WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,734
Date uploaded in London – – 11 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
“பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர்
கரைபொரு திரங்கும் கனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே யுரை செல
மலர்தலை யுலக மாண்டு கழிந்தோரே
-234/237 மதுரைக் காஞ்சி
xxx
இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே
–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்
xxxx
தமிழர்களின் வரலாற்று உணர்வு அபாரமானது!! 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அவனுக்கு எவ்வளவு வரலாறு தெரிந்து இருந்தது என்பதைப் புற நானூற்று வரிகளும் மதுரைக் காஞ்சி வரிகளும் நிரூபிக்கின்றன. திருவள்ளுவர் ஒரு அற்புதமான உவமை மூலம் தனது புள்ளிவிவர இயல் (Statistical Knowledge) அறிவை வெளிப்படுத்துகிறார்.
வெள்ளைக்காரன் உளறல் வாயன் . அவனுக்குத் தமிழ் தெரிந்தால் சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருதம் தெரிந்தால் தமிழ் தெரியாது. இதனால்தான் கால்டுவெல் உளறலுக்கு திராவிட ஒப்பிலக்கண நூலை வெளியிட்டோரே, அடிக்குறிப்பில் இவர் சம்ஸ்க்ருதம் பற்றிச் சொன்னது தவறு என்று சேர்க்க வேண்டியதாயிற்று. அதாவது “நான் ஒரு முட்டாளுங்க” (Film Song by Comedian Chandrababu) என்று குன்றின் மீது ஏறி கால்டுவெல் அறிவிக்கிறார்.
இந்துக்களுக்கு கொஞ்சமும் வரலாற்று உணர்வே (Historical Sense) இல்லை; நல்லவேளை காஷ்மீரி பிராஹ்மணன் கல்ஹணன் என்பவன் வரலாற்று உணர்வோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ தரங்கணி (Raja Tarangini by Kalhana) நூலை எழுதினான் என்று வெள்ளைக்காரர்கள் செப்பினார்கள். அதிலும் அவர் எழுதிய ராஜதரங்கிணியில் (ராஜ வம்ச நதி River of Kings ) முதல் நாலு அத்தியாயங்கள் வரலாறு இல்லை என்று உளறினார்கள் . அவர்களுக்குப் புரியாத, தெரியாத எல்லாம் தப்பு!
அது மட்டுமல்ல; சிந்து சமவெளியில் மன்னர் இல்லை, புத்தருக்கு முன்னர் மன்னர் இல்லை என்றெல்லாம் எழுதிக்குவித்தனர். அனால் புராணத்தில் 150-க்கும் மேலான மன்னர் பெயர்கள் (ஒரே வம்சத்தில் மட்டும் ) உள்ளதை பட்டியல் போட்டுள்ளனர். அதைக்கேட்டு வியந்த ரோமானிய , கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, அரியன்( Pliny , Arrian) ஆகியோர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதுகையில் “இவர்கள் 6000 ஆண்டு வரலாறைச் சொல்கிறார்கள்; அதற்குச் சான்றாக 153 மன்னர் பட்டியலையும் சொல்கிறார்கள்” என்று எழுதிவைத்துள்ளனர்.
புராண மன்னர் பட்டியலை இதுவரை எந்த வரலாற்று Syllabus சிலபஸிலும் சேர்க்கவில்லை! ஆனால் புராணம் உலக விந்தைகளில் உண்டு. உலகெங்கிலும் எல்லா கலாசாரங்களிலும் புராணம் உண்டு என்றாலும் இந்து மத புராணங்கள், அதற்கான இலக்கண வரம்புக்குள், எழுதப்பட்டுள்ளன. அதை பஞ்ச லக்ஷணம் என்பர். அந்த 5 அம்சங்களில் ஒன்று பூகோளம்/புவி இயல் இரண்டாவது வரலாறு /வம்சாவளி. உலகில் இப்படி 5 அம்சங்களுடன் எழுதப்பட்ட புராணம் வேறு எந்த பண்பாட்டிலும் இல்லை .
தமயந்தி, திரவுபதி, இந்துமதி ஸ்வயம்வரம் நிகழ்ச்சிகளுக்கு 56 தேச மன்னர்கள் வந்தார்கள் என்று படிக்கிறோம். காளிதாசன் தனது ரகு வம்சத்தில் பாண்டிய மன்னரும் இந்துமதி ஸ்வயம்வரம் நிகழ்ச்சிக்கு வந்தார் என்று 4, 5 பாடல்களில் வருணிக்கிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே , தமிழனையும் ,அகஸ்தியனையும் தொடர்புபடுத்தும் பாடல்கள் அவை.!
பிரதம மந்திரி பதவிவகித்த திருமதி இந்திராகாந்தி 1971-ம் ஆண்டில் ஒருநாள் இரவில் திடீரென்று ஒரு அவசர சட்டம் அறிவித்தார். இந்தியாவிலுள்ள 560 மன்னர் சமஸ்தானங்களுக்கும் இனி ராஜ மான்யம் (Privy purse) கிடையாது என்றார். அதாவது வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுப் போகும்போது இந்தியாவில் 560 ராஜாக்கள்!! அவர்களுக்கு அவன் போட்ட ரொட்டித்துண்டு ராஜ மான்யம் (Privy purse) .56 அல்லது 560-ஐ 153ஆல் பெருக்குங்கள். அதுதான் 2000 ஆண்டுளுக்கு முன்னர் உள்ள பட்டியல்!
இது எல்லாம் தமிழர்களுக்குத் தெரியும்! எப்போது?? 2000 ஆண்டுகளுக்கு முன்னரே!! பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் போற்றி மாங்குடி மருதனார் பாடியது ‘மதுரைக் காஞ்சி’ என்னும் நூல். 18 சங்க இலக்கிய நூல்களில் மிகவும் அதிகமான அடிகளைக் கொண்ட நூல். அதில் இதுவரை இருந்த மன்னர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகையில்
“பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர்
கரைபொரு திரங்கும் கனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே யுரை செல
மலர்தலை யுலக மாண்டு கழிந்தோரே
-234/237 மதுரைக் காஞ்சி
பொருள்
அகன்ற இடம் பொருந்திய இந்த உலகத்தை ஆண்டு மாண்டுபோன மன்னர்களின் எண்ணிக்கை, கரையை மோதி முழங்கும் கரிய கடலின் அலைகள் குவிக்கின்ற மணலைவிடப் பலர் ஆவர்
சுருங்கச் சொன்னால் மன்னர் எண்ணிக்கை, கடல் மணல் துகள் எண்ணிக்கையை வீட அதிகம்! எப்போது நெடுஞ்செழியன் ஆண்ட காலத்திலேயே !
இதற்கும் முன்னர் புறநானூற்றில் பல பழம்பாடல் என்று அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பாடல்களிலும் இந்த வரிகள் உள்ளன!
இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே
–புற நானூறு 363, ஐயாதிச் சிறுவெண் தேரையார்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் புலவர் பாடிய பாடல் இது
கரிய கடலால் சூழப்பட்ட இப்பெரிய இடத்தையுடைய மண்ணுலகத்தை– வேல மரத்தின் இலை அளவு இடமும் மற்றவர்க்கு விடாதபடி— தாமே ஆண்ட மன்னர்களின் எண்ணிக்கை கடல் அலைகள் ஒதுக்கும் மணலை விடப் பலர் ஆகும்.
இதோ இன்னும் ஒரு பாடல்:-
சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண்கேழ்
நூற்றிதழ் அலரின் நி ரை கண்டன்ன
வேற்றுமை இல்லாத விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந்தோரை எண்ணுங்காலை
–புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்
நம்மாழ்வாரும் (800 CE) ஒரு பாசுரத்தில் பாரத நாட்டை ஆண்டு போன மன்னர்களின் எண்ணிக்கை கடல் மணல் துகள்களுக்குச் சமம் என்கிறார். பல ஆயிரம் , பல ஆயிரம் மன்னர்களைக் கண்டது பாரதம்!
நினைப்பான் புகின்கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகன்களும் இவ் உலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்குற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ
–பாடல் 3010
பொருள்:-
பல யுகங்கள் இவ்வுலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போன அரசர்கள் மிகப்பலர். நினைக்கப்புகுந்தால் கடல் மணல்திட்டிலே உள்ள நுண்மையான மணலைக் காட்டிலும் அவர்கள் பலர் ஆவர். அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாமல் அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றையும் பார்த்தோம் இல்லை. ஆதலால் பனைமரம் போன்ற பெரிய கால்களை உடைய மதயானையைக் கொன்ற கண்ணபிரானது திருவடிகளை வணங்குங்கள்.
xxxx
வள்ளுவன் வாய்மொழி
வள்ளுவன் திருக்குறளில் வரும் அருமையான உவமையையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தம் ஆகும் .
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:-22)
பொருள்-
பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.
வள்ளுவன் பெரிய புள்ளிவிவர (Statistician) இயல் நிபுணன்; ஆகையால் அவனுக்கு ‘டக்’ என்று மனதில் பட்டது இந்த உவமை. Super Fast Computers சூப்பர் பாஸ்ட் கம்பியூட்டர்களைக் கொண்டும் கூட 10,000 ஆண்டுகளில் இறந்து போன ஆட்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. அது போலத்தான் ஆதி சங்கரர், ரமண மகரிஷி , ராம கிருஷ்ண பரம ஹம்சர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோரின் பெருமையை எடுத்துக்கூற முனைவது அல்லது முயல்வது ஆகும்.
அதாவது எண்ணிக்கை என்பதற்கு மணல் துகளையும், இறந்தோரின் எண்ணிக்கையையும் ஒப்பிடுவது அவர்களது ஆழ்ந்த ஞானத்தைக் காட்டுகிறது
—-SUBHAM—
tags- வரலாறு, தமிழன் , கடல், மணல் துகள் ,எண்ணிக்கை இருங்கடல்