையும் அதிகரிக்கும் ; இதை ஆட்டோ சஜ்ஜஷன் Auto Suggestionஎன்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். நம் வீட்டில் சின்னக் குழந்தைகள் “எனக்கு கணக்கு வராது , படிப்பு வராது, பாட்டு வராது” என்று சொன்னால், நாம் தைரியம் ஊட்டும் சொற்களை சொல்லுகிறோம். உடனே அவர்கள், செய்ய முடியாததை செய்கிறார்கள்; இதே போல நமக்கு நாமே நம்பிக்கை ஊட்டிக்கொள்ளும் வாசகங்கள் வேதத்தில் மிக மிக அதிகம்.
சில வரிகளை புலவர் மீண்டும் மீண்டும் சொல்வதும் இதனால்தான்; என்னை யாரும் வெறுக்கக் கூடாது என்று அவர் திரும்பத் திரும்ப சொல்லுவதில் மறறொரு செய்தியும் உளது. அதாவது நீயும் யாரையும் வெறுக்காதே; பாரதியார் வரியில் ‘உலகு இன்பக் கேணி ‘.அதையும் வேதம் சொல்வதாகவே பாரதியார் பாடுகிறார் !
இதோ சான்று
சமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னீ நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே
“ஆழி சூழ் உலக நாயகியே! மலைகளை முலைகளாக உடைய என் தாயே !
விஷ்ணுவின் மனைவியே ; உனக்கு என் பணிவான வணக்கங்கள் உரித்தாகுக :
என்னுடைய கால்களை உன்மீது வைக்கிறேன் ; அதைப் பொறுத்து அருள்வாயாகுக”
என்ற மந்திரத்தைச் சொல்லி விட்டு ஒவ்வொரு இந்துவும் எழுந்திருக்கிறான். அதற்கு முன்னர் கண்களை விழித்தவுடன் வலது கையைப் பார்த்து
கராக்ரே வசதி லக்ஷ்மி கரமத்யே சரஸ்வதி
கரமூலே து கோவிந்தஹ ப்ரபாதே கரதர்சனம்—
என்று சொல்லி கரத்தில் உள்ள எல்லா கடவுளரையும் வணங்குகிறான் . பூமியின் மீதும் தன உடலின் மீதும் மனிதக்குள்ள மதிப்பை, மரியாதையை அதர்வண வேத பூமி சூக்தத்திலும் “காலை நினைவுகள் / ப்ராத ஸ்மரணம்” என்ற துதியிலும் காண்கிறோம். (இந்த மந்திரம் சிறிது மாறுதலுடனும் சொல்லப்படும்; ஆனாலும் கடவுளர் பெயர்களில் மாற்றம் இல்லை )
கோடிக் கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இன்றும் இந்த காலை வழிபாட்டை, அவர்களுடைய ஷாகாக்களில் சொல்வது சிறப்புடைத்து.
Xxxxx
இதோ அதர்வண வேத பூமி சூக்த (AV; Book 12; Hymn 1) மந்திரங்களும் அவற்றின் பொருளும்:–
மந்திரம் 25
யஸ்தே கந்தஹ புருஷேணு ஸ்த்ரீஷு பும்ஸுஹு பாகோ ருசிஹி
யோ அஸ்வேஷு வீரேஷு யோ ம்ருகேஷுத ஹஸ்திஷு
கன்யாயாம் வர்சோ யத் பூமே தேனாஸ் மாம் அபி ஸம் ஸ்ருஜ
மா நோ த்விக்ஷத கஸ்சன -25
XXXX
மந்திரம் 26
சிலா பூமிரஸ்மா பாமஸுஹு ஸா பூமிஹி ஸம்தருதா த்ருதா
தஸ்யை ஹிரண்ய வக்ஷஸே ப்ருதிவ்யா அகரம் நமஹ -26
XXX
மந்திரம் 27
யஸ்யாம் வ்ருக்ஷஆ வானஸ்பத் யா த்ருவாஸ் திஷ்டந்தி விஸ்வஹா
ப்ருதிவீம் விஸ்வ தாயஸம் த்ருதா மச்சா வதாமஸி -27
XXX
மந்திரம் 28
உதீராணா உதாஸீனா ஸ் திஷ்டந்தஹ ப்ரராமன்தஹ
பத்ப்யாம் தக்ஷிண ஸ வ்யாப்யாம் மா வ்யதிஷ்மஹி பூம்யா ம் – 28
XXXX
பொருள் 25
உன் மணம் ஆண்களிடத்தும் பெண்களிடத்தும் உளது;
உன் ஆண்மையும் கம்பீரமும் மக்களிடத்தில் உளது;
அது வீரனிடத்திலும் குதிரையிலும் காணப்படுகிறது;
அதை வன விலங்கிடமும், யானையிடத்திலும் காணலாம்.
உன்னுடைய பிரகாசம் இளம் பெண்களிடத்தில் மிளிர்கிறது ;
இத்தனையையும் எனக்குக் கொடு ;
என்னை எவரும் வெறுக்கமால் இருக்கட்டும் -25
xxxx
பொருள் 26
மண்ணும், தூசியும், கல்லும், பாறையும் இந்த பூமியை ஒன்றுடன் ஒன்றாக உறுதிப்படச் செய்துள்ளது.
அந்த தங்க முலை உள்ள பூமிக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக – 26
Xxxx
பொருள் 27
மரங்களும் , வன தேவதையும் உறையும் , உறுதியாக நிற்கும் , அனைத்தையும் தாங்கும் அந்த பூமா தேவியை நாங்கள் போற்றுகிறோம்.-27
xxx
பொருள் 28
நாங்கள் வலது காலாலும் , இடது காலாலும் எழுந்தாலும், உட்கார்ந்தாலும், நடந்தாலும், நின்றாலும்
தடுமாறாமல் இருப்போமாகுக -28
(அதர்வண வேத 12 ஆவது காண்ட முதல் துதியில் உள்ள 63 பாடல்களில் 28 மந்திரங்களைக் கண்டோம். மேலும் தொடரும்)
To be continued…………………………………
tags- பூமி சூக்த கட்டுரை 10, பிராதஸ்மரணம், காக்கை, குருவி எங்கள் ஜாதி