புலவரின் குறும்பு: திரௌபதி, மாமனாரைத் தழுவிய பாடல் (10,586)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,586

Date uploaded in London – –   22 JANUARY  2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; 

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புலவரின் குறும்பு : திரௌபதி மாமனாரைத் தழுவிய பாட்டை எழுதிய அந்தகக் கவி வீரராகவ முதலியார்!

ச.நாகராஜன்

புலவர்களுக்கே குறும்பு சற்று அதிகம்; அவர்களது கற்பனையோ விண்ணையும் தாண்டிச் சிறகடித்துப் பறக்கும்.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார் அற்புதமான பாடல்களை அவ்வப்பொழுது சமயத்திற்கேற்றபடி எழுத வல்லவர்.

அவர் இயற்றிய பாடல் இது:

கோளரவேந் துலகிலிந்தப் புதுமையுண்டே வெனமொழிந்த குமுணா கேளாய்,

ஆளரைவந்தமைத்தோய்ந்த கற்புடை பாஞ்சாலி யனைந்த வீமன்,

வாளரிபோலருகிலிருக்க மலயவெற்பிலிருந்து வந்த மாமனாரைச்,

சாளரவாசலைத் திறந்து வரவழைத்து முலையாரத் தழுவினாளே.

கற்பில் சிறந்த திரௌபதி சாளர வாசலைத் திறந்து வைத்து மாமனாரை வரவேற்றுத் தழுவினாள்.

தூக்கி வாரிப் போடுகிறது, இதைக் கேட்டு.

பாடலின் பொருளை ஆழ்ந்து கவனித்தால் புலவரின் குறும்பும் அவரது அபார கற்பனை வளமும் தெரிய வரும்.

பொருளைப் பார்ப்போம்.

கோள் அரவ ஏந்து உலகில் – மிகுந்த வலிமை வாய்ந்த பாம்பாகிய ஆதிசேஷனால் தாங்கப்பட்ட இந்த உலகத்தில்,

இந்தப் புதுமை உண்டோ என மொழிந்த குமுணா, கேளாய் – இந்த ஆச்சரியமுண்டோ என்று கேட்ட குமுணனே, கேட்பாயாக

ஆளர் ஐவர் தமைத் தோய்ந்த – ஐந்து கணவரைத் தழுவிய

கற்பு உடைய பாஞ்சாலி – கற்பிலே சிறந்தவளாகிய பாஞ்சாலியை (திரௌபதியை) 

அணைந்த வீமன் – தழுவிய பீமன்

வாள் அரி போல அருகு இருக்க – ஒளியுள்ள சிங்கம் போல அருகே இருக்க,

மலய வெற்பில் இருந்து வந்த மாமனாரை – பொதிய மலையிலிருந்து வந்த மாமனாரை

சாளர வாசலைத் திறந்து – ஜன்னலைத் திறந்து

வரவழைத்து – உள்ளே வரும்படி அழைத்து

முலையாரத் தழுவினாளே – தன் மார்பகத்தில் சேர்த்துத் தழுவினாள் திரௌபதி!

இங்கு மாமனார் என்று புலவர் குறிப்பிடுவது தென்றல் காற்றை. பொதியம்லையிலிருந்து வீசும் தென்றல் காற்றை திரௌபதி தழுவினாள்.

வாயுவானவர் பீமனுக்குத் தந்தை. ஆகவே அவர் திரௌபதிக்கு மாமனார்.

அவரை ஆரத் தழுவினாள் ; அதாவது மாமனாரான வாயு தேவனை ஜன்னல் வழியே வரவழைத்து திரௌபதி தழுவினாள்.

புலவர் திருமாலைத் துதிப்பதிலும் கூடத் தன் கவித் திறமையைக் காண்பிக்கத் தவறவில்லை.

சோனையுங் காத்து நல் லானையுங் காத்துத் துரோபதைதன்

தானையுங் காத்தடைந் தாளையுங் காத்துத் தடத்தகலை

மானையுங் காத்ததனு மானையுங் காத்து மடுவில் விழும்

ஆளையுங் காத்தவ னேயெனைக் காப்ப தரிதல்லவே.

பாடலின் பொருள் :

சோனையுங் காத்து – சோனை மழையைத் தடுத்து

நல் ஆனையும் காத்து – நல்ல பசுக்களையும் காத்து

துரோபதை தன் தானையும் காத்து – திரௌபதியினுடைய ஆடையையும் காத்து

அடைந்தானையும் காத்து – தன்னைச் சரணம் அடைந்தவனையும் காத்து

தடத்து அகலிமானையும் காத்து – சென்ற வழியில், அகலிகை என்பாளையும் காத்து

அனுமானையும் காத்து – அநுமானையும் காத்து

மடுவில் விழும் – (முதலையால் கவ்வப்பட்டு) மடுவிலே விழுந்த

ஆனையும் காத்தவனே – கஜேந்திரன் என்னும் யானையையும்  காத்து அருளியவனே

எனைக் காப்பது அரிதல்லவே – என்னைக் காப்பது உனக்கு அருமை அல்லவே!

இங்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றன.

சோனை காத்தது – கிருஷ்ணாவதாரத்தில் கோவர்த்தன கிரியை குடையாகத் தூக்கி கல் மழையைத் தடுத்தது முதலில் குறிப்பிட்டப்படுகிறது.

ஆனை காத்தது – பசுக்களை மேய்த்து அவற்றைக் காத்தது

அடைந்தானைக் காத்தது – ராமாவதாரத்தில் தன்னை அடைக்கலம் என்று சரணாகதி அடைந்த விபீஷணனைக் காத்தது

அகலிமானையும் காத்தது – கல்லாய் இருந்த அகலிகையையும் சாபம் தீர்த்து பெண்ணாய் ஆக்கியது

அனுமானையும் காத்தது – அனுமானை ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவராக ஆக்கியது.

இப்படி ஏராளமான வரலாறுகளை ஒரே பாட்டில் சுட்டிக் காட்ட வல்ல அரும் புலவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார்!

***

tags-  அந்தகக் கவி, வீரராகவ முதலியார், புலவரின் குறும்பு , திரௌபதி, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: