WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,671
Date uploaded in London – – 19 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹரிஷி குசத்வஜரின் பெண்ணே ராவணனின் அழிவுக்குக் காரணம்!
ச.நாகராஜன்
தசக்ரீவனான இராவணன் முக்கோடி வாழ்நாள் உடையவன். கொடுங்கோலன். அவனது அழிவுக்குக் காரணமாக இருந்தவள் ஒரு பெண். சீதையைச் சிறை எடுத்துச் சென்றவன் சின்னாபின்னமாக அழிந்து போனான்.
ஆனால் அந்த சீதை யார்?
இதற்கு விடை காண மஹரிஷி குசத்வஜரின் சரித்திரத்தைப் படிக்க வேண்டும்.
ப்ருஹஸ்பதி மஹரிஷியின் புத்திரர் குசத்வஜர். இவர் மிகுந்த தவ வலிமை உடையவர். பிரம்ம தேஜஸுடன் கூடியவர். எல்லையற்ற அறிவுள்ளவர். தினம் வேதம் ஓதுபவர். இப்படி தினமும் வேதம் ஓதிக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் அவரது வேத உச்சரிப்பிலிருந்து ஒரு கன்னி உருவானாள். அவளது பெயர் வேதவதி.
பார்த்தோர் மயங்கும் படியான கட்டழகு கொண்டிருந்த அவளது அழகு சொல்லுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அவள் மண வயதுக்கு வந்தவுடன் அவளை மணக்க தேவர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், பன்னகர்கள் உள்ளிட்ட அனைவரும் போட்டி போட்டனர்.
அனைவரும் குசத்வஜரிடம் வந்து வேதவதியை தங்களுக்கு மணம் செய்து தருமாறு வேண்டினர்.
ஆனால் குசத்வஜரின் எண்ணமோ வேறாக இருந்தது. அவளை மஹாவிஷ்ணுவுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.
ஆகவே யார் கேட்ட போதும் அதற்கு அவர் இணங்கவில்லை.
இதனால் அவர் மீது பலரும் கோபம் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் இரவு தைத்திய அரசனான சம்பு என்பவன் அவரைக் கொன்றான். அவருடைய மனைவியும் அவருடனேயே இறந்தாள்.
வேதவதி தனக்கு விஷ்ணுவே மணாளனாக வர வேண்டும் என்று எண்ணி அதற்காகக் கடும் தவம் புரிய ஆரம்பித்தாள்.
ஒரு நாள் லங்காதிபதியான ராவணன் அவள் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தான். அவளைக் கண்டு
அவள் அழகில் மயங்கினான்.
அவளுடைய வரலாறை நன்கு தெரிந்து கொண்டான்.
பின்னர் அவளை நோக்கி, “ஓ! அழகிய பெண்ணே. தவம் செய்வது முதியவர்களுக்கானது. நீயோ அழகான இளம் பெண். நீ எனது மனைவியாக ஆனால் உன் இஷ்டப்படி சகல சுக போகங்களையும் அனுபவிக்கலாம். நீ சொல்லும் விஷ்ணு எனக்கு தவத்திலாவது, வீரத்திலாவது, சுக போகங்களிலாவது ஒரு போதும் ஈடாக மாட்டான். என்னுடன் வா” என்றான்.
உடனே வேதவதி, “ விஷ்ணுவைப் பற்றி இப்படிச் சொல்லலாமா?! உம்மைத் தவிர வேறு யாராவது விஷ்ணுவை இப்பாடி நிந்திப்பாரா! இந்த இடத்தை விட்டுப் போ” என்றாள்.
ஆசை அடங்காத இராவணன் அவள் கூந்தலைப் பற்றி இழுத்தான்.
உடனே வெகுண்டாள் வேதவதி. தனது தவ வலிமையினால்
தன் கையை, கத்தியாக ஆக்கினாள். இராவணன் பிடித்திருந்த கூந்தலை அவிழ்த்தாள்.
பின்னர் மிகுந்த கோபத்துடன் ஒரு அக்னியை வளர்த்து அதில் தன்னை மாய்த்துக் கொள்ள முனைந்தாள்.
அப்போது அவள் இராவணனை நோக்கி, “ ஓ! அரசனே! இதோ உன் எதிரிலேயே நான் அக்னியில் பிரவேசித்து என் உயிரை விடப் போகிறேன். உன்னால் அவமானப்படுத்தப்பட்டதால் நான் உன்னுடைய நாசத்திற்காகவே மறுபடியும் பிறக்கப் போகிறேன். பாபியாக உன்னைக் கொல்வது பெண்ணான எனக்கு அடுக்காது. உன்னை சபிக்கலாம் என்றால் அது எனது தவத்தைக் குறைத்து விடும். நான் ஏதேனும் தானம் செய்திருந்தாலோ அல்லது தவம் செய்திருந்தாலோ அக்னிக்கு ஆகுதி செய்திருந்தாலும் அடுத்த பிறவியில் ஒரு பெண்ணின் யோனியில் பிறக்காமல் தர்மவானான ஒருவருக்கு மகளாகப் பிறப்பேன்” என்று சொல்லி விட்டு அக்னியில் பிரவேசித்தாள்.
அவள் கூறியபடியே சீதையாக வந்து ஜனகருக்கு ம்களாக ஆனாள்.
விஷ்ணுவின் அவதாரமாகிய ராமரை மணந்து அவருக்குப் பத்தினியாக ஆனாள்.
அவளை இராவணன் சிறை பிடித்துச் செல்லவே ராமர் அவன் மீது போர் தொடுத்து அவனை இராமாவதாரத்தில் வதம் செய்தார்.
அயோத்திக்கு மன்னனாக முடிசூடி சீதையுடன் ராம ராஜ்யத்தை உருவாக்கிப் பரிபாலித்தார்.
ஆக மஹரிஷி குசத்வஜரின் சரித்திரம் ராமாயணத்துடன் ஒரு விதத்தில் தொடர்பு கொண்டதாக ஆகிறது.
tags- குசத்வஜர்,இராவணன், சீதை, வேதவதி