WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,623
Date uploaded in London – – 3 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நான் யார்? ரமண மஹரிஷியின் நூல்!
ச.நாகராஜன்
சிறிய புத்தகம்; ஆனால் பெரிய தத்துவம்; வாழ்க்கையின் பயனை எப்படிப் பெறுவது என்பதை விளக்கும் நூல்!
86 பக்கத்தில் ஒரு பெரும் மஹரிஷி தரும் அருளுரை – நான் யார் என்னும் பகவான் ரமண மஹரிஷியின் அரும் நூல்.
1901இல் ஒரு அறிஞர் தன் மனதை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வியை திருவண்ணாமலையில் அரும் தவம் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் கேட்டார்.
அந்த இளைஞனோ மௌன தவத்தை மேற்கொண்டிருந்தார் அப்போது.
ஆகவே அவர் கேள்விகளுக்கு மணலில் தன் பதிலை எழுதிக் காட்டினார்.
அந்த இளைஞர் தான் பகவான் ரமண மஹரிஷி.
அவரது அபூர்வ மணல் எழுத்துக்கள் பின்னால் புத்தகமாக வெளி வந்தது.
அந்த ஒரிஜினல் நூல் தான் இது. இந்த நூலின் சிறப்பே அவர் மணலில் எழுதியதை அப்படியே தருவது தான்!
பகவான் ரமண மஹரிஷியின் வரலாற்றுச் சுருக்கம், அவரது வாழ் நாள் சம்பவங்கள், நான் யார் என்ற 28 அத்தியாயங்கள் கொண்ட கேள்வி- பதில் நூல் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த நூலை உடனடியாக ரமண அன்பர்களும் இதர ஆன்மீக கருத்துக்களில் நாட்டம் கொண்ட அன்பர்களும் வாங்கிப் படிக்கலாம்.
நான் யார் என்று ஆரம்பித்து முக்தி என்றால் என்ன என்பதில் முடிகிறது இந்த நூல்.
அறிவின் சொரூபமென்ன, சொரூப தரிசனம் எப்போது கிடைக்கும், மனதின் சொரூபமென்ன, மனம் எப்படி அடங்கும், விசாரணை எதுவரையில் வேண்டும் உள்ளிட்ட 28 கேள்விகளுக்குப் பதிலை பகவானின் கையெழுத்தால் எழுதிக் காண்பிக்கப்பட்ட விடைகளை உள்ளது உள்ளபடி காண்பதே ஒரு பெரும் பாக்கியமாகும்.
இதை வெளியிட்டிருப்பது ஓபன் ஸ்கை பிரஸ் (OPEN SKY PRESS) என்ற லண்டனை இயங்கு தளமாகக் கொண்ட பிரபலமான புத்தக வெளியீட்டு நிறுவனம்.
இதன் தலைமை ஸ்தானத்தில் இருப்பவர் ஜான் டேவிட் என்னும் ரமண பக்தர்.
ஓபன் ஸ்கை பிரஸ் பற்றி இணைய தளத்தில் சென்று பார்த்தால் பிரமிக்க வைக்கும் தகவல்களைப் பெறலாம்.
இந்தப் புத்தகத்தை உருவாக்கும் பணியில் அடியேனும் ஈடுபட்டது ஒரு அபூர்வமான சம்பவம் தான்.
தமிழ் எழுத்துக்கள் – கணினியில் உள்ள FONT எழுத்துரு பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வந்த மெயிலில் ஆரம்பித்து புத்தகம் இறுதியாக வெளி வரும் வரை ராம சேதுவிற்கு அணில் ஆற்றிய எளிய பணி போல என்னாலும் சிறிது உதவ முடிந்தது.
இதில் டிஸைன் பகுதியை – வடிவமைப்பை – இன்றைய நவீன வடிவமைப்புக்கான மென்பொருளைக் கொண்டு உதவி செய்ய முடியுமா என்று சென்னையில் உள்ள நண்பரைக் கேட்ட போது உடனடியாக அவர் உதவி செய்தார்.
அவர் தான் K G சீனிவாசன். பாக்யா வார இதழில் பணி புரிந்த காலத்திலிருந்து சுமார் 18 ஆண்டுகளாக இவரை எனக்குத் தெரியும்.
இவரது உதவியும் இதில் உள்ளது.
புத்தகத்தின் அச்சுத்தரம் மேலான ஒன்று. ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்திற்கான பல விளக்கங்களை என்னிடம் கேட்டவர்
Ole Kristian Myren என்பவர். அடுத்து இந்தப் புத்தகத்தின் வெளியிடுவதை நேரில் மேற்பார்வை பார்க்க இந்தியாவிற்கு வந்தவர் ஓம்.
இவர்கள் காட்டிய அக்கறைக்குத் தகுந்தவாறு அபூர்வமான இந்த நூல் வெளி வந்திருக்கிறது.
பகவான் ரமணரின் அருள் லீலைகள் காலம் காலமாகத் தொடரும் என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல சான்று.
இந்த நூலைப் பற்றி அறிய ஆர்வமுள்ள அன்பர்கள் HYPERLINK “http://www.openskypress.com/”www.openskypress.com இணையதளத்திற்கு வருகை புரிந்து நூல் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ரமண மஹரிஷி அடிகள் போற்றி!
tags- நான் யார் ? ரமணர்