WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,705
Date uploaded in London – – 2 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மனிதப் பிறவியின் மகத்துவம் : புத்தரின் அருளுரை!
ச.நாகராஜன்
மனிதப் பிறவியின் மகத்துவம்!
மனிதப் பிறவியின் மகத்துவத்தைப் பற்றி மஹரிஷிகள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
புத்தபிரானும் இதை தன் சீடர்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
ஒரு முறை சீடர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் சில மணல்துளிகளை எடுத்து அவர், தன் நகத்தில் பரப்பினார்.
பின்னர் சீடர்களை நோக்கிக் கேட்டார் : “ என் நகத்தில் பரப்பப்பட்டுள்ள மணல்களின் எண்ணிக்கை அதிகமா அல்லது பூமியெங்கும் உள்ள மணல்களின் எண்ணிக்கை அதிகமா?”
அனைவரும் உடனே, “ பூமியெங்கும் உள்ள மணலே மிக மிக அதிகம்” என்று ஒருமித்த குரலில் கூறினர்.
உடனே புத்தர் கூறலானார் ; “ உண்மை! பூமியெங்கும் உள்ள மணலே மிக மிக அதிகம்! இது போலத்தான் மனிதராகப் பிறவி எடுத்தோர் என் நகத்தில் பரப்பப்பட்டிருக்கும் மணலின் எண்ணிக்கை போல மிக மிகக் குறைவானவர்கள். ஆனால் பூமியில் உள்ள மற்ற உயிரினங்களோ எண்ணிக்கையில் மிக மிக அதிகம்”
இந்த உரையினால் மனிதப் பிறவியின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்தனர்.
இது போலச் சிறு சிறு செயல்களால் பெரிய உண்மைகளைச் சொல்வது புத்தரின் வழக்கம்.
பொய் சொல்பவனுக்கு புண்ணியம் இல்லை!
ஒரு முறை ராகுலனைப் பார்க்கச் சென்றார் புத்தர்.
அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்ற ராகுலன் ஓடோடிச் சென்று அவர் பாதங்களை அலம்ப நீரைக் கொண்டு வந்தார்.
உயர்ந்த ஆசனத்தில் புத்தர் அமர்ந்திருக்க ராகுலன் ஒரு கலசத்தில் நீரைக் கொண்டு வர அதை எடுத்துக் கொண்டார் புத்தர்.
ஒரு சிறிய பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். கலசத்திலிருந்து, அந்தச் சிறிய பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு தனது பாதங்களில் விட்டுக் கொண்டார். சிறிது சிறிதாக நீரை விட்டுத் தன் பாதங்களைக் கழுவிக் கொண்ட புத்தர் பின்னர் கலசத்தைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தார்.
பின்ன ராகுலனை நோக்கி புத்தர், “ இந்தப் பாத்திரத்தில் இப்போது சிறிதளவேனும் நீர் இருக்கிறதா?” என்று கேட்டார்.
ராகுலன் உடனே, “ இல்லை ஐயனே! தலை கீழாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் ஒரு சிறிதளவேனும் நீர் இல்லை” என்றார்.
உடனே புத்தர் கூறினார் : “ராகுலா! தலைகீழாகத் திருப்பிக் கவிழ்க்கப்பட்ட பாத்திரத்தில் எப்படி ஒரு சிறிதளவேனும் நீர் இல்லையோ அதே போலத் தான் பொய்களைச் சொல்லும் மனிதனிடம் ஒரு சிறிதும் புண்ணியம் இருக்காது. தெரிந்து கொள்”
யாராலும் தவிர்க்க முடியாத ஐந்து விஷயங்கள்!
ஒரு முறை கோசல மன்னன் ஜேடவாணன் புத்தரை தரிசிக்க அவரது மடாலயத்திற்கு வருகை புரிந்தான்.
அப்போது அவசரம் அவசரமாக வந்த ஒரு தூதன் மன்னன் காதில் ஒரு துயரச் செய்தியைக் கூறினான்.
ராணி மல்லிகா மரணம் அடைந்து விட்டதாக அவன் கூறியதைக் கேட்ட மன்னன் ஆறாத் துயரத்துடன் தரையில் விழுந்து புரண்டான்.
புத்தரை நோக்கி அரற்றிப் புலம்பினான்.
புத்தர் அவனை நோக்கி மிக்க அமைதியாகக் கூறினார்: ‘
“ஓ! என் அருமை மன்னனே! இந்த உலகில் யாராலும் தவிர்க்க முடியாதவை ஐந்து விஷயங்கள். எவ்வளவு பெரியவராக இருந்தாலும் சரி, இவற்றை யாராலும் தவிர்க்க முடியாது.
நாள் ஆக ஆக மூப்பு அடையாமல் இருப்பது, எந்த வித நோயும் அடையாமல் வாழ்நாளில் இருப்பது, வருடங்கள் செல்லச் செல்ல காலத்தை இழக்காமல் இருப்பது, மரணமடையாமல் இருப்பது, மாறுதல் அடையாமல் இருப்பது – இந்த ஐந்தும் முடியாத விஷயங்கள். தெரிந்து கொள்” என்றார் புத்தர்.
புத்தரின் இந்த உபதேசத்தைக் கேட்டு மன்னன் அமைதியடைந்தான்.
நாள்தோறும் புத்தர் இப்படி அருளிய உபதேசங்கள் ஏராளம்; அவை அனைத்தும் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
tags- மனிதப் பிறவி, மகத்துவம்,