கவிஞர்களின் வாய்ஜாலம்-1 (Post No.10,727)

picture of P R RAJAM IYER

WRITTEN BY B. Kannan, Delhi
Post No. 10,727
Date uploaded in London – – 9 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவிஞர்களின் வாய்ஜாலம்-1
Written By B.Kannan, Delhi

அன்புள்ள உலகளாவியத் தமிழ் நெஞ்சங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
தற்போதைய சுற்றுப்புறச் சூழல்கள் தரும் மன அழுத்தத்திலிருந்து விடுபட நாம் சற்று நகைச்சுவையை .ரசிப்போமே வாருங்கள்……

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பெரியோர்களின் அனுபவ வாக்கு. மன இறுக்கத்தைக் களைய அதுவே ஒரு சிறந்த மருந்து. முற் காலத்தில் செல்வச் செழிப்புள்ள ஜமீந்தார்கள், சமஸ்தானாதிபதிகள், மன்னர்கள் எனப் பலரும் தங்களருகில் ஒரு புலவர் குழாமையே வைத்தி ருப்பர். தங்கள் எஜமானரின் மனபாரத்தைக் குறைக்க, சிரித்துச் சிரித்து விலா இற்றுப் போகும் படியானச் சம்பவங்களை நயமுடன் நக்கல் நையாண்டியுடன் சுவைபடக்கூறிக் குஷிபடுத்துவர். பீர்பல், தெனாலிராமன் போன்றவர்களை நாம் மறக்க முடியுமா? தனி மனிதர்களிடமும் இந்த நகைச்சுவை உணர்வு மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது. அப்படிப்பட்ட ஓரிரு நிகழ்வுகளை தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி மொழி இலக்கியங் களிலிருந்து காண்போம்……….

ஶ்ரீமான் வேங்கடரமண ஐயங்கார் கொங்குவள நாட்டில் விசயமங்கலத்திற்கு அண்மையில் உள்ள நடுப்பட்டி எனும் சீனிவாசபுரத்தில் வைணவ அந்தணர் குலத்தில் 1865ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் சதகம் பதிகம் முதலிய பல சிறு நூல்கள் பாடியுள்ளார்.வேடிக்கையாகவுஞ் சிலேடையாகவும் பாடுவதில் வல்லவர். பொதுவாக மக்களால் அதிகம் விமரிசிக்கப்பட்டவர்கள் வக்கீல்கள் என்றால் மிகையாகாது  அவர்கள் சொத்துக்காக வழக்கு தொடுக்கும் கட்சிக் காரர்களிடம் கனிசமான காசை வக்கீல் ஃபீஸாகக் கறந்துவிடுவார்கள்.இதன் பின்னணியில் ஒரு நையாண்டிப் பாடலை ஐயங்கார் அவர்கள் இயற்றியுள் ளார். நாய்களை வக்கீலுக்கு நிகர் என உயர்த்தியப் பாட்டுதான் அது. இவ் வெண்பாவின் கருப் பொருளைப் பாரதியார் மறவன்பாட்டில் விரித்துப் பாடி யுள்ளார்.

எச்சிக் கலையும் எடுத்துப்பீ சாப்பிடலால்
இச்சித் துலாவோ டிருத்தலால் – மெச்சுதுரை
மக்கள்பாற் சென்று வாய்ச்சவடால் ஆடலால்
குக்கலும்வக் கீலெனவே கொள்.

வக்கீல் ஃபீஸ் என்று வாங்கிச் சாப்பிடுவதால், இச்சித்து லாவோடு இருத்தலால்–துரைமார்களுடன் கூடிக் குலாவி இருந்து, வெள்ளையரிடம் வாய்ச்சவடால் ஆடலால்.–ஆங்கிலேயருடன் வம்பளப்பதால் நாய் நாக் கைச் சவட்டி ( வளைத்து )- உண்பது போல் செயல்படுவதால் அவைகளும் வக்கீல் எனக் கொள்ளலாம் என்கிறார். துரை இம்மென்றால் நாய்போலே (குக்கலும்) உழைக்கத் தயாராய் வக்கீல்கள் இருப்பார்கள் என்று பொருள் படவும் நகைச்சுவையுடன் கூறுகிறார்! இம்மாதிரியான வேறு பல ருசிகரச் சம்பவங்களை, கலிவிடம்பனா, மதிமோச விளக்கம் போன்ற நூல்களிலும் படித்து மகிழலாம்!
——————————————————————————–
இன்றைக்கு 129 ஆண்டுகளுக்கு முன்(1893) விவேக சிந்தாமணி சஞ்சிகை யில் வரிக்கு வரி நகைச்சுவைத் ததும்ப விறுவிறுப்பான ஒரு தொடரை எழுதியவர் பி.ஆர். ராஜம் ஐயர். ‘ஆபத்துக் கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித் திரம்’ என்னும் பெயரிலமைந்தத் தொடரை எழுதியவர். இது, தமிழில் வெளியான முதல் நீண்ட தொடர்கதையும், தமிழில் தத்துவம் பற்றிப் பேசிய முதல் நாவலும் ஆகும். இரு தலைப்புகள் கொண்ட ( ஆரணி யாரின் ‘அரசூர் இலட்சு மணன் அல்லது அதியற்புதக் கள்ளன்’, வடுவூராரின் ‘இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி’ நாவல்கள் ஞாபகம் வருகிறதா?) முதல் நாவல் என்பது உட்பட பல்வேறு சிறப்புகளை உடையது. தமிழின் முதல் நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ 1879ல் வெளிவந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்துத் தான் (1896) இந்த நாவல் நூலாக வெளிவந்தது என்றாலும், பாத்திரப் படைப்பிலும், கதை சொல்லும் நேர்த்தியிலும், உருவகத்திலும், நாவல் அமைப்பிலும் இதுவே முதல் நாவலாக இலக்கிய ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இதோ அவரது நகைச்சுவை வண்ணம்….

இந்த நாவலின் ஏழாம் அத்தியாயம் ஒரு தமிழ்ப் பண்டிதரின் பழக்க வழக் கங்களைச் சிரிப்பூட்டும் வகையில் படம் பிடித்துக் காட்டுகிறது.
மதுரையிலிருந்த ஒரு ஜில்லா பள்ளிக்கூடம், அதன் தமிழாசிரியரைப் பற்றிதான் சொல்கிறார். சரியாய்ப் பத்து மணிக்குப் பள்ளியின் மணி அடித் தவுடன் சுமார் 20 மாணவர்கள் ”மெட்ரிக்குலேஷன்’ வகுப்பில் ஆஜராகிறார் கள். அவரவர் மேஜையின் மேல் எழுதுவதற்கு வேண்டிய மைக்கூடு வைக் கப் பட்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அம்மைத் தழும்புகள் நிறைந்த முகமும், உயரமான கறுத்த நிறமுடைய ஆசிரியர் வந்தார்.

அவர்தான் அம்மையப்ப பிள்ளை எனும் நாமகரணம் கொண்டத் தமிழ்ப் பண்டிதர். ஐந்தாறு வீடுகள், ஒரு புளியமரமும் உள்ளடக்கிய ஒரு பெரிய பட்டணமான ஆடுசாபட்டி அவர் பிறந்த ஊர்! அவர் அசகாய சூரர். எமகம், எதுகை, திரிபு என்று இப்படிப் பாட ஆரம்பித்தாரானால் குரங்குகள் அத்திப் பழத்தை உதிர்ப்பதுபோல் சடசடவென்று உதிர்த்து விடுவார். யாராவது தமிழ் தெரிந்தவன் அவர் கையில் அகப்பட்டுவிட்டால் ராமபாணம் போட் டாற்போல மூச்சு விடுமுன்னே முந்நூறு, நானூறு கணக்காகப் பாட்டுகளை வீசி அவன் காதைச் சல்லடைக் கண்களாகத் தொளைத்துவிடுவார்.

மைக்கூடிலுள்ள மையை ஆசிரியர் மேல் தெறிக்க வைத்து, அதைத் துடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு மாணவன் வண்ணம் பூசுவது போல் அதை மேலும் சட்டை, முகம் முழுவதும் பூசிவிட,பண்டிதர் திருவிழாவில்

விநோதமாய்ச் சிங்காரித்துக் கொண்ட கோமாளி போல் காட்சியளிக்க, வகுப் பில் மாணவர்கள் அடிக்கும் ரகளை ஒரே களேபரம் தான், போங்கள்!

ஒரு சமயம் தமிழ் தெரியாத ஒரு பைராகிக்கும் ஒரு சாஸ்திரியாருக்கும் சண்டை உண்டாய்விட்டது. பைராகி தன் வசவுகளில் ‘காரே, பூரே’ என்று அபரிமிதமாய் வைய, சாஸ்திரியார் முட்டாள், போக்கிரி என்றிப்படித் தனக்குத் தெரிந்த வசவுகளையெல்லாம் வைது பார்த்தார். அவன் வாயொ டுங்குகிற வழி யாகத் தெரியவில்லை. அய்யர் பழைய வசவுகளுக்கு இவன் கட்டுப்பட மாட்டான் என்று நினைத்து புதுமாதிரியாக, ‘அடா போடா, புஸ்த கமே, சிலேட்டுப் பலகையே, பென்சிலே, ஏர் உழும் கலப்பையே, மோர்க் குழம்பே, ஈயச்சொம்பே, வெண்கலப்பானையே’ என்று இப்படி வாயில் வந்த வார்த் தையை எல்லாம் வசவாக அடுக்கவே, அந்தப் பைராகி வேறு புது வசவுகள் அகப்படாமல் திண்டாடித் தத்தளித்துப் போனான்.

அதுபோல அம்மையப்ப பிள்ளையுடன் ஏதாவது ஒரு விஷயத்தைக் குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம் பித்தால் ஆயிரக்கணக்கானப் பாட்டுகளைச் சொல்லி எதிராளி யின் வாயை அடக்கி விடுவார். அந்தப் பாட்டுகள் எடுத்த விஷயத்திற்கு சம்பந்தமில்லா விட்டால் என்ன? அதனுள் என்ன குறைவு? பாட்டுகள் பாட்டுகள்தானே! அதுவும் அவர் பாட ஆரம்பித்தால் அவருக்குச் சரியாக மகா வைத்தியநாதையரால் கூடப் பாட முடியாது.!” எனப் போகிறது விருத்தாந்தம்.

சங்கீத ஞானம், நல்ல சாரீரம், தமிழ்ப் புலமை ஆகியவற்றில் சிறந்து விளங்கியது மட்டுமின்றி நல்ல புத்திமானாகவும் பிள்ளை திகழ்ந்தார். அதற்கு ஒரு தகுந்த எடுத்துக்காட்டு இதோ…….

ஒரு சமயம் அவருக்கும், அம்மாப்பட்டிக் கவிராயருக்கும் இடையே, “நடை அழகுக்குப் பெயர்போன அன்னப்பட்சி உலகில் தற்போது உண்டா? இருக்கு மானால் அது எது?” என்ற வாதம் எழுந்தது. கவிராயர்,”காகம் தான் அன்னம். பட்சிகளுக்குள் நடையில் மற்றவரைக் கவர்வது காக்கையே. ஆதலால் அதுவே அன்னப்புள்ளாதல் வேண்டும்!” என்று ஆதாரங்களைக் காட்டிச் சாதித்தார். பண்டிதரோ, “அல்ல, அல்ல!அன்னம் என்றால் சாதம். அன்னம், சாதம் இரண்டுமே வெள்ளை. அன்னமும் ஒரு பட்சி, சாதத்தையும் நாம் பட்சிக்கிறோம் (சாப்பிடுகிறோம்). தட்டுபவனைத் தட்டான் எனச் சொல்வது போல் சாதத்தையே அன்னமென்று உருவக நவிர்ச்சி அலங்காரத்தில் சொல்லப்பட்டுள்ளது!” என்று ஆரவாரமாய்ப் பல பாட்டுகளை ஆதாரம் காட்டி முழங்கினார்.

இவ்விவாதம் இடைவிடாமல் பத்து நாட்கள் நடக்க, கடைசியில் பிள்ளை அவர்கள் கவிராயரிடம்,” அன்னத்தைக் காக்கை என்று சொன்னீர். அதனால் நீரே காக்கை!” எனப் பரிகசித்தார். விடுவாரா கவிராயர். “அன்னத்தைச் சாதம் என்று சொன்ன நீங்களே சாப்பாட்டு ராமன்!” எனப் பதிலுக்குச் சாடினார். அவர் இவரை, “கவிராயர் குரங்குராயர்!” (கவி=குரங்கு) என்று சீண்ட, இவர் அவரை, “அம்மையப்பப் பிள்ளை என்றால் உமக்கே தகும்!” என அவரது தழும்பு நிறைந்த முகத்தைச் சுட்டியவாறு எக்காள மிட்டார். அடுத்து அடிதடியிலும் இறங்கிவிட்டனர். போலீஸ்காரர் சமாதா னம் செய்யப் பிரிந்தனர். கவிராயர் இரவோடிரவாக ஊர்போய்ச் சேர்ந்தார். அதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகே அவரை வாதில்வென்றுவிட்டதாகப் பெருமைப் பேசிக் கொண்டார் பிள்ளை!. அம்மாப்பட்டி யிலோ கவிராயர் பண்டிதரை ஜெயித்து விட்டதாக ஒரே அல்லோலகல்லோலம்!

நடை அழகுக்குப் பெயர் பெற்றது அன்னமோ, காகமோ, பி.ஆர்.ஆரின் சொல்லாடலில் பொதிந்துள்ளத் தமிழ்நடை அழகே, அழகு!
———————————————————————————-
சாமானியர்களான ஐந்து புலவர்கள் எப்படிப் பெரும் கவிஞராகிய ஒட்டக் கூத்தரை நக்கலும், நையாண்டியும் கலந்த பாடல்களால் ‘கலாய்த்தார்’ கள் என்பதைப் பார்ப்போம்……….

பிள்ளைப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன்னன் தமிழைப் பிழையாக உரைப்போர் தலையில் குட்டுவானாம். புலவர் வில்லிபுத்தூரார் தன்னுடன் வாதிட வரும் பிற புலவர்கள் அதில் தோற்றால் அவர்களது காதைஅறுத்து விடுவாராம். இவர்களெல்லாம் இன்று நம்மிடையே இல்லாததால் யார் வேண்டுமானாலும் தான் ஒரு கவி என்று கூறிக்கொண்டு விளையாட்டு போல் தமிழில் கவிதை என்று சொல்லி எதை வேண்டுமானாலும் எழுத லாம் என்று கேலியாக இடித்துரைக்கிறது

“குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
குரும்பியளவாக் காதைக் குடைந்து தோண்டி
எட்டின மட்டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்து தலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துறைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே””
என்ற செய்யுள்.

தமிழின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்த குலோத்துங்கச் சோழனின் பிரதான அவைப் புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். தான் ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக்கொண்டு யாரேனும் தமிழைப் பிழையாக உரைத்தால் உடனே அவரை சிறையில் அடைத்து விடுவார். அவர்கள் சிறையிலிருந்து மீள வாய்ப் பாக அமைவது ஒட்டக் கூத்தர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் கூறுவது தான். சரியான விடை கூறாதவர்கள் இருவரின் தலைமுடிகளையும் ஒன்றாக முடிந்து சிரச்சேதம் செய்துவிடுவார், சோழன் பாண்டிய இளவரசியை மணந்த போது ராணியுடன் புகழேந்திப் புலவரையும் சீதனமாக அனுப்பி வைத் தான் பாண்டிய மன்னன். ஒரு சமயம், தன் பாட் டுக்கு எதிர்ப் பாட்டுரைத்தப் புகழேந்திப் புலவரை எவ்வித விசாரணையு மின்றி ஒட்டக்கூத்தர் சிறையிலடைத்துவிட்டார். புகழேந்திப் புலவர் சிறை யிலிருந்த காலத்தில் தன்னுடன் இருந்த சிலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத் துப் புலமை பெறவைத்தார். அவர்கள் ஒட்டக்கூத்தரைச் சந்திக்கும் சமயம் ஒருநாள் வந்தது.

முதலில் குயவன் முன்னால் வர, அவனை நோக்கி ஒட்டக்கூத்தர், எதுகை மோனை முதலிய நயங்கள் கொண்ட இயல்,இசை,நாடகமெனும் முத்தமி ழான மதங்கொண்ட யானையாகிய என்னை எதிர்ப்பவர் யார்? எனும் பொருள்பட,
“மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன்வந்தெதிர்த்தவன் யாரடா?” என்று கேட்டார். அதற்குக் குயவன் சற்றும் தயங்காமல், நானா? நான் களிமண்ணால் குவளைகள், குடங்கள், சட்டிகள் முதலியவற்றை உருவாக்கும் சிறப்புடைய குயவன், யானையை அடக்கவல்ல அங்குசமும் ஆவேன் எனும் பொருள்பட,

“கூனையுங்குடமும் குண்டு சட்டியும்
பானையும் பண்ணும் அங்குசப்பயல் நான்” என்று பதிலிறுத்தான் (யானையை அடக்க ‘அங்குசப்பயல்,( அங்குசம் ), வேண்டும். குயவனா தலால் அம்+குசப்பயல் என்பதும் பொருள் அவன் பாடலில் தக்க மறுமொழி யிருக்கவும் அவன் விடுதலையானான்.

அடுத்து ஒரு கண் பார்வையற்ற நாவிதன் வர, அவனை நோக்கி, வானில் பறக்கின்ற கொக்கு, பருந்தினைக் கண்டால் எவ்வாறு பயத்தால் நடுநடுங் குமோ அவ்வாறு நடுங்கிக் கொண்டு பதைபதைக்கும் மனத்துடன் என்முன் நிற்பவனே, பொட்டைக் கண்ணா, சொல்வாய் எனும் பொருள்பட,

“விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன விலவிலக்கப்
புண்பட்ட நெஞ்சொடு மிங்கு நின்றாய் பொட்டையாய் புகலாய்”
என்று ஒட்டக்கூத்தர் மொழிய அதற்குப் பதிலாக, நான் பொட்டைக் கண் உடையவனாக இருப்பினும் நாவிதனாகிய நான் பண்ணில் உயர்ந்த செந் தமிழ்ப் பாடல்களை நீயும் திடுக்கிடும் வண்ணம் பாடும் வல்லமை படைத் தவன் எனும் பொருள்பட,

“கண்பொட்டையாயினும் நாவிதன் நான் கவிவாணர் முன் பண்பட்ட செந் தமிழ் நீயும் திடுக்கிடப் பாடுவனே” என்றான். அவனது பதிலும் முகத்தில் அறைந்தாற்போல் ஆணித்தரமாக இருக்கவே அவனும் விடுதலை செய்யப் பட்டான்.

அடுத்து வந்தான் கொல்லன். அவனிடம் பாடலாகக் கேளாமல் வசன நடையில், “நீ யார்?உன் தகப்பன் பெயர் என்ன? உன் தொழில் என்ன? சொல்வாய் எனக் கேட்டார் ஒட்டக்கூத்தர். அதற்கு அவன், “என் தந்தை பெயர் செல்லப்ப ஆசாரி, என் பெயர் திருவேங்கடாச்சாரி. நான் உலகுக்கே குருவாக விளங்குபவன். கொல்லனாகிய என் கவிதையில் குறை சொன்ன வரை அவரது பல்லைப் பிடுங்கி, ஆட்டிஅலைக்கழித்து அவரது பகைவர்கள் எள்ளி நகையாடும் வண்ணம் என் கவிதையாகிய இருப்பாணியாலேயே
அடிப்பேன் எனும் பொருள்பட,

“செல்வன் புதல்வன் திருவேங்கடவன் செகத்குருவாம்
கொல்லன் கவியைக் குறைசொன்ன பேரைக் குறடுகொண்டு
பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டாம் ஆட்டிப் பகைவர் முன்னே
அல்லும் பகலும் அடிப்பேன் கவியிருப்பாணி கொண்டே”
என்று கூறவே அவனும் விடுவிக்கப் பட்டான்.

அடுத்து வேளாளன் வந்து நிற்க, ” பிரபல கவிஞனான என்முன் வரண்ட பாழ்நிலம் போல் தோற்றமளிக்கும் நீயும் ஒரு கவியோ? என்முன் நிற்கும் தகுதி உனக்குண்டோ? எனக் கூத்தர் ஏளத்துடன் கேட்டார். உடனே அவன் ஒட்டக்கூத்தரையும் மன்னனையும் பார்த்து இப்படிப் பாடினான்

“கோக்கண்டு மன்னவர் குறைகடற் புக்கிலர் கோகனகப்
பூக்கண்டு கொட்டியும் பூவாதொழிந்தில பூதலமேற்
காக்கின்ற மன்னவ, கவியொட்டக் கூத்த நும்
பாக்கண்டொளிப்பர்களோ தமிழ் பாடிய பாவலரே!”
பொருள்: கோக்கண்டு- சக்கரவர்த்தியைக் கண்டு (மற்ற அரசர்கள்), குறைகடல் புக்கிலர்- ஒலிக்கின்றக் கடலுக்குள் ஒளிந்துக் கொள்ளவில்லை, கோக்கனகப் பூக்கண்டு- செந்தாமரை மலரைப் பார்த்து, கொட்டியும்- நீர்க் கொடி வகையும், பூவாதொழிந்தல- மலராமல் இருந்ததில்லை, பூதலமேற்- 7 தீவுகளையும் காக்கின்றச் சோழமன்னனது (அவைப் புலவரான உமது), பாக்கண்டொளிப்பர்களோ- சொல்வண்ணம், பொருள் நயம் அமைந்தப் பாடல்களைக் கண்டு ( மற்ற தமிழ்ப் புலவர்கள்), ஒளிந்துதான் கொள் வார்களோ?

“பல தேசங்களைக் கட்டியாளும் மாமன்னர்களைக் கண்டு சிறு நாடுகளை ஆளும் குறுநில மன்னர்கள் கடலுக்கடியில் சென்று ஒளிந்து கொள்ள வில்லை. பூக்களின் அரசனெனப் போற்றப்படும் தாமரைப்பூ மலர்வதனால் அருகிலிருக்கும் சிறு சிறு நீர்க்கொடி வகைகள் பூவாமல் இருப்பதில்லை, உலகைக் காக்கும் மன்னா! கவி ஒட்டக்கூத்தா!உங்கள் பாடல்களைக்கேட்டு பிற புலவர்கள் பாடாமல் இருந்து விடுவார்களா?” என்று பரிகாசம் தொனிக் கக் கேட்கவும் சுற்றியிருந்தோர் ஆரவாரமிட்டனர். தற்பெருமைப் பேசிய கூத்தருக்குக் கிடைத்ததோ சபையோரின் ஏளனப் பார்வையும், கேலிப் பேச்சும் தான்!

பாடலை நக்கலுடன் கூறிய வேளாளனும் விடுதலை செய்யப்பட்டான். ஒட்டக்கூத்தரின் செருக்கு ஓரளவு அடங்கியது.
ஏட்டிக்குப் போட்டி பேசும் தமிழ்ப் புலவர்கள் இருக்கும் வரை பரிகாசம், புன்னகை, கேலி, நக்கல், நகைச்சுவை உணர்வுகளுக்குப் பஞ்சமே இருக்காது!

picture of Ottakuthar

If u dont see pictures here, please go to my other blog swamiindology.blogspot.com

to be continued…………………..
அம்மாப்பட்டிக்கவிராயர் , கவிஞர், வாய்ஜாலம், ஒட்டக்கூத்தர், பிள்ளைப் பாண்டியன் ,அம்மையப்ப பிள்ளை, வேங்கடரமண ஐயங்கார் ,பி.ஆர். ராஜம் ஐயர்

Leave a comment

1 Comment

  1. rajapaarvaithiruthiru

     /  March 9, 2022

    கவிஞர்களின் வாய்ஜாலம் குறித்த
    தங்கள் வார்த்தைஜாலம் சிறப்பு.

    மூலங்காட்டி, விளக்கமும் கூட்டிய ஜகஜாலக் கட்டுரை.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: