WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,580
Date uploaded in London – – 20 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மீனாக்ஷி அம்மனைத் தரிசித்தவர் சொர்க்கத்திற்கே செல்வர் : புலவர் உறுதி!
ச.நாகராஜன்
பலபட்டடைச் சொக்கநாதர் சிறந்த மீனாக்ஷி பக்தர். அம்மனின் மீது எல்லையில்லா பக்தி கொண்ட அவர் மீனாக்ஷி அம்மனை தரிசித்தால் என்ன பேறு கிடைக்கும் என்பதை ஒரு பாடலில் தெரிவிக்கிறார் இப்படி:
முக்கட் பராபரை சொக்கப் பிரானெனு முன்னவனோ
டொக்கச் சிறந்த கயற்கண்ணி சந்நிதி யுற்றுமிகச்
செக்கச் சிவந்தபொற் றாமரைப் பாததெரிசனைக்கே
பக்கத் தடுத்தவர் சொர்க்கத் தினை யெட்டிப் பார்ப்பவரே
இதன் பொருள் : முக்கண் பராபரை – மூன்று கண்களையுடைய பராபரை (ஆகிய மீனாக்ஷி அம்மன்)
சொக்கப்ப்பிரான் எனும் முன்னவனோடு ஒக்க – சொக்கநாதன் என்னும் முதல்வனோடு சமமாக
சிறந்த – மேன்மை அடைந்திருக்கின்ற
கயல்கண்ணி = மீனாக்ஷியம்மையின் (அவளது)
சந்நிதி உற்று – சந்நிதிக்குச் சென்று
மிகச் செக்கச் சிவந்த – மிகுந்து செக்கச் செவேலென்று சிவப்பாக இருக்கும்
பொன் தாம்ரை – பொற்றாமரை போன்ற
பாதம் – திருவடிகளின்
தெரிசனைக்கும் – தரிசனம் செய்யும் பொருட்டு
பக்கத்து அடுத்தவர் – (அங்கு வந்து) பக்கத்து அடுத்தவர்
சொர்க்கத்தினை எட்டி பார்ப்பவர் – சொர்க்க லோகத்தை எட்டிப் பார்ப்பவராவர்!
இன்னொரு பாடலால் தன் கருத்தை வலியுறுத்துகிறார் புலவர்.
மைக்கார் குழற்பெண் வடிவாளைத் தென்னவன் மாமகளை
அக்காளை யோன் பங்கிலாத் தாளை மாறங்கை யானவளைத்
திக்கார் தொழுங்கயற் கண்ணாளை ஓர்தினஞ் சேவை செய்தால்
எக்காலமு மவர் சொர்க்காதி போகத் திருப்பவரே
ஒரே ஒரு தினம் மீனாக்ஷி சந்நிதி சென்று சேவை செய்தால் கூடப் போதும், எக்காலமும் சொர்க்க போகம் தான் என்று அறுதி இட்டு உறுதி கூறுகிறார் புலவர்.
பாடலின் பொருள்:
மை – மேகம் போன்ற
கார் – கருமை நிறமுள்ள
குழல் – கூந்தலை உடைய
பெண் வடிவாளை – பெண் உருவம் கொண்டவளை
தென்னவன் மாமகளை – பாண்டியனின் சிறந்த மகளை
அக்காளையோன் பங்கில் ஆத்தாளை – அந்த ரிஷப வாகனனாகிய சிவபிரானின் ஒரு பாகத்தில் உள்ள உலக மாதாவை
மால் தங்கை ஆனவளை – திருமாலுக்குத் தங்கையானவளை
திக்கார் தொழும் கயல் கண்ணாளை – திக்கிலுள்ளோர் அனைவரும் தொழும் மீன் போன்ற கண்களை உடையவளை
ஓர் தினம் சேவை செய்தால் – ஒரே ஒரு தினம் சேவித்தால்
எக்காலமும் – எந்தக் காலத்திலும்
அவர் – அப்படிச் சேவித்தவர்
சொர்க்காதி போகத்து இருப்பவரே – சொர்க்க முதலாகிய போக பூமிகளில் இருப்பவர் ஆவார்.
தேவியின் பெருமை, தேவியைத் துதிப்பதால் ஏற்படும் நற்பயன் ஆகியவற்றைச் சொல்லும் பலபட்டடைச் சொக்கநாதரின் பக்தியின் ஆழம் வெளிப்படும் பாடல்கள் இவை.
மீனாக்ஷி அம்மனைத் துதிப்போம்; சொர்க்க போகம் அனுபவிப்போம்!
tags – பலபட்டடைச் சொக்கநாதர், புலவர், பக்தர், மீனாக்ஷி