WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,701
Date uploaded in London – – 1 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யார் எழுத வல்லார் அதை? பகவான் ரமணரின் கேள்வி?!
ச.நாகராஜன்
ரமணாஸ்ரமத்தின் ஆதி நாட்களில் புத்தகாலயத்திலிருந்த அன்பர் சோமசுந்தர சுவாமி ஒரு நாள் பகவான் ரமண மஹரிஷியிடம் வந்தார்.
தனது புத்தகத்தில் ஒரு அக்ஷரத்தை எழுதித் தருமாறு அவர் பகவானை வேண்டினார்.
பகவான் அவர் புத்தகத்தில் முதலில் ஒரு குறள் பாவை எழுதினார்.
பின்னால் அவரே அதை ஒரு வெண்பாவாக மாற்றினார்.
வெண்பா இது தான்:
“அக்கரம் தோரெழுத் தாகுமிப் புத்தகத்தோர்
அக்கரமா மஃதெழுத வாசித்தாய் – அக்கரமாம்
ஓரெழுத்தென் றுந்தானா யுள்ளத் தொளிர்வதாம்
ஆரெழுத வல்லா ரதை”
அக்கரம் – அக்ஷரம்
பாடலின் பொருள் :-
அக்ஷரம் என்றால் ஒரு எழுத்து தானாகும். அந்த ஒரு எழுத்தை இந்தப் புத்தகத்தில் எழுதித் தரும்படி என்னைக் கேட்கிறாய். அக்ஷயமாகிற என்றுமே அழியாத உண்மைப் பொருளான அந்த ஓர் அக்ஷரம் எப்பொழுதும் உன் உள்ளத்தில் தானாகவே நான் என்னும் ஸ்புரணமாக (அஹம் ஸ்புரணம்) பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அதை எவரால் எழுத்து வடிவமாக எழுத முடியும்?
ஓம் என்னுன் ஒலி வடிவமே பிரணவ மந்திரம். அதற்குள் இருப்பாக உள்ளது ஒலி மற்றும் ஒளி கடந்த ‘அஹம்’ என்னும் ஆத்ம ஸ்புரணம்!
ஆகவே யாவற்றிற்கும் முற்பட்ட முதலாம் பொருளின் பெயர்
‘அஹம் நான்’ என்பதாகும்.
நான் யார் என்ற ஆத்ம விசாரம் செய் என்பதே பகவான் ரமணரின் சீரிய உபதேசமாகும்.
உள்ளது நாற்பது என்ற சீரிய நூலில் 35, 36ஆம் பாடல்கள் ரமணர் இயற்றியவை.
அவற்றில் அவர் கூறுவதன் பொருள் இது தான்:
“எழுத்தைக் கற்றோம் என்று அகங்காரம் கொண்டு தாம் பிறந்தது எங்கே என்று விசாரித்து தனக்குள்ளாழ்ந்து தலையில் எழுதிய எழுத்தைத் தொலைக்க நினைக்காதவர்கள், கல்வி அறிவைக் கற்றதனால் பயன் தான் என்ன?
சப்தத்தைக் கிரஹித்துக் கொள்ளும் கிராமபோன் தன்மையை உடையவர்கள்,
சோணகிரியில் வாழும் ஈசா,
உலகில் இவர்களைப் போல வேறு யார் இருக்கிறார்கள்?”
“பல நூல்களைக் கற்று விசாரணையினால், அகங்காரம் அடங்காதவர்களை விடக் கலவி அறிவு இல்லாதவர்களே பிழைத்தவர் ஆவர்.
மதாபிமானமென்னும் பற்றாகிய பொல்லாத பேயின் பிடியிலிருந்து அவர்கள் மீண்டார்கள்.
எதையாவது நினைத்து அதிலேயே சுழல்கின்ற மனம், வாக்கு, இந்த இரண்டின் நோயினின்றும் தப்பினார்கள்.
கற்ற கல்விக்குச் சீர் தேடி, மதிப்பைத் தேடி நாடெங்கும் திரியும் ஏக்கத்தினின்றும் தப்பினார்கள்.
இவ்வாறு கல்லாதவர்கள் மீண்ட கேடுகள் ஒன்றல்ல, இரண்டல்ல, எத்தனையோ வழிகளில் தப்பிப் பிழைத்தார்கள் என்று உணர்வாயாக”
ரமண மஹரிஷியின் பாடலைப் பார்ப்போம்:
எழுத்தறிந்த தாம் பிறந்த தெங்கேயென் றெண்ணி
யெழுத்தைத் தொலைக்க வெணாதோ -ரெழுத்தறிந்தென்
சத்தங்கொ ளெந்திரத்தின் சால்புற்றார் சோணகிரி
வித்தகனே வேறார் விளம்பு.
சத்தங்கொள் எந்திரம் – கிராம போன், டேப் ரிகார்டர் போன்ற ஒலிப்பதிவு சாதனங்கள்
அடுத்த பாடல்:
கற்று மடங்காரிற் கல்லாதா ரேயுய்ந்தார்
பற்று மதப் பேயின் பாலுய்ந்தார் – கற்று பல
சிந்தைவாய் நோயுய்ந்தார் சீர் தேடி யோடலுய்ந்தா
ருய்ந்ததொன் றன்றென் றுணர்
திருவள்ளுவரின் குறளையும் இங்கு நாம் சிந்தித்துப் பார்க்கலாம்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (குறள் 2)
இறைவனை அறிந்து உணர்வதே கல்வி கற்பதன் பயன்.
தாயுமானவ சுவாமிகளும் கூறுகிறார்:
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றும் அறிவில்லாத என்
கர்மத்தை யென்சொல்கேன் மதியை யென் சொல்லுகேன்”
‘நான் யார்?’ என்ற ஆத்ம விசாரணையே உய்யும் வழி என்று காட்டிய மஹரிஷியைப் போற்றுவோம்! அவர் வழியில் நடப்போம்!!
tags- யார் எழுத வல்லார் , ரமணர், கேள்வி,
rajapaarvaithiruthiru
/ March 1, 2022கல்வியின் பயனெதுவெனக் கல்மேல் எழுத்துப்போல் ரமணரிஷி சொல் துணைக் கொண்டு யாவர்க்கும் உணர்த்த இப்பதிவு படைத்தமைக்கு நன்றி.
எளிதில் புரியும் இயல்பாக கடின தத்துவங்களையும் எடுத்துரைக்கும் தங்கள் திறனுக்கென் பாராட்டு.
– இராஜ முத்திருளாண்டி
santhanam nagarajan
/ March 2, 2022தனக்கெனத் தனி தமிழ் நடை கொண்டிருக்கும் பாவலரின் பாராட்டுக்கு என் நன்றி
நன்றி நன்றி