WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,717
Date uploaded in London – – 6 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
நடுவெழுத்தலங்காரப் பாடல் – 2
ச.நாகராஜன்
நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் தமிழில் ஏராளம் குறிப்பிடத்தகுந்த ஒரு பாடலாக சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய ஒரு பாடலைக் கூறலாம்.
இவர் கி.பி.1857ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பிரபலமான மு.ரா.அருணாசலக் கவிராயர் அவர்களது தம்பி. திருவாவடுதுறை ஆதீனம் இரண்டாவது சந்நிதானமாக இருந்த ஶ்ரீமத் நமசிவாய தேசிக சுவாமிகளிடம் முறையாகக் கல்வி கற்றுத் தேர்ந்தவர். அந்த ஆதீனத்து மகா சந்நிதானமாக இருந்த ஶ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் காலத்தும் பின்னர் ஶ்ரீமத் அம்பலவாண தேசிக சுவாமிகள் காலத்தும் ஆதீன வித்வானாக இருந்தவர். பல தம்பிரான்களுக்குத் தமிழ் கற்பித்தவர்.
தமிழ்ச் சங்கத்தில் சைவ நூல்களின் பரிசோதராகவும் இவர் இருந்தார். இவரது ஆராய்ச்சியின் மூலமாக புராதன சைவ சாஸ்திர நூல்களான ஞானாமிருதம், வில்லிபாரதம் மற்றும் பல நூல்கள் பல விசேஷக் குறிப்புகளுடன வெள்யிடப்பட்டன.
செப்பறைப் பிள்ளைத் தமிழ், அரிமழப் பிள்ளைத் தமிழ் ஆகிய இரண்டு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
இவர் இயற்றிய நடுவெழுத்தலங்காரப் பாடல் இது:-
பாடலத்தின் பெயர்சதய நாளின்பேர் தெற்குப் பகர்பெயர்
நற் புதுமையின் பேர் விரைவென்ப தின் பேர்
நாடியே படித்தலின் பேர் தலைமையின்பே ரிவற்றி
னடுவெழுத்தாம் பதிக்குருவே நவின்றவப் பேர் முன்பின்
கூடுமவை முறையேயக் கைலைவைத்தோ துநர்க்குக்
கொடுத்தேமுப் புரக்குதவிக் குலவடியார்க் ககற்றித்
தேடியுற்றார் தமக்குசெய் யாதுசெய்தப் பொழுதே
சிறப்பருளம் பலவாண தேவவருள் புரியே
பாடலின் பொருள் இது:
பாடலத்தின் பெயர் – பா(தி)ரி
சதயநாளின் பெயர் – வா(ரு)ணி
தெற்கின் பெயர் – அ(வா)சி
புதுமையின் பெயர் – ந(வ)ம்
விரைவின் பெயர் – ச(டு)தி
படித்தலின் பெயர் – ஓ(து)கை
தலைமையின் பெயர் – இ(றை)மை
பாதிரி, வாருணி, அவாசி, நவம், சடுதி, ஓதுகை, இறைமை ஆகிய சொற்களின் நடு எழுத்துக்களை (அடைப்புக்குள் தரப்பட்டவை) ஒன்று சேர்த்த்தால்
வரும் சொல் திருவாவடுதுறை.
திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேவ, அருள் புரியே என்று முடிகிறது பாடல்.
இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது.
திருவாவடுதுறை என்ற சொல் வரக் காரணமாக அமைந்த சொற்களின் முன் எழுத்தும் பின் எழுத்தையும் சேர்த்துப் பார்த்தால் வரும் சொற்கள் இவை:
பாரி – மனைவி
வாணி – கலைமகள்
அசி – அவமதிச் சிரிப்பு
நம் – ஆணவம், மாயை
சதி – வஞ்சனை
ஓகை – மகிழ்ச்சி
இமை – இமைப் பொழுது
ஆக இப்படி ஒரு அருமையான பாடலை நடுவெழுத்து அலங்காரப் பாடலாக அமைத்து இயற்றியுள்ளார் பெரும் புகழ் சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர்.
இப்படிப்பட்ட அரும் பாடல்கள் கால வெள்ளத்தால் அழியாமல் காப்பது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையன்றோ!
tags—-சுப்பிரமணியக் கவிராயர், திருவாவடுதுறை