WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,637
Date uploaded in London – – 7 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹரிஷி ததீசி! – 2
ச.நாகராஜன்
ததீசி மஹரிஷிக்கு, பதிவ்ரதையான லோபாமுத்ரை என்ற பத்தினி இருந்தாள். அவளுக்கு வடவை என்று இன்னொரு பெயரும் உண்டு. தனது பத்னியுடன் இணைந்து செய்ய வேண்டிய ஔபாஸனம் அக்னிஹோத்ரம், பிதுர்க்கள், தேவர்கள், அதிதிகள் பூஜை ஆகியவற்றை அவர் நியமம் தவறாது செய்து வந்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் அசுரர்களை ஜெயித்த பின்னர் ஒரு நாள் மிகுந்த சந்தோஷத்துடன் அவர் ஆசிரமத்திற்கு வந்தனர்.
ருத்ரர்கள், ஆதித்யர்கள் அஸ்வினி தேவர்கள், இந்திரன், விஷ்ணு, எமன் அக்னி உள்ளிட்டோர் இவர்களில் அடங்குவர்.
அவர்கள் அனைவரையும் தனித்தனியே உபசரித்து பத்தினியுடன் தகுந்த மரியாதை செய்தார் ததீசி.
இதனால் மகிழ்ந்த தேவர்கள் அவரைப் பார்த்து, “ ஓ! மஹரிஷியே! கற்பக விருக்ஷம் போல நீர் விளங்குகிறீர்.
மனிதர்களுக்கு புண்யதீர்த்த ஸ்நானம், பிராணிகளிடத்து அன்பு, உம் போன்ற மகான்களுடைய தரிசனம் ஆகிய மூன்றும் ஜென்ம பந்தத்தினால் ஏற்படுகின்றன. நாங்கள் கொடிய ராக்ஷஸர்களை வென்று இங்கு வந்திருக்கிறோம். இனி எங்களுக்கு இந்த ஆயுதங்களினால் எந்த ஒரு வித பயனும் இல்லை. இந்த ஆயுதங்களைக் காப்பாற்றவும் சக்தி இல்லாதவர்களாக இருக்கிறோம். தேவ லோகத்தில் வைத்தால் அதை ராக்ஷஸர்கள் அறிந்து அவற்றைக் கைப்பற்றி பாதாள லோகம் கொண்டு சென்று விடுவர். ஆகையால் உமது ஆசிரமத்தில் அனைத்து ஆயுதங்களையும் வைக்கிறோம்.
இங்கு அசுரர்கள் பயமே கிடையாது. உமது ஆக்கினையால் இந்த புண்ய பிரதேசம் ரக்ஷிக்கப்பட்டு வருகிறது, இதைப் பத்திரமாக பாதுகாத்து வாருங்கள். எங்களுக்கு உத்தரவு கொடுங்கள். நாங்கள் எங்கள் லோகத்திற்குச் செல்கிறோம்” என்றனர்.
உடனே, ததீசி முனிவர், “சரி, அப்படியே ஆகட்டும்” என்றார்.
உடனே அவரது மனைவி குறுக்கிட்டு, “ விபரீதத்தை உண்டு பண்ணும் தேவர்களின் காரியத்தினால் என்ன பயன்?” என்று அவரைத் தடுத்தாள்.
“இதனால் ராக்ஷஸர்கள் உங்களுக்கு விரோதிகளாக ஆவார்கள். அந்த ஆயுதங்கள் சேதமடைந்தாலோ அல்லது அபகரிக்கப்பட்டாலோ தேவர்கள் கோபித்து நம் மீது பகைமை கொள்வார்கள். அவர்களுடைய சொத்து நமக்கு எதற்கு? ஆகவே இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டாம்” என்றாள்.
ததீசி தன் மனைவியை நோக்கி, “முதலில் சரி என்று சொல்லி விட்டேன். இப்போது மாட்டேன் என்று சொல்வது சரியல்ல” என்றார்.
லோபாமுத்ரை, ‘மனிதர்கள் விஷயத்தில் தெய்வம் ஒன்றே ஸர்வ வல்லமை கொண்டதாக இருக்கிறது’ என்று நினைத்தவாறே பேசாமல் இருந்தாள்.
பின்னர் ததீசி தனது தவத்தைத் தொடர்ந்தார். ஆயிரம் வருடங்கள் கழிந்தன.
ஒரு நாள் ததீசி முனிவர் தன் மனைவியை நோக்கி, “ இந்த ஆயுதங்களைத் தேவர்கள் இதுவரை கேட்கவில்லை. இவற்றை என்ன செய்வது?” என்று கேட்டார்.
“நான் தான் முன்னமே சொன்னேனே! இப்போது எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள்” என்றாள் லோபாமுத்ரை.
ததீசி முனிவர் வேத மந்திரங்கள் ஓதி புண்ய தீர்த்தத்தினால் அந்த ஆயுதங்களைச் சுத்தி செய்து எல்லா அஸ்திரங்கள் சொரூபமாக உள்ள அந்த தீர்த்தத்தைப் பருகினார். ஆயுதங்களின் சக்தியை இப்படி அவர் பானம் செய்ய, வெளியில் இருந்த ஆயுதங்கள் சிதிலமடைந்தன.
பின்னர் ஒரு சமயம் தேவர்கள் அவரிடம் வந்து, “எதிரிகளின் பயம் இப்போது எங்களுக்கு வந்து விட்டது. எங்களின் ஆயுதங்களைத் திருப்பித் தாருங்கள். அதைப் பெற்றுச் செல்லவே இங்கு வந்திருக்கிறோம்” என்றனர்.
ததீசி மஹரிஷி தேவர்களை நோக்கி, “நெடுங்காலமாக நீங்கள் வரவில்லை. அசுரர்கள் பயமும் இருக்கிறது. ஆகவே அந்த ஆயுதங்களை நான் சாப்பிட்டு விட்டேன்” என்றார்.
தேவர்கள், “இப்படிச் சொல்வது உமக்குத் தகாது. நீரோ தபஸ்வி. ஆகவே ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்றனர்.
முனிவரோ, “ அவை என்னுடைய எலும்புகளில் உள்ளன. வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். சந்தேகப்பட வேண்டாம்” என்றார்.
தேவர்கள் மீண்டும் மீண்டும் ஆயுதங்களை வற்புறுத்திக் கேட்டனர்.
ததீசி, “நான் யோக நிலையில் இருக்கிறேன். எனது பிராணனை சரீரத்திலிருந்து விடுவிக்கிறேன். உங்களுடைய அஸ்திரங்கள் எல்லாம் என் எலும்புகளாய் மாறி இருக்கின்றன. அவ்வெலும்பைக் கொண்டு அஸ்திரங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள்” என்றார்.
தேவர்கள், “அப்படியே செய்யுங்கள்” என்றனர்.
பத்மாசனத்தில் அமர்ந்து யோக நிலையில் ததீசி தன் பிராணனைப் பிரித்தார்.
தேவர்கள் விஸ்வகர்மாவை நோக்கி ஆயுதங்களைச் செய்ய வேண்டும் என்றனர். விஸ்வகர்மாவோ இப்படிப்பட்ட உத்தமமான பிராமணரின் சரீரத்தைப் பிளந்து ஆயுதங்களைச் செய்ய என் மனம் நடுங்குகிறதே” என்றார்.
அவரது மறுப்பைக் கேட்ட தேவர்கள் பசுக்களைப் பார்த்து, “உங்கள் முகங்களை உங்களின் நன்மைக்காக வஜ்ஜிரம் போல வலிமை உள்ளதாகச் செய்கிறோம். நீங்கள் ரிஷியின் சரீரத்தைப் பிளந்து எலும்புகளை எடுத்துச் சுத்தமாக்கித் தாருங்கள்” என்றனர்.
பசுக்களும் எலும்புகளை ததீசி மஹரிஷியின் சரீரத்திலிருந்து எடுத்து தங்கள் நாக்குகளினால் நக்கிச் சுத்தமாக்கித் தந்தன.
விஸ்வகர்மா தேவர்களுக்கான ஆயுதங்களை அந்த எலும்புகளிலிருந்து தயார் செய்து கொடுத்தார்.
அப்போது ததீசியின் மனைவியான லோபாமுற்றை கர்ப்பவதியாக இருந்தாள். புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு வந்த அவள் தன் ஆஸ்ரமத்திற்கு விரைவாகத் திரும்பி வந்தாள் – கணவரைக் காண.
வழியில் அவள் கழுத்திலிருந்த கண்டாபரணமும், கையில் இருந்த கடகாபரணங்களும் நழுவி விழுந்தன.
இதனால் மிகுந்த வருத்தமடைந்தாள் அவள். அவளது வலது கண்கள் துடிக்கத் தொடங்கின.
என்ன கெடுதி நேரப் போகிறதோ என்று அவள் எண்ணிய போது ஆகாயத்திலிருந்து ஒரு கொள்ளிக்கட்டை அவள் முன் விழுந்தது.
ஓடோடி ஆஸ்ரமத்திற்கு வந்த அவள் தன் கணவரைக் காணாது தவித்தாள். அக்னி தேவரைத் துதித்து, “என் கணவர் எங்கே” என்று கேட்க அக்னி நடந்தது அனைத்தையும் விவரமாகக் கூறினார்.
இதைக் கேட்ட அவள் துக்கம் தாளாமல் பூமியில் விழுந்தாள்.
இதோ, இப்போதே நான் அக்னி ப்ரவேசம் செய்கிறேன் என்றாள் அவள்.
தனது கோபத்தை அடக்கிக் கொண்ட அவள், “ இந்த உலகத்தில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறக்கத் தான் வேண்டும். எவர் ஒருவர் தனது சரீரத்தை தேவர்கள், பிராமணர்கள், பசுக்கள் விஷயமாய் விடுகிறாரோ அவரே பாக்கியவான். நான் தடுத்த போதிலும் தேவர்களின் ஆயுதங்களைக் காப்பாற்ற அவற்றை என் நாயகர் வாங்கி வைத்துக் கொண்டார். தெய்வத்தின் திருவிளையாடலை யாரால் அறிய முடியும்?” என்று கூறினாள்.
அக்னியை சாஸ்திர விதியின் படி பூஜித்தாள்.
பின்னர் தன் கர்ப்பத்தைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்தாள்.
“ஹே! லோகபாலகர்களே, மிருகங்களே, பக்ஷிகளே, மரங்களே, செடிகளே, கொடிகளே! நீங்கள் தாம் தாய் தந்தை இல்லாத இந்த அனாதைக் குழந்தையை ரக்ஷிக்க வேண்டும். எவர்கள் அடுத்தவர் குழந்தையைத் தம் குழந்தை போல எண்ணிக் காப்பாற்றுகிறார்களோ அவர்கள் பிரம்மா முதலிய தேவர்களாலும் வணங்கிக் கொண்டாடப்படத் தக்கவர்கள்” என்று கூறிய லோபாமுத்ரை அக்னியை பிரதக்ஷிணம் செய்து அக்னி ப்ரவேசம் செய்தாள்.
தனது கணவருடன் சொர்க்கம் சென்று சேர்ந்தாள்.
மரங்களும் செடிகளும் கொடிகளும் மிருகங்களும் பக்ஷிகளும் மிகவும் துக்கப்பட்டன. நம்மை இதுவரை காப்பாற்றி வந்த இவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே” என்று கதறின.
அந்த மரங்களால் வளர்க்கப்பட்டவரே பிப்பலாதர்.
அவரது சரித்திரம் மகத்தானது.
இன்று வரை ததீசி முனிவரின் தியாகம் பாரத மக்களால் போற்றப்பட்டு வருகிறது.
அவரை வணங்கிப் போற்றுவதை ஒவ்வொரு பாரதீயனும் தன் கடமையாக நினைக்கிறான்.
தியாக பூமி பாரதம் என்பதை விளக்க வந்த ஒரு திவ்ய சரித்திரம் ததீசி மஹரிஷியினுடையது!