WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,708
Date uploaded in London – – 3 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜீமுதவாஹனனின் தியாகம்!
ச.நாகராஜன்
ஜீமுதவாஹனன் என்பவன் ஒரு வித்யாதர அரசன். ஜீமுதகேது என்ற சக்ரவர்த்தியின் புதல்வன். கருணையே வடிவானவன் அவன்.
ஒரு நாள் வழக்கம் போல வானத்தில் பறந்து கொண்டிருந்த அவன் பிரம்மாண்டமான கடலில் பளபளக்கும் ஒரு ஒளிக்குவியலைப் பார்த்தான். ரமணகதீபம் என்னும் நாகர்கள் வசிக்கும் இடத்தில் அந்த கடல் பகுதி இருந்தது.
இது போல ஒரு ஒளிக்குவியலை இதுவரை பார்த்ததே இல்லையே என்று நினைத்த அவன் அது ஒரு தீவோ என்று நினைத்து அதன் அருகில் இறங்கினான்.
அப்போது அருகில் ஒரு குட்டி நாகம் இருந்ததைப் பார்த்த அவன், “இது என்ன குவியல்?” என்று கேட்டான்.
‘ஓ’ என்று அலறிய அந்த நாகம், “அது பற்றி மட்டும் என்னைக் கேட்காதே!” என்று அழுது புலம்பியவாறே அங்கிருந்து ஓடி விட்டது.
குவியலைப் பார்த்தால் அது எலும்புக் கூடுகள்.
ஜீமுதவாஹனன் திகைத்துப் போனான்.
பின்னர் அங்கு ஒரு கிழட்டு நாகம் அருகில் இருப்பதைப் பார்த்து அதன் அருகில் சென்று, “ஓ! நாகமே! இது என்ன ஒரு எலும்புக்கூடு குவியலை நான் பார்க்கிறேன்!” இதன் விஷயம் என்ன?” என்று கேட்டான்.
கிழட்டு நாகம் பதில் சொல்ல ஆரம்பித்தது. “ஓ! வித்யாதரா! இது ஒரு பழைய காலக் கதை. கத்ருவுக்கும் வினதாவிற்கு இடையே இருந்த பகை உனக்குத் தெரியும் அல்லவா? அதையொட்டி கருடன் நினைத்தபோதெல்லாம் இங்கு வந்து நாகங்களைக் கொன்று பழி தீர்த்து வந்தது.
எண்ணிக்கையற்ற அளவில் நடக்கும் இந்த கொலைபாதகத்தைப் பொறுக்க முடியாமல் நாங்கள் கருடனை வேண்டிக் கொண்டு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டோம். அதன் படி தினம்தோறும் விருந்துடன் ஒரு நாகத்தைத் தருவதாக ஒப்பந்தம் முடிந்தது”
இதைக் கேட்ட ஜீமுதவாஹனன் மிக்க இரக்கம் கொண்டான்.
அப்போது தூரத்தில் ஒரு அழுகுரலும் பலத்த விவாதத்தில் ஏற்பட்ட குரலோசையையும் கேட்டான்.
அங்கு சென்று பார்த்தால் ஒரு குடும்பம் விவாதத்தில் ஈடுபட்டிருந்தது.
அங்கு முதிய நாகம், “நான் தான் போவேன். எனக்கு வயதாகி விட்டதே” என்று கூற அந்த நாகத்தின் மனைவி ‘நான் போகிறேன்’ என்று சொல்ல, குடும்பத்தின் ஒரு உறுப்பினர், “வயதான நீங்கள் யாரும் போக வேண்டாம், நானே போகிறேன்” என்று கூறியது.
உடனே இளம் வயது நாகம், “நான் தான் போவேன்” என்றது.
இதைப் பார்த்த ஜீமுதவாஹனனுக்கு விஷயம் என்ன என்று புரிந்து விட்டது.
அன்றைய விருந்துப் படையலைக் கொண்டு போக வேண்டிய முறை இன்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்து விட்டது.
யார் விருந்தைக் கொண்டு கொடுத்து, தானும் உணவாக பலி ஆவது என்பதைப் பற்றிய சோகமான விவாதம் தான் அது.
ஜீமுதவாஹனன் அவர்கள் அருகே சென்று, “விருந்துப் படையலை என்னிடம் கொடுங்கள். நான் போகிறேன். நீங்கள் யாரும் போக வேண்டாம்” என்றான்.
இதைக் கேட்ட அனைவரும் வாயடைத்துத் திகைத்துப் போய், “விருந்தாளி, நீங்கள் இப்படிப் பேசலாமா?” எங்களில் ஒருவரே போகிறோம்” என்றனர்.
ஆனால் ஜீமுதவாஹனன் வற்புறுத்தி விருந்தை வாங்கிக் கொண்டு உரிய இடத்தில் போய் குப்புறப் படுத்துக் கொண்டான்.
சிறிது நேரத்தில் பெருத்த ஓசையுடன் கருடன் அங்கு வந்தது. விருந்தை உண்டது. குப்புறப்படுத்திருந்த ஜீமுதவாஹனனையும் முழுங்கியது.
ஆனால் உடனே அது தளர்வடைந்து தான் உண்டதை எல்லாம் வாந்தி எடுத்தது.
ஜீமுதவாஹனனைப் பார்த்து, “ நீ யார்? வேதம் ஓதும் ஒரு உன்னதமான பிராமணனோ அல்லது விஷ்ணு பகதனோ தான் எனக்கு இந்த மயக்கத்தையும் தளர்வையும் ஏற்படுத்த முடியும். உண்மையைச் சொல்” என்று கேட்டது கருடன்.
ஜீமுதவாஹனன் நடந்தைச் சொன்னான். தான் வித்யாதரன் என்பதையும் கருணையினால் தன்னைத் தானே அர்ப்பணிக்க முன் வந்ததாகவும் கூறினான்.
இதனால் வியப்படைந்த கருடன், “உனது உன்னதமான தியாகத்தைப் போற்றுகிறேன். உனக்கு ஒரு வரம் தருகிறேன். இஷ்டமானதைக் கேள்” என்றது.
உடனே ஜீமுதவாஹனன், “ நானும் உனது பக்தனே! இனிமேல் இப்படி தினம் தோறும் நாக குடும்பத்தைப் பழி வாங்குதலை நிறுத்த வேண்டும். இந்த வரமே நான் வேண்டுவது” என்றான்.
கருடன் வித்யாதரனின் தன்னலமற்ற இந்த வரத்தைக் கேட்டு பிரமித்து அவனைப் பலவாறாகப் புகழ்ந்தது.
.நீ கேட்ட வரத்தைத் தந்தேன். இன்றோடு இங்கு வருவதை நிறுத்தி விடுகிறேன்” என்றது.
இதைக் கேட்ட நாக குலம் சந்தோஷத்தினால் ஆரவாரித்து ஜீமுதவாஹனனைப் போற்றி கொண்டாடியது.
அருமையான இந்தக் கதை சோமதேவர் இயற்றிய கதாசரித் சாகரத்திலும் க்ஷேமேந்திரர் இயற்றிய ப்ருஹத் கதா மஞ்சரியிலும் சொல்லப்படுகிறது. இது பதினோராம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.
ஜீமுதவாஹனனைப் பற்றிய சுபாஷித ஸ்லோகம் ஒன்றும் உண்டு.
கர்ண்ஸ்த்வசம் ஷிபிமார்ஸம் ஜீவம் ஜீமுதவாஹன: |
ததௌ ததீசிரஸ்தீனி நாஸ்த்யதேயம் மஹாத்மனாம் ||
சூரியன் எச்சரித்தையும் கேளாமல், கர்ணன் தனது கவசத்தை பிராமண வடிவத்தில் வந்த இந்திரனுக்குக் கொடுத்தான்.
சிபிச் சக்ரவர்த்தி பசியுடன் வந்த பருந்துக்கு (அதாவது இந்திரனுக்கு) தனது சதையை அரிந்து கொடுத்தான்.
இரக்கமே உருவெடுத்த ஜீமுதவாஹனன் தன்னையே நாக குலத்திற்காகத் தந்தான்.
ததீசி முனிவரோ வ்ருத்தாசுரனை வதம் செய்ய தனது எலும்புகளை வஜ்ராயுதம் தயாரிக்க தேவர்களுக்கு அளித்தார்.
மஹாத்மாக்களுக்கு எதுவுமே கொடுக்க முடியாதது என்பதில்லை.
இந்த சுபாஷித ஸ்லோகம், சுபாஷித ரத்னபாண்டாகாரத்தில் உதார ப்ரசாம்ஸத்தில் 11வது ஸ்லோகமாக அமைகிறது.
குறிப்பு : மஹரிஷி ததீசி பற்றிய வரலாறு கீழ்க்கண்ட கட்டுரைகள் வாயிலாக ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கட்டுரை எண் 10633 வெளியான தேதி :- 6/2/2022
10637 வெளியான தேதி :- 7/2/2022
tags- ஜீமுதவாஹனன்