WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,714
Date uploaded in London – – 5 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
நடுவெழுத்தலங்காரப் பாடல் – 1
ச.நாகராஜன்
தமிழ் என்னும் விந்தையில் சொல்லணிகள் பல உண்டு.
நடு எழுத்து அலங்காரம் என்பது கவிஞர்களின் கவிதா சாமர்த்தியத்தை காட்டுவதோடு, அதை ரஸிப்பவர்களின் புத்திகூர்மையையும் சோதிக்கும் வண்ணம் அமைக்கப்படும் பாடலாகும்.
உதாரணத்திற்கு ஒரு பாடலை இங்கு பார்க்கலாம்:
நெஞ்ச மதிகம் புனமுருக் கத்திர நீடுதெய்வ
வெஞ்ச லிலாப்பசுவோடு விரோத வியல்புபண்ணை
விஞ்சுநெற் போர்நிகழ் வொன்பான் பரியாய மேவிடையின்
நஞ்சிவன் பாக நகுலாம் பிகையம்மை நண்ணிடுமே
யாழ்ப்பாணம் க. மயில்வாகனப் பிள்ளை எழுதிய நகுலேச்சர விநோத விசித்த கவிப் பூங்கொத்து என்னும் நூலில் 55வது பாடலாக
அமைகிறது இப்பாடல்.
நகுலாம்பிகையைத் துதித்துப் பாடும் இப்பாடலில் பல சொற்கள் உள்ளன.
அவற்றின் நடு எழுத்தையோ அல்லது அந்தச் சொல் சுட்டிக் காட்டும் அர்த்தமுடைய ஒரு சொல்லையோ கண்டுபிடித்து எடுத்து,
அதன் நடு எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து நடு எழுத்துக்களையும் கோர்த்துச் சொல்லாக அமைத்துப் பார்த்தால் நமக்கு பாடலின் பொருள் எளிதில் விளங்கி விடும்.
மேலே உள்ள பாடலைப் பார்ப்போம்.
1.நெஞ்சம் – இது குறிப்பிடும் சொல் ம(ந)ம் (இது பாடலின் முதல் அடியில் முதல் சொல்லாக வருகிறது)
- அதிகம் – இது குறிப்பிடும் சொல் மி(கு)தி (இது பாடலின் முதல் அடியில் இரண்டாவது சொல்லாக வருகிறது)
3.புனமுருக்கு – இது குறிப்பிடும் சொல் ப(லா)சு (இது பாடலின் முதல் அடியில் மூன்றாவது சொல்லாக வருகிறது)
4.அத்திரம் – இது குறிப்பிடும் சொல் அ(ம்)பு (இது பாடலின் முதல் அடியில் நான்காவது சொல்லாக வருகிறது)
5.தெய்வப்பசு – இது குறிப்பிடும் சொல் க(பி)லை (இது பாடலின் முதல் அடியில் ஐந்தாவது சொல்லாக வருகிறது. – நீடு தெய்வ வெஞ்சலிலாப் பசு) - விரோதவியல்பு – இது குறிப்பிடும் சொல் ப(கை)மை (இது பாடலின் இரண்டாம் அடியில் வருகிறது)
- பண்ணை – இது குறிப்பிடும் சொல் வ(ய)ல் (இது பாடலின் இரண்டாம் அடியில் வருகிறது)
- நெற்போர் – இது குறிப்பிடும் சொல் சு(ம்)மை (இது பாடலின் மூன்றாம் அடியில் வருகிறது)
- நிகழ்வு – இது குறிப்பிடும் சொல் அ(மை)தி (இது பாடலின் மூன்றாம் அடியில் வருகிறது)
இந்த சொற்களின் நடு எழுத்துக்களை (அடைப்புக்குள் இருக்கும் எழுத்துக்களை) ஒன்று சேர்த்துப் பார்த்தால் வருவது என்ன சொல்?
நகுலாம்பிகையம்மை!
நடு எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் ‘நம் சிவன் பாகம் ஆக அமைந்துள்ள நகுலாம்பிகையம்மையை’ அடையலாம்.
எப்படி ஒரு எழுத்து அலங்காரம் பாருங்கள்!
இப்படி ஏராளமான நடு எழுத்து அலங்காரப் பாடல்கள் தமிழில் உள்ளன.
விந்தை மிகு எழில் மொழி தமிழ் என்பது புலனாகிறது அல்லவா!
TAGS– நடு எழுத்து , அலங்காரம் , யாழ்ப்பாணம், மயில்வாகனப் பிள்ளை, நகுலாம்பிகை