WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,736
Date uploaded in London – – 12 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
த,மிழ் என்னும் விந்தை
வினா – உத்தரம் : சித்திர கவி பாடல்! – 2
ச.நாகராஜன்
வினா – உத்தரம் என்பதை 8-2-1939இல் வெளியாகிய தனது ‘சித்திர கவி விளக்கம்’ என்ற புத்தகத்தில் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமால் கலைஞர்) மூன்று பாடல்களைத் தந்து விளக்குகிறார்.
அந்தப் பாடல்கள் வருமாறு:
1.திருவேகம்பம்!
பூமகள்யார் போவானை யேவுவா னென்னுரைக்கும்
நாமம் பொருசரத்திற் கென்னென்பர் – தாமழகின்
பேரென் பிறைசூடும் பெம்மா னுவந்துறையுஞ்
சேர்வென் திருவேகம் பம்
இதன் பொருள் :-
பூமகள் யார்? = செந்தாமரைப் பூவில் உறைபவள் யார்?
போவானை – ஒரு இடத்திற்குச் செல்லுபவனை
ஏவுவான் என் உரைக்கும் – அவனுக்கு ஆணையிடுவோன் என்ன என்று கூறுவான்?
பொரு சரத்திற்கு நாமம் என் என்பர் – போரில் விடும் பாணத்திற்கு என்ன பெயர் சொல்வர்?
அழகின் பேர் என்? – அழகினை உணர்த்தும் பெயர் என்ன?
பிறை சூடும் பெம்மான் – பிறைச் சந்திரனைத் தனது முடியில் சூடும் சிவபிரான்
உவந்து உறையும் சேர்வு என்?- விரும்பி எழுந்தருளி இருக்கும் தலம் எது?
திருவேகம்பம் – திருவேகம்பம் ஆகும்.
இப்போது கேள்வியையும் பதிலையும் காண்போம்
பூமகள் யார்? – திரு (லக்ஷ்மி தேவி)
போவானை ஏவுவான் என் உரைக்கும் – ஏகு
பொரு சரத்திற்கு நாமம் என் என்பர் – அம்பு
அழகின் பேர் என் – அம்
பிறை சூடும் பெம்மான் உவந்து உறையும் சேர்வு என்?- திருவேகம்பம் (என்னும் திருத்தலம்)
திரு+ஏகு+அம்பு+அம் = திருவேகம்பம்
இப்படி வினாவும் உத்தரமும் ஒரே பாடலில் அமைகிறது.
- நிலையாமை கடைப்பிடிபுண்ணியஞ் செய்!
இன்னொரு பாடல்! இது அறநெறிச் சாரம் நூலில் வரும் பாடலாகும்.
நீத்தொழிந்த வாறைந் தடக்கிப்பின் னிச்சயமே
வாய்ந்தமைந்த வாயில்பெண் ணானையே – கூர்த்தகு
வாளேறோ டோசை விளைநில மிவ்வல்லாற்
கேளா யுடன்வருவ தில்
இப்பாடலின் பொருள்:
நீத்தொழிந்த ஆறு – நிலை
ஐந்தடக்கி – ஆமை
வாயில் – கடை’
பெண்ணானை – பிடி
வாளேறு – புண்
ஓசை – இயம்
விளை நிலம் – செய்
இந்தப் பொருள் கொண்டுள்ள சொற்களைச் சேர்த்தால் வருவது
‘நிலையாமை கடைப்பிடிபுண்ணியஞ் செய்’ என்பதாகும்.
கூர்த்தகு என்பதை கூத்தற்கு என்ற பாடத்தைக் கொண்டு
‘கூத்தற்கு வாளேறோடோசை விளை நிலம்’ என்று கொண்டு
சிவ புண்ணியஞ் செய் என்றும் பொருள் கூறுவர்.
கூத்தன் – சிவ பிரான்
- நல்வினை முயல்!
இன்னொரு அறநெறிச்சாரம் பாடல் இது:
நல்வினை நாற்கால் விலங்கு நவைசேரும்’
கொல்வினை யஞ்சி குயக்கலம் – மெல்ல
வுறுதியு மல்லவு நாட்பேர் மரப்பேர்
இறுதியி லின்ப நெறி
பொருள் விளங்காத பாடலாக இருக்கிறதே என்று மலைக்க வேண்டாம்.
நாற்கால் விலங்கு என்றால் முயல்
குயக்கலம் என்றால் அகல்.
நாட்பேர் சோதி என்றால் நாள் = நக்ஷத்திரம் சுவாதி
மரப்பேர் – தேறு (தேற்றாமரம்)
அதாவது,
நல்வினை முயல்
நவை சேரும் கொல்வினை அஞ்சி அகல்
மெல்ல உறுதியும் அல்லவும் சோதி
இறுதியில் இன்ப நெறி தேறு
(உறுதியும் அல்லவும் சோதித்து பின்னர் உண்மையை இறுதியில் தேறிக் காண்)
என்ற பொருளைத் தருகிறது இந்தப் பாடல்.
இப்படி வினாவை விடுத்து பதிலையும் தன்னுள்ளேயே அடக்கும் வினா உத்தரப் பாடல்கள்
தமிழில் ஏராளம் உள்ளன.
தொகுத்து அனைத்தையும் படித்தால் அதன் சுவையே தனி தான்!
tags- வினா – உத்தரம் 2 சித்திர கவி பாடல்- 2