WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,570
Date uploaded in London – – 17 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹரிஷி கக்ஷீவான் : விசித்திர யானை மீது வருபவரையே மணப்பேன் என்ற கன்னியை மணந்தவர்!
ச. நாகராஜன்
மஹரிஷி தீர்க்கதமஸ் என்பவரின் குமாரர் கக்ஷீவான்.
அவருக்கு உபநயனம் முடிந்த பின்னர் மஹரிஷி உதங்க முனிவரிட்ம் நான்கு வேதங்கள், சாஸ்திரங்கள், இதிஹாஸ புராணங்களை அனைத்தையும் கற்றார்.
குருகுலவாசம் முடிந்தது.
விடைபெறும் தருணத்தில் உதங்கர் கக்ஷீவானைப் பார்த்து, “ நீ உனது வீட்டிற்குப் போக அனுமதி கொடுக்கிறேன்.
உனது திருமணம் பற்றிய ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைக் கவனமாகக் கேள்.
ராம சேதுவாகிய கந்தமாதனத்திற்குச் செல். அங்கு அகஸ்திய தீர்த்தத்தில் ஸ்நானம் செய். மூன்று வருட காலம் அங்கு அனுஷ்டானங்களைச் செய்து வாசம் செய். நான்காவது வருஷம் நான்கு தந்தங்களுடனும், பருத்த சரீரம் கோண்ட சரத் கால மேகம் போன்ற வெள்ளை நிறமுடைய ஒரு பெரிய யானை அந்தப் புண்ணிய தீர்த்தத்திலிருந்து வெளியே வரும்.
அப்போது அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அதன் மீது ஏறி அமர்ந்து கொள். கவநயன் என்ற அரசனின் நகருக்குச் செல். அங்கு அவனுடைய மகளாகிய மனோரமை என்னும் கன்னி நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளையானை மீது வருபவனையே மணப்பேன் என்று சபதம் செய்திருக்கிறாள்.
அவளை நீ காண்பாய். அவளது தந்தை இந்த சபதத்தினால் பெரிதும் வருந்தி இப்படி ஒரு அபூர்வ யானை இந்த உலகத்திலேயே இல்லையே, அது தேவ லோகத்தில் அல்லவா உள்ளது என்று வருந்திக் கொண்டிருக்கிறான். அவன் இப்படி வருத்தமுற்றிருக்கையில் ஒரு நாள் நாரத மஹரிஷி அவன் இருக்குமிடம் வந்தார்.
அவரை வரவேற்று பூஜித்த மன்னன் தன் வருத்தத்தைச் சொல்லிப் புலம்பினான்.
உடனே மஹரிஷி நாரதர், “வருந்தாதே. கக்ஷீவான் என்ற பிராமணரின் மகன் உனது மகள் சொன்ன யானை மீது ஏறி வருவான். அவனுக்கு உன் பெண்ணை மணம் முடிப்பாயாக” என்று கூறி அருளினார்.” என்று இவ்வாறு உதங்க முனிவர் கூறியதைக் கேட்ட கக்ஷீவான் அவர் கூறிய படியே சேதுவிற்கு வந்து அகஸ்திய தீர்த்தத்தில் நீராடி தன் அனுஷ்டானங்களைச் செய்யத் தொடங்கினார்.
மூன்று வருடம் கழிந்தது. மூன்றாம் வருட கடைசி நாள் இரவு விடிய ஒரு ஜாமம் இருக்கும் போது ஒரு பெரிய சப்தம் உண்டாயிற்று. கடல் கொந்தளிப்பது போன்ற அந்த சப்தத்தைக் கேட்ட கக்ஷீவான் கண் விழித்துப் பார்த்தார்.
என்ன ஆச்சரியம்!
நான்கு தந்தங்களுடைய பெரிய வெள்ளை யானை அவர் அருகில் வந்து நின்றது.
அவர் உடனே தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து அந்த யானையின் மீது ஏறி அமர்ந்து கவநயனின் நகருக்குப் புறப்பட ஆயத்தமானார்.
ஆனால் அதே சமயம் மதுராபுரி மன்னனான கவநயன் காட்டுக்குச் சென்று வேட்டையாடி விட்டு தனது மந்திரி சேனையுடன் அகஸ்திய தீர்த்தம் அருகே வந்திருந்தான்.
அப்போது வெள்ளையானை மீது அமர்ந்து புறப்படச் சித்தமாகி இருந்த கக்ஷீவானைக் கண்டு மகிழ்ச்சி கொண்டான்.
நாரதர் கூறியது இவராகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணி அவரை எங்கு செல்கிறீர்கள் என்று கேட்க கக்ஷீவான் தான் கவநயன் மகளான மனோரமையை மணக்கப் போவதாகவுவும் அதற்காகக் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
உடனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட் கவநயன் அவரைத் தன் நகருக்கு வருமாறு அழைத்தான்.
கக்ஷீவான் கோரிய படி தனது புரோகிதரை தீர்க்கதமஸ் இருக்கும் இடத்திற்கு அனுப்பி அவரைத் திருமணத்திற்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தான்.
அவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பி மகனிடம் வந்து அவனை ஆரத் தழுவினார்.
அனைவரும் மதுராபுரி வந்தடைந்தனர்.
மனோரைமை தான் சபதம் செய்த படியே நான்கு தந்தம் கொண்ட வெள்ளையானை மீது வந்த கக்ஷீவானைப் பார்த்து அவரை மணக்கச் சம்மதித்தாள்.
உதங்க முனிவரும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தார்.
ஒரு நல்ல சுப முகூர்த்த தினத்தன்று திருமணம் கந்தமாதன பர்வதத்தில் நடை பெற்றது.
சீர்வரிசையாக ஏராளமான தன கனக வாகனாதிகளை கவநயன் தர அவற்றைப் பெற்றுக் கொண்டு தீர்க்கதமஸ் தன் இருப்பிடமான வேதாரண்யத்திற்கு மகனுடனும் மருமகளுடனும் வந்து சேர்ந்தார்.
மன்னன் தன் ராஜதானியான மதுராபுரி சென்றான். உதங்க முனிவரும் விடை பெற்றுக் கொண்டு தன் இருப்பிடம் ஏகினார்.
அப்போது வெள்ளை யானையானது அகஸ்திய தீர்த்தத்தில் மறைந்து போனது.
இந்த ஆச்சரியமான சரித்திரம் ஸேது மாஹாத்மியத்தில் உள்ளது.
அகஸ்திய தீர்த்தத்திற்கு இணை அகஸ்திய தீர்த்தமே தான்!
tags- மஹரிஷி, கக்ஷீவான் , விசித்திர யானை, வெள்ளையானை