WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,613
Date uploaded in London – – 31 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாடைக் காற்று சுடுகின்ற வேளை!
ச.நாகராஜன்
வாடைக் காற்று அங்கும் இங்கும் அலைந்து திரிகிறது.
ஈங்கையின் மொட்டுக்கள் உள்ளனவே அவை உருகிய அரக்கைப் போல நிறத்தைக் கொண்டவை.
வட்ட வடிவமான நிறத்தைக் கொண்டவை.
அவற்றோடு விளங்கும் பஞ்சு போன்ற தலை பாகத்தை உடைய புதுப்பூக்கள் மலரின் மதுவைச் சுரக்கும்.
அந்தத் தேன் துளிகள் சொட்டுச் சொட்டாகக் கீழே விழும்.
அது பறந்து வருகின்ற வாடைக் காற்றோடு கலக்கும்.
புது மழை பெய்த காலம் அது. ஆகவே, நாளும் ஏரிட்டு உழுத கழனி முழுதும் புது நீர் நிரம்பி இருக்கும்.
அந்த ஈரமான நீரில் வாடைக் காற்று பட்டு, அலையும்.
அது மட்டுமல்ல, பெரிய ஊரின் வெளிப்பக்கமும் பறந்து அனைத்தையும் தழுவிக் கொள்ளும்.
இப்போது வாடைக் காற்று மிகக் குளிர்ச்சி பொருந்தியதாக ஆகி விட்டது!
தண் என்ற இந்தக் காற்று என் மேனியை நோக்கி அல்லவோ வருகிறது!
ஏ, வாடைக் காற்றே! உனக்கு எப்போதாவது நான் தீங்கு செய்வதற்கு மனதால் கூட நினைத்ததில்லையே!
மூங்கில் போன்றது என் இளம் தோள்கள். அவை பெருத்த தோள்கள்.
என்னை அணைத்து என் ஒளி பொருந்திய வளைகளை நெகிழச் செய்தவர் என்னவர்! என் காதலர்!
அவர் பொருள் சம்பாதித்து வருகிறேன் என்று போனாரே, என்னைப் பிரிந்து அல்லவா போய் விட்டார்.
அதனால் துணை இன்றித் தவிக்கிறேனே நான்!
யாருமில்லாமல் ஒரு பக்கமாய்த் தனித்திருந்து, சிறையில் இருப்பது போல வாடுகின்றேனே!
ஏற்கனவே இப்படி வாடி இருக்கும் என்னை, வாடைக் காற்றே,
இன்னும் சிறிது வருத்தாதே!
தலைவி உள்ளம் கலங்கிப் பாடுகின்ற பாடல் இது.
நற்றிணையில் 193வது பாடலாக மலர்கிறது இது:
“அட்டரக்கு உருவின் வட்டுமுகை ஈங்கைத்
துய்த்தலைப் புதுமலர்த் துளிதலைக் கலாவ
நிறைநீர்ப் புனிற்றுப்புலம் துழைஇ ஆனாய்
இரும்புறம் தழூவும் பெருந்தண் வாடை!
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே!
பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்தவெம் காதலர்
அருஞ்செயல் பொருட்பிணிப் பிரிந்தனராக
யாருமில் ஒரு சிறை இருந்து
பேரஞர் உறுவியை வருத்தா தீமே!”
வட்டு – வட்டம் ; ஈங்கை – ஈங்கை மலர்; புனிற்றுப் புலம் – ஏரினால் உழுத கழனி; இரும்புறம் – ஊரின் பெரிதான வெளிப்பக்கம்; இன்னொரு பொருள் – தலைவியின் நீளமான கூந்தல் தாழ்ந்து தொங்கியபடி இருக்கும் பின் பக்கம்!
ஒரு பெண்ணின் உள்ளத்தைப் பிட்டுப் பிட்டு வைக்கும் பாடல் இது.
ஈங்கை மலர் குளிர் காலமாகிய ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மலரும் தன்மை கொண்டது! ஆக தலைவி பாடுவது குளிர் காலத்தில் என்று ஆகிறது.
வாடைக் காற்றே, என்னை வருத்த வந்து விட்டாயே,
போ, போ, என்னைப் பிரிந்தாரே, என் காதலர் அவரைப் போய் வருத்து. என் ஞாபகத்தை ஊட்டு, அவருக்கு!
தென்றலும் வாடையும் தலைவனும் தலைவியும் சேர்ந்து இருக்கும் போது உடல் சூட்டைத் தணிக்கும்.
ஆனால் தனித்து இருக்கும் போது தண்ணிய காற்று உடம்பை நடுங்க அல்லவோ வைக்கிறது.
உடலை மட்டுமா நடுங்க வைக்கிறது, உள்ளத்தையும் அல்லவா நடுங்க வைக்கிறது!
சங்கத் தமிழ் தரும் ஆயிரக்கணக்கான காதல் காட்சிகளில் மாட்சி மிக்க காட்சி இது!
***
tags- வாடைக் காற்று, நற்றிணை,
kps710
/ January 31, 202231.01.2022
In my school days/when I was in 6th standard(1953-54),in Tamil prose, I
remember a similar song which goes as under –
naaraai naaraai, chengal naarai,
panamapdu kizhayin cengaal naarai … etc.
If I can remember correctly, it means / Hey Bird, with red legs, split
nose, tell my mate, I a, here to earn and am suffering for not being with
you.. etc.
Tamil and Vedas
/ February 2, 2022YES. THAT IS CORRECT. BUT THAT SHATHTHI MUTRATHU PULAVAR COPIED WHAT IS SAID IN PURANANURU VERSE, ANNA CHEVAL, ANNA CHEVAL…… WITH THE SAME MEANING. BUT INSTEAD OF NARAI, IT IS ANNAM=SWAN. HE COPIED IT FROM MEGHADUTAM OF KALIDASA WHERE HE SAYS OH YE SWANS U R ALL LEAVING DASARNAM COUNTRY AND FLYING TOWARDS THE MANASA SAROVAR LAKE IN THE HIMALAYAS. IT IS ABOUT BIRD MIGRATION. DASARNAM = MAY BE CHATTISGARH SAYS RESEARCHERS.