WRITTEN BY DR. A. NARAYANAN, LONDON
Post No. 10,574
Date uploaded in London – – 18 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம்
( தமிழாக்கம்)
Translated into Tamil by Dr A Narayanan , London, UK
(ஆதி சங்கர பகவத் பாதர் திருவடிகளே சரணம்)
நலம் தர வேண்டுவோமோ நான்முகனும்
இந்திராதி தேவர்கள் நாடிப்போற்றும் மலை
போன்ற இடையூறுகளைக் களைய கணபதி
எனும் ஆனைமுகம் கொண்ட பால சிங்கனே 1
சொல்லும் பொருளும் அறியாதோன் இயற்றவோ
செய்யுளும் உரை நடையும் இயலான் நாவிலோ
செந்தில் முருகன் வீற்றிருக்க வருமோ வியப்பாக
சொல்லும் பொருளும் இணைந்த கவிதை 2
மலை மீதமர்ந்தோன் மறையுள் மறைந்தோன்
மனதைக் கவர்ந்தோன் சித்தத்தில் விரிந்தோன்
ஓதும் வேதத்துட்பொருளோனான முருகனும் பரம
சிவபாலனுமான லோகபாலனைத் துதிக்கிறேன் 3
முறையிட்டு வருவோரை பிறவிக்கடல்
கரை சேரவே செந்தூர் கடலோரம் கோயில்
கொண்ட சக்திக் குமரனே புனிதனான
உன் சரணையடைகின்றேன் 4
ஓங்கி எழும் அலைகள் கரை மோதி
உரு த்தெரியாப் போவது காட்டுவதோ
பெருந்துயரும் மறையும் கோயிலில்
செந்தூரான் கழலடியே கரையானதாலே 5
கந்தமா மலை முகட்டில் பந்தமாய் நின்ற
கந்தனை ஏறி வந்து அடி பணிவோர் வாழ்வு
உயர்வற உயர்நலமருளும் அறுமுகனை
அயருறா அனவரதமும் துதிப்பேனே 6
இன்னல்கள் யாவும் ஈடேறும் கடற்கரையில்
சென்னிய முனிவர்களுக்குகந்த கந்தம்
கமழும் சுகந்த மலைக்குகையில் ஒளி வீசும்
குகன் கழலடி பணிவோம் 7
மாணிக்கம் பதித்தப் பட்டு மஞ்சத்தில் வீற்று
வேண்டுவதெல்லாம் ஈன்றிடும் தேவர்களின்
தெய்வ நாயகனாய் ஆயிரம் ஆதவன் போல்
ஒளியூரும் கார்த்திகேயனே நினைவாகிறான் 8
செந்தாமரைக் கழல்களீணைந்த சதங்கைகள்
அழகும் அவையுரைத்தெழுப்பும் அமிருத தாரை
ஒலியில் சித்தம் கவரும் நித்தன் பத கமலத்தில்
மனம் துவளும் வண்டாய் மகிழ்வேனே 9
பொன் வண்ண ஆடையும் பசும்
பொன் பட்டியும் இடை தழுவிய
மேகலையின் கிங்கிணி ஒலியில்
கண் கூசக் காட்சி தரும் கந்தனே 10
கழலடிகள் பற்றுமடியார்களை காக்கும்
கந்தனே தாரகசூரனை வதைக்க வேட்டுவ
மன்னனின் வார்குழல் வஞ்சி வள்ளி குங்கு
மப்பூத்தோய்ந்த மார்பகமிருகத்தழுவ செந்
தோளனான செந்திலோனைப் பணிகிறேன் 11
பிரமனைத் தண்டித்துலகம் படைத்த கரங்களே
போர் வாரணங்களை வதைத்துப் பகைவரையழிக்க
வாசவனுக்கு வலமாயிருந்துலகம் காத்த
வலிவான கரங்களாவதால் சரணடைகிறேன் 12
முகில் காணா சரத் கால வானில் ஆறு
முழு மதிகளாய் மாசிலா ஒளியோனாய்
ஆறு சந்திரங்களுக்கொப்பானவன்
ஆறு முகங்களிணைந்த கந்தனே 13
புன்னகை பொழியும் மலர் தாமரையொத்த
ஆறுமுகங்களில் பொன் வண்டுக்கூட்டங்களய்
ஒளிரும்பார்வையும் கொவ்வைப்பழ உதடொடு
ஒழுகும் அழகன் ஆறுமுகனையே பணிகிறேன் 14
கருணையே வடிவான கந்தனே!
காதுவரை நீண்டகன்ற பன்னிரண்டு
கண்களின் கனிந்த பார்வையால் கழலடி
பணிவோரை காண உனக்கென்ன தீங்கு 15
அழகே வடிவாய் அரன் அங்கத்தினிற் தோன்றி
ஆறு முறை உச்சி முகர்ந்து அரனே ஆசி கூறி
ஆறு முகங்களில் அகமகிழ ஒளி வீசும் கிரீடங்கள்
அலங்கரித்த உலகைக்காப்போனைப் பணிகிறேன் 16
பொங்கும் மேனி அழகில் தங்கும் ரத்னத் தோள் வளைகள்
எங்கும் ஒளி வீச செவியிலசையும் குண்டலங்களிலொளிரு
மிரு கன்னங்களும் இடைத்தழுவிய மஞ்சப் பட்டாடையும் கை
தாங்கிய வேலோடு சிவபாலன் ஒழுகுக என்னகமும் புறமும் 17
குழந்தைக் குமரன் கூப்பிட்டத் தருணமேத்
தாய் மடியினின்றுத் தாவினானோ விரித்த
தந்தை இரு கைகளணைப்பில் ஆனந்தித்த
தளிர் மேனிக் குமரனைச் சரணடைகிறேன் 18
குமரனே! சிவகுமரனே! கந்தனே! சேனாபதியே!
கோலமயில்வாகனனே! குகனே!வேலனே!
வள்ளி நாயகனே!அடியார்கள் அல்லல் தீர்ப்போனே!
தாரகனை வதைத்தவனே! எம்மை என்றும் காப்பாயாக 19
அடங்கியதோ ஐம்பொறிகள் செயலற்றதாக
அடித் தொண்டை சளி வாய் வெளித்தள்ள நடுங்கி
ஆடிய உடல் அனாதையாகி மரணமெனுமச்சத்தில்
ஆட்கொள்வாயோ குகனே !என் முன்னுடனே தோன்றி 20
சினங்கொண்ட யமதூதர்கள் மரணத்தருவாயில்
சீறி வெட்டு குத்து கொளுத்து என்றென்னை
அச்சுறுத்தும்போது அஞ்சாதே என்று வேலேந்திய
ஆறுமுகனாய் மயிலேறி எனைக் காக்க வருவாயோ 21
தலைவா! என் தலையுன் தாளிணைந்து வேண்டுவதோ
நிலை குலைந்தென்னுயிர் பிரியும் இறுதி காலத்திலுன்
நினைவில் நாவேதும் நவிலாதினும் பொருட்படுத்தாது
எனைக் காப்பாயோ கருணைக்கடல் கந்தனே! 22
பத்மாசூரன் தாரகாசுரன் சிம்மமுகன் எனும் அசுரர்கள்
கொண்ட வர வலிமையில் விண்ணோரும் மண்ணோரும்
கொடுமையில் கொந்தளிக்க வேலேடுத்தவ்வசுரர்களை
வதைத்த கந்தனே! என் மனவேதனையழிய நீயே கதி 23
துயரமெனும் சுமையால் தொய்து நிற்குமெனக்குத்
தோளிணைந்த உறவினனாய் என்றுமென்னுடன்
துணைவனான உமை பாலனே! நானிரப்பதோ
தீய எண்ணங்களிடையுரா பக்திக்கருள் புரிவாயே 24
தாரகனை மாய்த்தவனின் திரு நீறு மடித்த இலைக்
கண்டவுடன் அபஸ்மாரம், மேகநோய் குஷ்டம்,காசம்,
குன்மம்,பைத்தியம் போன்ற கொடிய நோய்களும்
பிசாசுகளும் பறந்து போவது திரு நீறின் மகிமையே 25
காண்பதெல்லாம் கந்தனாக, செவி கேட்பதெல்லாம்
கந்தன் புகழாக வாய் மொழிவதவன் கீர்த்தி சரிதமாக
கந்தனுக்கே கைகள் தொண்டு புரிய காலமெல்லாம்
காயத்தை கந்தனுக்கற்பணிக்க அருள்வாயோ குகனே 26
பக்தியெனும் பாதைகள் பலவாக விருப்பத்திற்கேற்ப
பல தெய்வங்களைத் தொழுபவரோ முனிவர்களும்
சில மனிதர்களுமாக பாமரராயிழிந்தோர் பக்திக்குத்
தன்னையே தந்திடும் நீயே கண் கண்ட கடவுள்
குமரனே! உற்றாரும் உறவினர்களும் மற்றுமென்
குடும்பத்தாரும் ஆடவரும் பெண்டிரும் விலங்
குட்பட கந்தனையே சிந்தனையில் வைத்துத்
துதித்து சரணடைய அருள்வாயே 28
கிரௌஞ்ச மலையுருவாயிருந்து அல்லல்கொடுத்த
அசுரனைக் கொடும் வேலால் கொன்றது போலென்
உடல் துயருறும் மிருகங்களையும் நாய்களையும்
புட்களையும்(தீ வினைகள்)* வேலால் களைவாயோ 29
*உட்கருத்து
தாய் தந்தையர் தனையர் பிழை பொறுத்துத்
தவிர்பது போல் தேவசேனாபதியே !தரணிக்கே
தந்தையாகிய நீயுன் தனயங்களுளிச்சிறிய
தனயன் பிழைகளைப் பொறுப்பாயாக 30
கந்தனே! உன்னோடிணைந்ததில் பெருமையடையும்
கடலுமதை சார்ந்த சிந்து தேசமான செந்தூருக்கும்
வேலுக்கும் சேவலுக்கும் மயிலுக்கும் ஆட்டிற்கும்
மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள்
அளவிலாப் புகழுடன் ஆனந்த வடிவாய்
அகண்ட ஒளியாய் ஆனந்தக் கடலாய்
அனைத்துயிர்க்கும் முத்தியளிக்கும்
சக்திக் குமரனுக்கென்றும் வெற்றி
வளம்பெறவாழ்விற்கு நன் மக்களையும்
மனையாளையும் நீங்காத செல்வமும்
நீண்ட ஆயுளும் ஈன்றிடுமே குகப்
பெருமானின் இத்தோத்திரம் 33
நாராயணன்
XXXX
தைப் பூசம்
திங்களோர் பூசம்
தைத்திங்கள் தனிப்பூசம்
நேசமாய் நம்முடனிரு ந்து
தேசம் பலவற்றில்
மோசமான நோய் பீடிக்க
வீசுகின்ற வேலில்
நாசமாகுமோ பசியும் பிணியும்
தேசுடன் வாழ
பாசம் பொழிபவனோ
பழனியப்பன்
நாராயணன்
XXXX
மறையோ திரையோ
திரையின் பின் நிற்கும்
பறை தரும் நீ அறிவாயே
முறையிடுமடியார்கள் உன்
மறை முகம் கண்டு
கரை சேரும் காலம்
நிறைவாகும் பொழுதும் நீ
வரையறுத்ததுதானே
நாராயணன்
–SUBHAM—
tags- ஆதி சங்கர, சுப்ரமண்ய புஜங்கம்