சிந்தாமணி ப்ரக்ஞா! – பகவான் ரமணரின் விளக்கம்! (Post.10,668)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,668
Date uploaded in London – – 18 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிந்தாமணி ப்ரக்ஞா! – பகவான் ரமணரின் விளக்கம்!
ச.நாகராஜன்

ரமணாசிரமத்தில் நடந்த சம்பவம் இது.

ஒரு நாள் டைனிங் ஹாலில் இரவு நேரத்தில் உணவு அருந்தும் போது பகவான் ரமணர் நார்த்தங்காய் ஊறுகாய் (Country organge pickle) இருக்கிறதா என்று கேட்டார்.
அங்கு அது இல்லை.

இதைக் கேட்ட சர்வாதிகாரி நிரஞ்ஜநானந்த ஸ்வாமிகளுக்கு கோபம் வந்தது.

மறு நாள் மத்தியானம் வழக்கம் போல ரமணாசிரமத்திலிருந்து வெளியிடத்திற்குச் செல்லும் கடிதங்கள் ரமணரின் பார்வைக்கு வந்தது.

ஜி.எல். நரசிம்மராவ் என்ற அணுக்க பக்தர் அதைக் கொண்டு வந்து பகவானின் பார்வைக்கு வைத்தார்.
அதில் சர்வாதிகாரி மதுரையிலிருந்த ஒரு பக்தருக்கு நார்த்தங்காய் அனுப்பி வைக்கும்படி எழுதிய கடிதம் ஒன்று இருந்தது.

அதைப் பார்தத பகவான் ரமணர் உடனே வெடித்துக் கூறினார் : “இவர்களுக்கு முக்திக்கு வழி நார்த்தங்காயில் தான் இருக்கிறது போலும்!”

“இல்லாவிடில் எதற்காக ஒருவருக்கு இப்படிக் கடிதம் எழுத வேண்டும்? வரவேண்டும் என்று விதி இருந்தால் தானாக அது வராதோ? உம், உங்களுக்குத் தோணியதைச் செய்யுங்கள்” என்று கூறி முடித்தார் பகவான்.

இதைச் சொல்லி விட்டு பகவான் கடிதத்தை நரசிம்மராவிடம் விட்டெறிந்தார்.

நரசிம்மராவ் நடுக்கத்துடன் அந்தக் கடிதத்தை எடுத்தார்.
அந்தக் கணமே ஒரு ரயில்வே காண்ட்ராக்டர் ஹாலுக்குள் நுழைந்தார். அவர் கையில் நன்கு மூடப்பட்டிருந்த இரு கூடைகள் இருந்தன. அவற்றிற்கு ரெயில்வே ரசீதுகளும் இல்லை.
அந்தக் கால கட்டத்தில் ஆசிரமத்திற்கு எது வந்தாலும் முதலில் அது பகவானின் பார்வைக்குக் கொண்டு வரப்படும்.
இப்போது பகவான் சிரித்தார்.

“அதில் என்ன நார்த்தங்காய் இருக்கிறதோ? பாருங்கள்!” என்றார்.
அந்தக் கூடைகள் திறக்கப்பட்டன.

என்ன ஆச்சரியம், அதில் நார்த்தங்காய் தான் இருந்தது.
உடனடியாக அவை சமையலறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஊறுகாய் போடப்பட்டது.

பின்னர் பகவான் கூறினார்: “அதில் ஒன்று இனிப்பு ஆரஞ்சு போல இருக்கிறதே. இன்னொன்று தான் நார்த்தங்காயோ!”
உடனே ஒருவர் அதை சரி பார்க்க சமையலறைக்குச் சென்றார்.

சரி பார்த்ததில் பகவான் கூறிய படியே ஒன்று இனிப்பு ஆரஞ்சு. இன்னொன்று ஊறுகாய் போடுவதற்கான நார்த்தங்காய்.

இனிப்பு ஆரஞ்சுகள் உரிக்கப்பட்டு சுளைகள் அங்கிருந்த அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.
அங்கிருந்த பக்தரான ஜி.வி.சுப்பராமய்யா என்ற பக்தர் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.

இதை அற்புதம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என்று எடுத்துக் கொள்வதா?
பகவானிடமே தன் சந்தேகத்தை அவர் கேட்டு விட்டார்.

உடனடியாக பகவான் விளக்கமாகப் பதில் கூறினார்; “ யோக வாசிஷ்டத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஞானிகளின் இதயத்தில் பொக்கிஷமாக இருக்கும் இந்த பிரக்ஞா, சிந்தாமணி ப்ரக்ஞா ஆகும்.’ இது நினைத்ததை உடனடியாக நிறைவேற்றி வைக்கும்.

பகவான் மேலும் விளக்குகையில் ஆதி சங்கரர் விவேக சூடாமணியில் ப்ரக்ஞா என்பதற்கு விளக்கம் தருகையில் , “ வாசனையற்ற சுத்தமான ப்ரக்ஞையில் தோன்றும் எண்ணம்” என்று கூறுவதையும் சுட்டிக் காட்டினார்.

பின்னர் கருணையே வடிவமான பகவான் அந்த இரண்டு மேற்கோள்களையும் தன் கைப்பட எழுதி ஜி.வி.சுப்பராமய்யாவிடம் கொடுத்தார்.

Sri Ramana Reminiscences என்ற தனது புத்தகத்தில் தனது நினவலைகளைப் பதிவு செய்துள்ளார் ஜி.வி.சுப்பராமய்யா.
அதில் 14ஆம் பக்கத்தில் இந்த அபூர்வமான சிந்தாமணி ப்ரக்ஞா பற்றிய விவரத்தைக் கண்டு மகிழலாம்.

சுயநலமற்ற மஹரிஷிகள் நினைத்தது நடக்கும். அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்களுக்கு “பொருள்” தானாக வந்து ஒட்டிக் கொள்ளும்!


tags- சிந்தாமணி ப்ரக்ஞா, ரமணர், நார்த்தங்காய் ஊறுகாய்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: