வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி! (10,619)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,619
Date uploaded in London – – 2 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!
நல்லதிலும் தவறு; கேட்டிலும் உறுதி!
ச.நாகராஜன்

வள்ளுவரின் குறளை தினமும் ஓதி உணர்தல் வேண்டும். அப்போது
நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) என்பது என்ன என்று தெரியும்.
நல்ல செய்கை, தீய செய்கை பற்றிச் சொல்ல வருகிறார் வள்ளுவர்.
நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை
(குறள் 469 – தெரிந்து செயல் வகை அதிகாரம்)
நன்று ஆற்றல் என்பது பொதுவாக எல்லோருக்கும் கொடுத்தலையும் எல்லோரிடமும் இன்சொல் பேசுவதையும் குறிக்கும்.
ஆனால் அதைக் கூடப் பார்த்துச் செய் என்கிறார் வள்ளுவர்.
ஒவ்வொருவருடைய பண்பு அறிந்து பின்னர் ‘நன்று ஆற்றலை’க் கடைப்பிடி என்கிறார் அவர்.
ஒருவர் பெறுவதற்கு உரியர் அல்லார் எனில் கொடுக்காதே; இன்சொல் பேசாதே என்பது அவரது அறிவுரை.
அப்படி நல்ல செய்கையிலும் கூட தவறு உண்டு – பார்த்துச் செய்யாவிட்டால்!
ஒவ்வொரு சிறு செய்கையிலும் கூட உன்னிப்பாக நமது கவனம் இருக்க வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி!

ஆகவே இனிய உளவாக இன்னாத கூறல் (குறள் 100) கனி இருக்க காயை நுகர்வது போல என்று சொன்னாலும் யாரிடம் எதைச் சொல்ல வேண்டும், எவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் ஜாக்கிரதையாக இரு என்கிறார் வள்ளுவர்.

இனி அடுத்து நல்ல செய்கையை விடுத்து கேட்டிற்கு வருவோம்.
இப்போது பார்க்க வேண்டிய குறள் 796. (நட்பு ஆராய்தல் அதிகாரம்)
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
கேடு என்பது அளக்கும் ஒரு கருவி என்கிறார் வள்ளுவர்.
கேட்டிலும் கூட பெறக் கூடிய ஒரு நல்லறிவு உண்டு.
நமது நண்பர்களை எப்போது அளப்பது? எப்படி அளப்பது?
கேடு வரும் காலை எவன் ஒருவன் நமக்கு உதவிக்கு வருகிறான் என்று பார்.
நல்ல காலத்தில் கூட இருப்பவர் ஆயிரம் பேர்.
ஆனால் கெட்ட காலத்தில் உடுக்கை இழந்தவன் கை போல எவன் வருகிறான் – அவனே நண்பன்!
ஆக கேடு கூட ஒருவகையில் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு உதவி செய்யத் தான் செய்கிறது.

சரி, தவறு என்பதை எப்போதும் கவனிக்க வேண்டுமா?
இல்லை, ஐயா, கணவன் – மனைவி உறவு என்பது வேறு.
தலைவன் – தலைவி கூடும் போது உள்ள காதல் அகராதி வேறு.

வள்ளுவர் கூறுகிறார்:
புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் குறள் 1286இல்!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

கணவனைப் பார்க்கும் போது அவனிடம் ஒரு தவறு கூட இல்லை; தவறைப் பார்க்கவே முடியாது. அவனுடன் இன்பமாய் இருப்பது தவிர வேறொரு நினைப்பும் கிடையாது.
ஆனால் அவன் சற்று வேறிடம் சென்று விட்டால் அவனிடம் நினைப்பதற்கு ஒரு நல்லது கூட இல்லை. எல்லாம் தவறாய்த் தான் தெரிகிறது!
என்ன விசித்திரம்!!
தவறில் கூட அகராதியில் பொருள் வேறு படுகிறது.
உறவெல்லாம் கணவன்-மனைவி உறவு போல ஆகுமா?
இன்னும் 1154, 1321, 1325 ஆகிய குறள்களில் வரும் ‘தவறு’ குறள்களையும் ஒரு பார்வை பாருங்களேன்!

இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு (குறள் 1321 ஊடல் உவகை அதிகாரம்)
தோழி கேட்கிறாள் : ஏன் இப்படி உன்னவரை இப்படித் தவறாகச் சொல்கிறாய் என்று.
பதில் வருகிறது தலைவியிடமிருந்து : “அவரிடம் தவறு இல்லை. என்றாலும் கூட இப்படி தவறு என்று சொல்வதால் அவர் தரும் இன்பம் பேரின்பம் ஆக இருக்கிறதே” ஆகவே ஊடுதல் சரியே. அது பின்னால் கூடும் போது எல்லையற்ற இன்பத்தை அல்லவா அளிக்கிறது!” – இதுவே தலைவியின் பதில்!

தவறு இலர் ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கொன்று உடைத்து
(குறள் 1325 ஊடல் உவகை அதிகாரம்)

தலைவி வேண்டுமென்றே தலைவனிடம் சிறிதோ பெரிதோ ஒரு தவறைச் சுட்டிக் காட்டுகிறாள்.
தலைவன், அங்கு பேசவா முடியும்!
ஊடலுக்கு ஒரு காரணம்.
பேசாமல் இருப்பது மென் தோள் வீழ்வாரது வழி.

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியார்க்கு உண்டோ தவறு
(குறள் 1154 – பிரிவு ஆற்றாமை அதிகாரம்)

உன்னைப் பிரிய மாட்டேன், பயப்படாதே என்று பார்த்த முதல் நாளே சொன்னவர் தாமே பிரிந்து சென்றால், அவருக்குத் தான் தவறே அன்றி அதை உண்மை என்று நம்பியவர்க்கு தவறு (குற்றம்) உண்டோ?
யாரிடம் இருக்கிறது தவறு?

ஆக இப்படி வள்ளுவரை ஊன்றி அவர் சொல்லும் சொற்களின் கூடவே சென்றால் நாம் பெறுவது பேரின்பம்.
பல அகராதிகளை நாம் அவரிடம் காண்கிறோம். அத்தனையும் உண்மையான அகராதிகளே!


tags– வள்ளுவர் , ஊடல்-கூடல்,  அகராதி

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: