PICTURE OF ஜவாது (சவ்வாது) புலவர்
FOR PICTURES, GO TO swamiindology.blogspot.com
WRITTEN BY B.Kannan, Delhi
Post No. 10,689
Date uploaded in London – – 25 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாய்ச்சொல் வீர கவிஞர்கள்
Written By B.Kannan,Delhi
அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப்பதிவில் தமிழ், சம்ஸ்க்ருதம், இந்தி மொழிகளில் கவிஞர்கள் சிலர் குறும்பு, குசும்பு, நக்கல் கலந்தத் தொனியில் தங்கள் புலமையைப் பாக்கள் மூலம் எப்படி வெளிக்காட்டி இருக்கிறார்கள் என்பதைக் காண்போம்………
புலவர்கள் நயம்பட உரைப்பதில் “வாய் தேர்ந்த”வர்கள். குறும்பு, குசும்பு, நக்கல், நையாண்டி, சிலேடை மிளிரப் பாக்கள் இயற்றி அசர வைத்து விடுவர். வள்ளல் பெருமான்களின் குணாதிசயங்களை அறிந்து அதற்கேற்றார் போல் அவர்களை வஞ்சபுகழ்ச்சி அணியால் பாடி மனம் மகிழவைத்துப் பரிசுகள் பெற்றுச் சென்று விடுவர். இன்னும் சிலரோ உற்ற சமயத்தில் தங்கள் கற்பனை வளம்எதிர் பாராத விதமாய் வரண்டு விட அசமஞ்சமாய் நின்று விடுவதுமுண்டு. இதோ, அப்படிப் பட்டச் சில நிகழ்வுகளைப் பார்ப்போம்…..
இரு கைகளும் சிவக்க அள்ளியள்ளிக் கொடுத்துப் புகழ்பெற்றவர்கள் என ஊரறிந்தக் கொடையாளர்களும், செல்வந்தர்களும் தன் பாடல்களுக்கு வெறுமே தலையாட்டியவாறு, பரிசில் ஏதும் கொடுக்காமல் ‘சால்ஜாப்பு’ கூறி அனுப்பி விட்டதை எல்லாம் அந்த வறுமையில் வாடும் கவிராயர் எண்ணிப் பார்க்கிறார்.
‘எங்கே தவறு நேர்ந்து விட்டது? நம் நாவன்மைச் சிறுத்துப் போய்விட்டதா அல்லது அவர்களிடம் பொருளில்லையா? வாய் அலுக்கப் பாடியதற்குச் சரியா னப் பாடம் கற்பித்து விட்டார்கள், கல்நெஞ்சுக்காரர்கள்.கவிதையை ரசித்ததாகக் கூடப் புலப்படவில்லையே! இந்தக் கஞ்சமகாப் பிரபுக்களை மிஞ்சும் நடிகர்களைப் பார்க்க முடியுமா? விலையுயர்ந்த நகைகளை அணிந்து, தங்கள் உடலைப் பட்டுப் பீதாம்பரத்தால் அழகு செய்து கொண்டு வெளியுலகுக்குப் பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்ள நடிக்கிறார்கள். ஆனால் ஒருவேளை நடந்தது இப்படியும் இருக்குமோ?’
கவிராயரின் குசும்பும், குயுக்தியும் நிறைந்த மூளை துரிதக் கதியில் வேலையில் இறங்கிவிட்டது! பண்பாடுகளிடம் மழைக்குக் கூட ஒதுங்கி இருக்காத இவர்களை, அந்தக் குணாதிசயங்கள் எல்லாம் இருப்பதாகப் பாடியதால் தான் சிறுமையை வெளிக்காட்டாமல் நமக்கு இல்லை என்று கைவிரித்து விட்டார்களோ? இருக்கலாம்! நாம் சொன்ன பொய் புரட்ட லுக்குத் தகுந்த தண்டனை அல்லவோ, கிடைத்திருக்கு! என்று புலவர் தமக்குள் சிரித்துக் கொள்கிறார் .புண்பட்ட மனதிலிருந்து எழுந்தக் கேலிச் சிரிப்பு, அது! அவர் அப்படி என்ன வஞ்சபுகழ்ச்சி செய்து விட்டார்? அந்தப் பாடலைக் கேளுங்கள்……
“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறியும் மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனை தான் வள்ளலென்றேன்
இல்லாது சென்னேனுக்கு இல்லையென்றார்
யானுமென்றன் குற்றத்தால் ஏகின்றேனே!”
இதன் பொருள்:
“அசல் மடையனைப் பெரிய அறிவாளிபோல இருக்கும்படி கருத்தமையப் பாடினேன். வெறும் காட்டில் திரியும் வேடுவனை நாகரிகம் தெரிந்த நாட்டுக்குத் தலைமை ஏற்பாய் என்றேன். கொலை, கொள்ளை, வஞ்சகம்
இவைகளை எல்லாம் ஒன்று விடாமல் செய்துவிட்டுக் கெளரவப் போர்வைக்குள் மறைந்து கொள்ளும் அந்தப் பிரபுவை மிக நல்லவன் என்ற பொருள் தோன்றப் பாட்டில் கூறினேன். போர் முகத்தைச் சித்திரத்திலே கூட பார்த்திருக்காத, ஒருவேளைப் பார்த்திருந்தாலும் மூர்ச்சித்து விழுகின்ற ஒரு கோழையைப் போரிலே புலி எனப் புனைந்துரைத்தேன். கையும் காலும் உடம்புமாக மொத்தத்தில் ஒரு தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடு
போன்ற நோஞ்சல் மனிதனை “மல் யுத்தம் விளையாடியப் பலம் வாய்ந்தக் கைகளை உடையவனே!” என்று முழுப் பொய்யாகப் புகழ்ந்தேன். கனவில் கூட எச்சிற் கையை உதறியறியாதக் கஞ்சனை, வள்ளல் என்றேன்.
இவ்வளவும் கவிதைக்காக நான் மிகுதியாகப் புனைந்துரைத்தப் பொய்யு ரைகள். இப்படி இல்லாதவற்றை எல்லாம் சொன்னதற்காகத்தான் அவர் களெல்லாரும் ஒருமனதாகப் பேசிக் கொண்டவர்கள் போல் எனக்கும்
இல்லையென்றுக் கையை விரித்துவிட்டார்கள், போலும்!”
துன்ப மிகுதியால் நெஞ்சுதுடித்துப் புண் ஆகும் சமயம், புன்முறுவல் பூத்து மனதைச் சாந்தப்படுத்திக் கொள்வது தான் புலவர்களுக்கானச் சாபமோ, என்னவோ
சாபம் என்று சொல்லும்போது நமக்கு இன்னொரு கவி ஞாபகத்துக்கு வருகிறார். அவர் தான் ஜவாது (சவ்வாது) புலவர். முஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும்
சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர். தமிழார்வம் காரணமாக இளம்வயது முதலே மொழியை நன்றாகக் கற்றறிந்து, கவி பாடும் புலமைப் பெற்றார். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள்
என்ற சுப்ரமணிய சுவாமியின் மீது ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, ஜவாது
புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதி யில் ஜவாது புலவரின் உருவ சிலையை அமைத்துள்ளனர்.இவர் சக தமிழ்ப் புலவர் ஒருவரால் ‘ வண்டமிழின் எண்ணோ, எழுத்தோ, இசையோ, இயல் புலவர் கண்ணோ, சவ்வாதுக் கவி’ எனப் பாராட்டப்பட்டவர்.வசைபாடுவதில் காளமேகப் புலவரை ஒத்து விளங்கினார். ‘வண்டமிழ் சவ்வாதுவாயெல்லாம் நஞ்சே’ என்று கூறக்கூடிய அளவிற்கு நச்சுப்பல் உடையவர். ஒருமுறை இவருக்குப் பண உதவி செய்ய மறுத்த சேஷையங்கார் என்பவரைச் சினத்துடன்,
வீசம் பணம் கொடுக்காத சேசா
வீரியம் பாம்பு கடித்துச் சா சா
என்று சபிக்க அன்றே அவர் பாம்பு கடித்து இறந்ததாகக் கூறப்படுகிறது.
————————————————————–
அடுத்து ஒரு “சோப்ளாங்கி” பாணனைப் பார்ப்போம்…….
தமிழ் இலக்கியத்தில் மெல்லியதாக ஓடும் நகைச்சுவை உணர்வு நந்தி கலம்பகத்திலும் காணக் கிடைக்கிறது.
பல்லவ மன்னன் நந்திவர்மன் அரசவையில் பாடும் ஒரு பாடகன் (பாணன் என்று குறிப்பிடுவார்கள்). தன் மனதுக்கு உகந்தவளைக் காணாது, பார்க்காது பரிதவிக்கிறான். இருவருக்கும் இடையே ஏதோ ஒரு காரணத்தால் பிணக்கு, ஊடல் வரை நீண்டு விட்டது. என்ன செய்வான், பாவம்! காதலியின் ஊட லைப் போக்க இரவெல்லாம் அவள் வீட்டுக்கருகில், கொட்டும் பனியிலும், வீசும் கூதல் காற்றிலும் நின்று பாடுகிறான்.
அவள் அவனைப் பற்றி அக்கறைப் படவேயில்லை! பொழுது விடிந்தும் அவன் பாடுவதை நிறுத்தவில்லை. வாசலுக்கு வரும் காதலியைக் கண்ட தும், “அன்பே! ஏன் இந்தப் பாராமுகம்? இரவு முழுவதும் உனக்குப் பிடித்தப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தேனே, கேட்டாயா,ஆருயிரே!” எனக் கெஞ்சுகிறான்.
“ஓ…நீ பாடினியா? எங்க அம்மா அது என்னவோ பேயோ, பிசாசோ தான் அலறுகிறது என்றாள், சற்று முன் அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் ஏதோ நரி ஊளையிட்டது என்றார்கள், என் தோழியோ நாய்தான் இடை விடாமல் குறைத்துக் கொண்டிருந்தது என்றாள், ஆனால் எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது, இந்தக் கோணங்கித்தனத்தில் ஈடுபட்டிருப்பது உன்னைத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்று! அதனால் அவளிடம் உறுதி யாய்ச் சொன்னேன் நீ தான் பாடி இருப்பாய் என்று!”..”என்று அவனைக் கிண்டலடித்து, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுகிறாள். பாவம், பாணன்!
அந்த நகைச்சுவை ததும்பும் பாடல்….
ஈட்டு புகழ்நந்தி பாண! நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நா
ஈட்டு = ஈட்டிய புகழ்நந்தி = புகழ் பெற்ற நந்தியின் அரசவையில் உள்ள பாண! = பாணனே நீ = நீ எங்கையர்தம் = என் அயலில் வந்து
வீட்டிருந்து பாட = வீட்டில் இருந்து பாட விடிவளவும் = விடியும் வரை காட்டிலழும் = காட்டில் வாழும்
பேயென்றாள் அன்னை = பேயாய் இருக்கும் என்றாள் என் அன்னை பிறர் = மற்றவர்கள் நரியென்றார் = நரி (ஊளை இட்டிருக்கும்) என்றனர் தோழி = என் தோழி நாயென்றாள் = நாய் (குலைத்திருக்கும்) என்றாள்
நீஎன்றேன் நா = (அது இல்லாம் இருக்காது, இவ்வளவு கர்ண கடூரமாய் பாடியது) நீ என்றேன் நான்.
ஊடல் தீர்ந்துக் கூடியிருப்பார்களா, அது காஞ்சிமாநகர் ரகசியம்!
——————————————————————————–
நீலகண்ட தீட்சிதர் (17-ம் பொது ஆண்டு) புகழ் பெற்ற இலக்கிய மேதை ஶ்ரீஅப்பைய தீட்சிதர் சகோதரரின் பேரனாவார். சம்ஸ்க்ருத இலக்கிய வானில் ஒரு நிலையான நட்சத்திரத் தகுதியைப் பெற்றவர். கங்காவதரணா,
கலிவிடம்பனா, ஈசனின் 64 திருவிளையாடல்களைச் சித்தரிக்கும் சிவலீலார்ணவம் ஆகியப் போற்றுதற்குரியக் காவியங்களை இயற்றியவர். மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் முதலமைச்சராகப் பணியாற்றியவர்.
வக்ரோக்தி எனும் வார்த்தை அலங்கார அணியில் பேசுவதிலும், எழுதுவதி லும் கைதேர்ந்தவர். இயல்பான எழுத்து அல்லது இயல்பு நவிற்சிக்கு மாறான எழுத்து முறை வக்ரோக்தி எனப்படும். வக்ரோக்தி என்பது
வக்ர + உக்தி எனப் பிரிவுபட்டுக் கோணற் கூற்றுமுறை, மறைமுகக்கூற்று, எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவுநூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுற்றி வளைத்து அழகுபடுத்திக் கூறுதல் என்பதாகும். சமயத்துக்குத் தகுந்தார் போல் அதை எப்படி உபயோகித்துக் கொண்டார், பாருங்கள்.
ஒரு முறை மன்னர் திருமலை நாயக்கர் தீட்சிதரைக் கௌரவிக்க ஏற்பாடு செய்திருந்தார். விழாவுக்குப் பிறகு விருந்தோம்பலும் நடந்தது. அனைவரும் வயிராற உண்ட திருப்தியில் முன்வாயிலில் தரப்படும் தாம்பூலப் பையை வாங்குவதற்கு முண்டியடித்துச் சென்றவாயிருந்தனர். இப்படிப்பட்டச் சமயங் களில் அப்பையில் சம்பாவனையாக ராஜசன்மானம் வைக்கப்பட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்! அசதி வயப்பட்ட தீட்சிதர் தன் ஜாகைக்குச் செல்ல முயன்றவர் அந்தத் தள்ளுமுள்ளுவில் சிக்கிக் கொண்டு கீழே தடுக்கி விழ இருந்தவர் எப்படியோ சமாளித்துக் கொண்டார். இந்தக் களேபரத்தைப் பார்த்த மன்னர், “ஐயாவாள்! எதனால் இத் தடுமாற்றம்?” என்று வேடிக்கையாகப் பரிகசிக்கும் தொனியில் வினவினார். மன்னரைத் திரும்பிப் பார்த்த தீட்சிதர் புன்னகைத்தப்படி பதிலளித்தார்:
बुभुक्षा त्तृडाशा ऋच्छका इति ख्याता भार्यास्तिस्रः प्रभो मम |
तास्विदं हि कनिष्टायाः प्रियाया नर्मचेष्टितम् ||
प्रभो =மன்னவா, बुभुक्षा = பசி, त्तृडाशा = தாகம், ऋच्छका=ஆசை, इति ख्याता =என்ற பெயருடைய இவர்கள், मम भार्यास्तिस्रः = எனது மனைவிமார்கள்
हि= இந்நிகழ்வு, प्रियाया = பிரியமான, कनिष्टायाः = இளையவளின், “ஆசை” நாயகியின் तास्विदं= மகிழ்ச்சி பொங்கும், नर्मचेष्टितम् =காதல் விளையாட்டின் விபரீதமே
“ராஜன்! எனக்கு மூன்று பத்தினிகள், பசி, தாகம், ஆசை என்று! என் பிரியமான இளையவள் “ஆசை”யின் மகிழ்ச்சி பொங்கும் காதல் விளை யாட்டினால் ஏற்பட்ட விபரீதமே அன்றி வேறல்ல!”என்று சொல்ல, நாயக்கர் விழுந்து விழுந்துச் சிரிக்கிறார். ஆசை எல்லை மீறினால் என்ன நடக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் கவி.
————————————————————————————-
PICTURE OF பாரதேந்து ஹரிஷ்சந்திரா
முடிவாக, இந்திமொழி இலக்கியச் சோலையில் நுழைவோம்….
19-ம் நூற்றாண்டில் வங்காள தேசம் ஆங்கிலேயர் பிடியில் இருந்தபோது நிலவிய நாட்டு நடப்பை “பாரதேந்து மண்டல்” என்ற மாத சஞ்சிகையில் ஒரு கட்டுரை வாயிலாகச் சுவைபட விவரிக்கிறார் பிரபல இந்தி எழுத்தா ளரும் கவிஞருமான பாரதேந்து ஹரிஷ்சந்திரா (1850-1885). 35 ஆண்டுகளே உயிர் வாழ்ந்திருந்தாலும், இந்தி சாகித்தியத்துக்கு அவர் ஆற்றியத்தொண்டு மிக மகத்தானது. இதழியல், நாடகம்,காவியத் துறைகளில் அவர் பணி சிறப் புற்று விளங்கியது.இதோ அவரது கைவண்ணத்துக்குச் சில உதாரணங்கள்…….
வாரந்தோறும் கூடும் சந்தைகளில் கடை போடும் வணிகர்கள் எப்படி யெல்லாம் பொருள் வாங்க வரும் ஜனங்களைக் கவர்ந்து தங்கள் பக்கம் இழுக்கிறார்கள், பாருங்கள்! அது அந்தக் கால குறும்பு, குசும்பு, நக்கல்
கலந்த நகைச்சுவை!
“வாங்க, இங்கே வாங்க! குறைந்த விலையில் ரசகுல்லா, பாட்டாளி கூடு, பனை வெல்லத்தில் செய்தது. உடலை வருத்தாது. ஜீரண லேகியம்,பொடி, இஞ்சி மொரப்பா நிறைஞ்சிருக்கு. ‘ஆம்(மா),கட்டல் ஏர் ஷோமோய்’
(இது மாம்பழம், பலாக்காய் சமயம், சீசன்), தால் பழம் (நுங்கு) கட்டல்-பலாக்காய்- தகுந்த அளவில் வெட்டித் தரப்படும். பழங்கள், காய்கறிகள் எல்லாம் குவிந்துக் கிடக்கு, சேர் (280 கிராம்) ஒன்றுக்கு ஒரு ‘டாக்கா’ (85 பைசா) தான். ஐந்து டாக்காவுக்கு மேல் வாங்குவோருக்கு ஒரு சேர் ‘பானிபல்’ (அ) ‘பேல்'(வில்வக் காய்) ஜூஸ் இனாம், முந்துங்கள்!” என்று கூவுகிறார் ஒரு வியாபாரி.
காசிராம் என்ற சனாவாலா (வறுத்த கொத்துக் கடலை விற்பவர்) தன் உத்தியைக் காட்டும் விதமே தனி! “இதோ இந்தக் கூடையில் மறைந் திருந்து எட்டிப் பார்க்கும் கடலை எப்படி மணம் வீசுகிறது, நன்றாக வாசனைப் பிடியுங்கள். பேயாஜ், லேபு (வெங்காயம், எலுமிச்சம் பழம்) கலந்து தருவேன். அதன் மகிமையைச் சொல்கிறேன் கேளுங்கள். இல்லையென்றுச் சொல்லாமல் நான் கொடுப்பதைக் கேட்டுக் கேட்டு வாங்கி விரும்பிச் சாப்பிடும் அரசாங்கத் துரைமார்கள், கொஞ்சமும் நன்றி, இரக்கமோ இல்லாமல் நம் மீதே இரட்டை வரி விதிப்பதைப் பாருங்கள்! ஆமாம், எதையும் செய்யத் தூண்டும் சக்தி வாய்ந்த சனா. வாங்க, வாங்க!”
அடுத்து ஒரு பாட்டி வைத்திய சிகாமணி தனது குடல் ஆரோக்கியப் பொடி, அதேதான் சூர்ணம் தான், விற்பதற்குக் குரலெழுப்புகிறார்: ” ஆங்கிலேயத் துரைமார்கள் விரும்பிக் கேட்கும் பிரத்யேகச் சூர்ணம் கைவசம் வந்திருக் கிறது. கைநிறைய வாங்கிய லஞ்சம் சீக்கிரம் ஜீரணிக்கவும், மேன்மேலும் வாங்கிக் குவிக்க உத்வேகமளிப்பதால் அவர்கள் என் பின்னாலேயே சுற்று கிறார்கள். இதைச் சாப்பிட்டால் லேவாதேவி செய்யும் ஈட்டிக்காரர்களுக்கு, மீட்கப்படாத அடமானச் சாமான்களைக் கபளீகரம் செய்வதற்குப் பெரிதும் உதவுகிறதாம். சூரணத்தை எடுத்துக் கொள்ளும் போலீஸ்காரர்கள் அனைத் துச் சட்டதிட்டங்களையும் கரைத்துக் குடிக்க முடியும். இது நான் தரும் உத்தரவாதம். வாங்க, போனால் வராது, பொழுது பட்டால் தங்காது! குன்று போன்ற குவியல் சேர் ஒரு டாக்கா தான்!. சூரண், சூரண்!” என நீட்டி முழங்குகிறான்.
இதையெல்லாம் உன்னிப்பாக நோட்டமிட்டபடி இருந்த ஒரு யோகி,” என்னடா இது, இந்த நகருக்கு வந்த சோதனை. எதை வாங்குவதாய் இருந்தாலும் ‘ஓரு சேர் ஒரு டாக்காவா?’ எங்கு பார்த்தாலும் இதே
கோஷமாய் இருக்கிறதே? படித்தவனுக்கும், முட்டாளுக்கும் ஒரே அளவு கோலா? வெண்பஞ்சு-கற்பூரம், காக்கை-குயில் இரண்டுக்கும் வித்தியாச மில்லையா?சற்று ஏமாந்தோமானால் நம்மையும் அதே விலக்கு விற்று விடுவார்கள், போலிருக்கிறதே? பொன்மழைப் பொழிகிறது என்று சொன் னால் கூட இங்கே வசிக்கலாகாது போய் விடுவோம் வேறுவழி பார்த்து!” ஒரு சேர் ஒரு டாக்கா என்ற கூக்குரல் அவரை வேகமெடுக்க வைத்தது!.
கவிஞர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம். ரசிப்போம், சிரிப்போம்!.
TAGS – ஜவாது, சவ்வாது, புலவர், பாரதேந்து ஹரிஷ்சந்திரா