IF U DONT SEE FOUR ATTACHMENTS, PLEASE GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com
WRITTEN BY B .KANNAN, DELHI
Post No. 10,740
Date uploaded in London – – 13 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காம தகனம் எனும் மதனோற்சவம்
Written By B.Kannan, Delhi
அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப்பதிவில் தமிழ், சம்ஸ்க்ருதம், மொழிகளில் காமதகன நிகழ்வு எப்படி யெல்லாம் கவிஞர்களால் விவரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்………
பழங்காலத் தமிழர்களின் சிறப்புமிக்கப் பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது என்பதைப் பழந்தமிழ் நூல்கள் பலவும் குறிப்பிடு கின்றன. மந்திர மகோததி எனும் சம்ஸ்க்ருத ஸ்தோத்திரப் பாடல்மாறனை இப்படி அடையாளம் காட்டுகிறது.
”மலர்க் கணைகளைத் தன் வசம் வைத்திருப்பவனும், உலகத்து உயிரினங் களின் மகிழ்ச்சிக்குக் காரணக் கர்த்தாவாக இருப்பவனும், அன்புள்ளங்களின் மனதை அலைக்கழிப்பவனும், உலகின் கண்களாக விளங்கும் பூரண மன நிறைவு, அன்பு (நேசம்) ஆகிய இரண்டையும் தாராளமாய் அள்ளித் தருபவ னுமான, ஹே, மதனா, உன்னை மனதார வணங்குகிறேன்.”
தமிழ்ச் சங்க நூல் அகநானூற்றில்” கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை வைத்து கொங்கு நாட் டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது.அங்கு ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோர்த்து இடுப்பில் கட்டிக்கொண்டுத்தெருக்களில் ஆடிப்பாடி இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும்திருவரங்கத்திலும் “மூன்று பக்கம் நீர் சூழ்ந்து நிலம் துருத்திக்கொண்டிருக்கும் மேட்டில்மகளிர் தன் துணையைத் தழுவிக் கொண்டிருப்பர். அங்கு வில்லேந்திய மன்மதன், மனைவி ரதியுடன் விளையாடுவது போன்ற காமாண்டிக் கூத்து நிகழும் (கலித்தொகை 35:13-14).
மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றா வது நாள் தொடங்கி வளர்பிறையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் காமன் பண்டிகை, காம தகனம்,காமன் கூத்து, காமாண்டி என்றும் கிராமப் புறங்களில் அழைக்கப்படுகிறது. இதன் கரு, நாட்டார் வழக்குமுறையில் பாடல், ஒப்பாரி, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், லாவணி (இரு குழுக்கள் வாதம் செய்வது போல் பாடல் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சி) மூலமும், ஓவியம், சிற்பம், சிலைகள் வாயிலாகவும் அதிகப் பிரசித்தி அடைந்தது. அதே சமயம் வெவ்வேறு மாவட்டங்களுக்கிடையே நிலவிய மாறன் பிறப்பு, மற்றும் கதைசொல்லும் நடைவேறுபட்டதைக் கீழ்கண்ட நாட்டுப்புறப் பாடல் மூலம் அறிய முடிகிறது.
(நன்றி சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நூல்)
“மால்மகன் மதனெங்குதொரு புராணம்
மலர்வேதன் மகனெங்குதொரு புராணம்
மால்வண்ணன் மகனெங்குதொரு புராணம்
தர்மன் மகனெங்குதொரு புராணம்
சால்கண்ணன் மகனெங்குதொரு புராணம்
சங்கல்பன் மகனெங்குதொரு புராணம்.”
முக்கியமாக, கந்தபுராணத்தில் இடம்பெறும் சம்பவங்களே இதன் பின் புலமாக விளங்குகிறது.
மன்மதனுக்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் ஆதியில் தமிழகத்தில் இருந்திருக்கிறது. மன்மதன் கோயில் காமட்டிக் கோயில் என்று சிற்றூர் மக் களால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு முன்புறமிருக்கும் திடலில் இவ்விழா நடைபெறும்.பந்தலின் நடுவே நடப்பட்டகம்பு ஒன்றில் மேல் வைக்கோல் பிரி சுற்றப்பட்டு, அதன் தலையில் வரட்டி வைத்துக் கட்டப்படும். மாவிலை, வேப்பிலை, குங்குமம், திருநீறு வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் உருவம் காமதேவன் மன்மதனை உருவகப்படுத்தும். முன்பே பந்தலில் நடப் பட்டுள்ள ஆலங்கிளையின் அடியில் பரமசிவன் உட்கார்ந்து தபசில் ஆழ்ந் திருப்பார்.
அருகில் சொக்கப்பனை போன்ற அமைப்பில் ஒரு கூம்பு வடிவத்தில் கட்டப் பட்டுள்ளத் துவரை மிளார்களின் நடுவே மன்மதன் உருவம் வரையப்பட் டுள்ள படம் வைக்கப்பட்டிருக்கும். பரமசிவன் தபசிருக்கும் ஆலங்கிளைக்கும் மன்மதன் படம் உள்ள கூம்புக்கும் இடையே இரட்டைவாணம் கோர்த்தக் கயிறு கட்டப்பட்டிருக்கும். தீபாராதனை முடிந்ததும் சகடையில் அல்லது வெள்ளை நிற யானை மீதமர்ந்து ரதி மன்மதன் சுதைச் சிற்பங்கள், எதிரே ரதி மன்மதன் வேடமிட்டவர்கள் கைகளில் வில்லேந்தி முன்னே நடக்க ஊர் வலம் வந்து. பந்தலுக்குத் திரும்பும் மன்மதன் தபசிருக்கும் சிவனைநோக்கி மலர் அம்பு எய்யும் விதமாக, அவன் படம் இருக்கும் பக்கத்தில் தொங்கும் இரட்டைவாணம் பற்ற வைக்கப்படும். உடனே அது சீறியபடி சிவனை நோக் கிப் போகும். மறுமுனையை அடைந்ததும் இரட்டை வாணத்தின் மறுபகுதி தானாகவே பற்றிக் கொண்டு மன்மதனை நோக்கிச் சீறிப்பாயும். சிவன் நெற் றிக் கண்ணைத் திறந்து காமனை எரிப்பதாக அர்த்தம். காமன் படத்தின் மீது கற்பூரத்தைக் கொளுத்துவார்கள். படம் பற்றியெரிய அதைத்தாங்கி நின்ற துவரை மிளாறும் சடசடவென எரியும் அதிர்வேட்டு முழங்கி காமதகனம் முடிந்ததை ஊருக்கு அறிவிக்கும்.
ரதிதேவியின் சொல்லொன்னா சோகங்களைச் சுமந்தக் காதல் சொட்டும் பாடல்களை மன்மதன் மற்றும் ரதி என இரு குழுவாகப் பிரிந்து பாடுவார் கள்..பிறகு ரதி, சிவனிடம் அழுது புலம்புவதும் மன்மதனை மீண்டும் உயிப் பிக்க வேண்டுவதுமான ஒப்பாரி வடிவில் வெகு உருக்கமாய் இருக்கும். பாடல்கள் கொட்டு முழக்குடன் மூன்று நாட்கள் தொடரும். இவ்வகையானப் பாட்டுகள் அடங்கியப் புத்தகமே, மதுரை ஶ்ரீமத் பழநிக்
குமாருசாமிப் புலவர் இயற்றிய மன்மதன் லாவணி நூல் (1923)
அதற்குப் பின் மன்மதனுக்கு சிவன் மீண்டும் உயிர்க் கொடுத்து விட்டதாகக் கூறி அவனுக்கு மலர்ப் பந்தல் அமைக்கப்படும். காமதேவன்உருவபொம்மை எரித்த இடத்தில், காமன் உயிர்ப் பெற்றதற்கு அடையாளமாக மண் லிங்கம் எடுக்கப்பட்டு பச்சை மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து வழிபடுகிறார்கள். சிலர் பச்சைப் பப்பாளிச் செடியையும் நடுவர். மன்மதன் உயிரோடு மீண்டும் வந்துவிட்டதைக் கொண்டாடும் வகையில் பெண்கள் அனைவரும் மாவிளக்கு வைத்து வழிபடுவார்கள்.
கடைசி நாள் அன்று எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று போட்டிப் பாட்டுக் கச்சேரி நடக்கும். ஒருவர்” மன்மதன் சிவபெருமான் முன் நிற்க மாட்டாமல் எரிந்து சாம்பலாயினான். அவன் மீண்டும் பிழைத்து எழுந்திருந்திருக்க மாட்டான்” என்று பாட்டுக் கட்டுவார். மற்றொருவர்” மன்மதனுடைய செய லினால்தான் சிவபெருமான் உமையவளை மணந்து கொண்டார் என்பதால் காதலுக்கு ஒரு போதும் தோல்வியில்லை, வெற்றிதான்” என்று எதிர்ப் பாட்டு பாடுவார் கேட்கிற ரசிகர்களும் ஆளுக்கொரு பக்கம் ஆதரவு தரு வார்கள். முடிவில் மன்மதன் எரிந்து போகவில்லை என்ற முடிவை அனை வரும் ஏற்று மன்மதனைப் புகழ்ந்துப் பாடுவர். பெருத்த கோலாகலத்துடன், எரிந்தகட்சி, எரியாத கட்சித் தர்க்கப் பாடல், ரதி மன்மதன் தேர் ஊர்வலம் ஆகியவற்றுடன் பண்டிகை இனிதே முடிவடையும்.
அரியலூர்–தஞ்சை நெடுஞ்சாலையில் திருமானூரிலிருந்து சுமார் 20 கி.மீ .தொலைவில், ஏலக்குறிச்சி,பெரியமறை மாதூர் கடந்து அமைந்துள்ளது ஶ்ரீ பாலாம்பிகை உடனுறை ஶ்ரீசௌந்தரேஸ்வரர் திருநல்லூர்.,காமரசவல்லி ஆலயம். மகேசனின் அருளால் மன்மதன் உயிர்த்தெழுந்தத் தலம்.காவிரி வடகரை மயிலாடுதுறை வட்டத்தில், தேவாரப் பாடல் பெற்ற 26-வது சிவாலயம். ஶ்ரீ ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் திருநல்லூர் கோவி லாகும். இங்குதான் காமன் ஈசனால் எரிக்கப்பட்டான் என்கிறது தலபுராணம். இவ்விரண்டுத் தலங்களிலும் காமதகன சம்பவம் மாசி பௌர்ணமி நாளில் வெகு விமரிசையாக நடந்தேறுகிறது.
அடுத்து, சம்ஸ்க்ருத இலக்கியத்தில் மதனோற்சவத்தைப் பற்றி பார்ப்போம்…
—————————————————————————————————————-