FOR IMAGES, PLEASE GO TO swamiindology.blogspot.com
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,680
Date uploaded in London – – 22 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொண்டைமண்டல சதகம்
வள்ளல்களின் வழக்கம்!
ச.நாகராஜன்
சமீப காலம் வரைக்கும் வள்ளல்களின் வழக்கம் இன்னாருக்குத் தாம் கொடுத்தோம் என்பது
கூடத் தெரியாமல் வள்ளன்மையுடன் வழங்கியது தான்!
சிலர் கேட்பதற்குக் கூச்சப்படுவர். புலவர்களோ வறுமையில் வாடினாலும் தன்மானம் மிக்கவர்கள்.
எப்படிக் கேட்பது என்று தயங்குவர்.
ஆகவே அப்படிக் கூச்சப்படுபவர்களுக்காக சிறந்த வள்ளல்கள் தமது வீடு வாயிலில் ஒரு பனைஓலைச் சுவடிக் கட்டையும் எழுத்தாணியையும் வைத்திருப்பர்.
தேவைப்பட்டோர் தேவையானதை அதில் எழுதுவர்.
தேவையானது வீட்டு வாயிலில் வைக்கப்படும். அதை அவர்கள் யாரும் அறியாத வண்ணம் எடுத்துச் செல்வர்.
இப்படி ஒரு வள்ளலைப் பற்றி கொங்குமண்டல சதகத்தில் வரும் பாடலை ஏற்கனவே பார்த்தோம்.
இதோ தொண்டைமண்டல சதகம் ஒரு வள்ளலைப் பற்றித் தரும் செய்தி இது.
பா 69:
உணலைப் பசும்பொன் முதலானவற்றை யுதவிப் பின்னுங்
குணலச்சையுள்ளவர் கேட்கவுங் கூசுவர் கொல்லெனவே
எணலைக் கருதி யெழுதிவைப்பீரென வின்மறைந்து
மணலைப் பரப்பிய முன்றிலுளான் றொண்டை மண்டலமே
அரும் சொற்பொருள் : குண லச்சை – குண லஜ்ஜை – வெட்கமான குணமுடையவர்
வந்த யாசகர்களுக்கு உண்ணும் பொருள்கள், பசும் பொன், மணியணி ஆடைகள் கொடுத்து, சற்று லஜ்ஜை அதாவது வெட்கப்படுவோர் தமது வாய் திறந்து கேட்கக் கூசுவர் என்பதால் இன்னும் ஏதேனும் வேண்டியதைக் கேட்க விரும்பினால் அதை இதில் எழுதுங்கள் என்று சொல்லி தமது முற்றத்தில் மணலைப் பரப்பி வைத்து எழுதுகின்ற வரை வீட்டில் மறைந்திருந்து பின்னர் வெளியே வந்து பார்த்து என்ன எழுதியிருக்கிறதோ அதை கொடுக்கும் கொடையாளியாகிய வேளாளன் வாழ்ந்தது தொண்டை மண்டலமே தான்!
இதைப் பற்றி இன்னும் இரு பாடல்கள் கூறுகின்றன:
நீணிலத்திலுறு மேழைமாந்தரீர் நீவிர் வேண்டுவனவின்புறீஇ
நேரில் கேண்மின் அவை தருவன்யான் அலதுன் நினைவில் உன்னும் அவை நவில நீர்
நாணில் என்னுடைய மனை முன் வாயில் தனில் நன்மணல் மிகுதி கொட்டியே
நாம் பரப்பியும் இருக்கிறோம் அதனில் நாடி வந்ததனை எழுதுமின்
காணில் அங்குடனே அருள்வம் என்ன அவன் கட்டளைப்படியே திட்டமாய்க்
கையினால் எழுதவும் கையோடு பொருள் கண்டளித்த ப்ரபுவாரெனிற்
பூணிலங்கு வரநதி குலத்தில் வரு புண்யனானவதி கண்யனாம்
புலவர் போற்று மாகறலின் மேவுமெழில் புண்யகோடி யெனும்பூபனே
புண்ய கோடியைப் பற்றிய பாடல்கள் இவை.
இன்னொரு வள்ளல் எதையும் ஒன்று மட்டும் தருவதில்லை என்ற பழக்கம் கொண்டவர். ஒரு புலவர் ஒரு குதிரை கேட்டார். ஆனால் ஒன்று மட்டும் தரும் பழக்கமில்லாத வள்ளல் ஆயிரம் குதிரைகளைக் கொடுத்தாரா.
தொண்டைமண்டல சதகத்தில் 66வது பாடல் இது:
கூற்றூர்ப் புலவன் ஒரு பரி கேட்பக் கொடை மதத்தா
லாற்றூர் கிழான் பரி ஆயிரம் ஈந்தனன் ஆதலினால்
வேற்றூர் பலவிது நம்மூரெனும்படி வெம்பசியை
மாற்றூர் பலவுள மண்டலங் காண் தொண்டைமண்டலமே
கூற்றூர் என்று ஒரு ஊர். அங்கு வாழ்ந்து வந்த புலவர் ஒருவருக்கு ஒரு குதிரை தேவையாக இருந்தது.
அதை ஆற்றூரில் வாழ்ந்து வந்த ஆற்றூர் கிழான் என்னும் வேளாள வள்ளலிடத்தில் சென்று கேட்டார்.
ஒரு குதிரை கேட்டவருக்கு ஆற்றூர் கிழான் என்ன செய்தார் தெரியுமா?
ஒன்று கொடுத்தால் இழிவு என்று நினைத்த அவர், ஆயிரம் குதிரைகளைக் கொடுத்தார். இந்தச் செய்தி பரவியது. ஆகவே அதுவே நமது ஊர் என வேற்றூரில் இருந்தாலும் பலரும் எண்ணலாயினர்
இப்படி பல ஊர்கள் தொண்டைமண்டலத்தில் இருந்தன.
அதனால் வேற்றூர் பல இருந்தாலும் கூட இது நமது ஊரே என்று பசித்து வந்தோர் சொல்கின்றபடி வந்தோரின் கொடிய பசியைத் தீர்க்கும் வேளாளர் பலர் வாழும் ஊர்கள் பலவற்றைக் கொண்டிருப்பது தொண்டை மண்டலமே தான் என்று புகழ் பரவியது!
***
tags- வள்ளல், வழக்கம், ஆற்றூர் கிழான் ,ஆயிரம் குதிரை,