காம தகனம் எனும் மதனோற்சவம் – part 2 (Post No.10,746)

FOR PICTURES GO TO MY BLOG swamiindology.blogspot.com

WRITTEN BY B.KANNAN, DELHI
Post No. 10,746
Date uploaded in London – – 15 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

காம தகனம் எனும் மதனோற்சவம் – 2
Written By B.Kannan, Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப்பதிவில் சம்ஸ்க்ருதம் மொழியில் மதனோற்சவ நிகழ்வு எப்படியெல்லாம் கவிஞர்களால் விவரிக்கப் பட்டுள்ளது என்பதைக் காண்போம்………

மகா சிவராத்திரியுடன் சிசிர ருதுவின் பனிப் பொழிவு ” சிவ,சிவ” என்று விலகி விடும். அடுத்து வரும் பூரண நிலவு நாளில் வசந்த ருதுவின் வரவை மிக்க உற் சாகத்துடன் வரவேற்க எல்லாரும் தயாராகி விடுவர். நமக்குச் சிசிர ருதுவின் பிற் பகுதி நடக்கையில், வட இந்திய மாநிலங்களில் கோலாகலத்துடன் வசந்த ருது களை கட்ட ஆரம்பித்துவிடும்.

மாறன், அரூவனான அனங்கன், காதல் வேட்கையைத் தூண்டுவதால் ராகவிருந்தன், மனதை அலைக்கழிப்பதால் மன்மதன், தேவர்களையும் வசப்படுத்துவதால் கந்தர்பா, போதைப்பொருள் போல் செயலாற்றுவதால் மதனா, ரதியின் பதி என்பதால் ரதி காந்தா, மலர்க் கணைகளை உடையவன் ஆதலால் புஷ்பவான்,குசுமஷரா, மனதை ஏக்கமடையச் செய்வதால் காமன், காதல் நினைவுகளில் மூழ்க வைப்பதால் ஸ்மரா, செங்கரும்பு வில் ஏந்தி இருப்பதால் இக்ஷுதனுர்தாரா, என வெவ்வேறு நாமங்களால் அறியப்படுகிறான் வசந்தன்.
வசந்த ருது, ரதி-மன்மதன் என்று சொன்னாலே கவிகளின் எழுத்தாணி கிளுகிளக்க ஆரம்பித்துவிடும். சிருங்கார ரசம் கரைபுரண்டு ஓடுவதற்குக் கேட்கவா, வேண்டும்? பழையமுது, தொட்டுக்க மாவடுக்காக (எவ்வளவு முறைதான் பலாச்சுளையை மொய்க்கும் ஈக்கள் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பது?) ஆவலுடன் ஜீயர்புரம் ஓடோடிப் போகும் திருவரங்கன் மனநிலையில் தான் அவர்கள் இருக்கக் கூடும்! விரகதாபத்தில் சிக்கித் தவிக்கும் நாயகனின் உற்ற தோழனாக இருந்து நக்கல், நையாண்டி, வேடிக்கையாகப் பேசி அவனை ஊக்குவிக்கும் பணியை மேற்கொள்வது பிராக்ருத, சம்ஸ்க்ருதக் காவியங்களில் வரும் விதூஷகர்கள் மட்டுமே! பல நாடகங் களில் இதைக் காணமுடிகிறது.

இனிமையாகக் கூவும் குயில், பிள்ளை மொழி பேசும் பஞ்சவர்ணக் கிளி, பூக்களிலி ருந்துத் தேனை உறிஞ்ச ரீங்கரித்தவாறு வட்டமிடும் தேனீக்கள், எங்கு பார்த்தா லும் மரங்களிலிருந்து உதிர்ந்த பல நிற மலர்கள் தரையில் பரவி வண்ணப் பட்டுக் கம்பளம் விரித்தது போல் தோன்றும் காட்சி,மனத்தைக் கிறங்க வைக்கும் பூக்களின் நறுமணம், தன் இணைபிரியாத் தோழன், தென்றல் காற்று, மிரு துவாய் உடலைத்
தழுவிச் செல்வது என இத்தகைய முன்னறிவிப்புகளுடன் தலை நுழைப்பவன்தான் வசந்தன் மன்மதன் என்று காளிதாசன் குமாரசம்பவத்தில் வர்ணிக்கிறான்.

வடமொழி இலக்கியங்களில் கன்னோஜ் ராஜ்ஜியத்தின் மாமன்னன் ஹர்ஷவர்தன ரின் ரத்னாவளி நாடகம் இப்பண்டிகைக் காட்சிகளைக் கொண்டாதாக இருக்கிறது.. கவிதை இயற்றுவதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். ரத்னாவளி, நாகாநந்தா, ப்ரிய தர்சிகா ஆகிய நாடகங்களை இயற்றியவர். நான்கு அங்கங்கள் கொண்ட இந்தக் காதல் நாடகம் “ரத்னாவளி” (ரத்தின நெக்லெஸ்-சிங்கள தேச இளவரசி) க்கும், கௌசாம்பியின் அரசன் வத்ஸராஜன் என்ற உதயணனுக்கும் இடையே அரும்பும் காதலைப் பின்னணியாகக் கொண்டது. ராணி வாஸவதத்தை செய்யும் இடையூ றுகள், விதூஷகனின் நகைச்சுவை, மேதாவினி எனும் பேசும் கிளியின் லூட்டி
என அனைத்தும் நம்மை முறுவலிக்க வைக்கின்றன. கடலிலிருந்து மீட்கப் பட்டவளாதலால் அவள் ‘சாகரிகா’ என்ற பெயரில் ராணி வாஸவதத்தையின்
பணிப்பெண்ணாக இருக்கிறாள்

இந்த நாடகத்தின் முதல் காட்சியே காமன் விழாவிலிருந்துத் தொடங்குகிறது. வசந் தோற்சவப் பண்டிகைக் கொண்டாட்டக் காட்சியை, அரசன் உதயணனுக்கு விதூஷ கன் வசந்தகன் சுவாரசியமாக விவரிக்கிறான்.

“அரசே, அதோ அந்தப் பணிப்பெண் மதுவைச் சுவைத்து விட்டுப் பண்ணும் ரகளை யைப் பாருங்கள்! கொண்டையில் சூடிய மலர்ப்பந்தின் பளுவைத் தாங்க முடியாமல் முடிக் கற்றைகள் அவிழ்ந்துப் பறக்க, நடனமாடும் கால்களின் அதிர்வால் இரண்டு கொலுசுகளும் சுணங்க, நடன அசைவுகளால் வேறு வழியின்றிக் கழுத்திலிருக்கும் ஹாரம் இருமலைக் குன்றுகளுக்கிடையே ஊஞ்சலாடுவதும், உருண்டுத் திரண்டப் பருத்த ஸ்தனங்களால் இடுப்பே முறிந்துவிட்டது போல் குனிந்தவாறே அழகைக் காட்டும் அந்தப் பைங்கிளியுடன் சேர்ந்து காமன் விழா கொண்டாட ஆசை, மன்னா, போகட்டுமா?” என்று ராஜனின் ஆசைத் தீயை வெகுவாகத் தூண்டுகிறான் விதூஷகன் .(பாடல் 1:16)
இதோ, மன்மதனை நாட்டின் பிரஜைகள் வரவேற்கும் விதத்தைப் பார்க்கலாம்…

धारायन्त्रविमुक्तसन्ततपय: पूरप्लुते सर्वत: |
सद्य: सान्द्रविमर्दकर्दमकृतक्रीडे क्षणं प्राङ्गणे ||
उद्दामप्रमदाकपोलनिपतत्सिन्दूररागारुणै: |
सौन्दूरिक्रियते जनेन चरणन्यासै: पुर: कुट्टिमम् || ( 1:11)

தா⁴ராயந்த்ரவிமுக்தஸந்ததபய: பூரப்லுதே ஸர்வத: |
ஸத்³ய: ஸாந்த்³ரவிமர்த³கர்த³மக்ருʼதக்ரீடே³ க்ஷணம்ʼ ப்ராங்க³ணே ||
உத்³தா³மப்ரமதா³கபோலனிபதத்ஸிந்தூ³ரராகா³ருணை: |
ஸௌந்தூ³ரிக்ரியதே ஜனேன சரணன்யாஸை: புர: குட்டிமம் ||

ஸத்³ய: க்ஷணம்ʼ= இந்தக்கணம் (பார்க்கும்போது), தா⁴ராயந்த்ர விமுக்த வஸந்தத: பய:= நீரை வீசும் கருவியிலிருந்து இடைவிடாமல் வீசப்படும் நீர், க்ருʼதக்ரீடே³= அவர்களின் விளையாட்டில், உத்³தா³ம ப்ரமதா³ = அங்குமிங்கும் (தப்பித்து) ஓடும் பெண்களின், கபோல நிபதத் ஸிந்தூ³ர= கன்னத்தில் இருந்து விழும் சிந்துரம், ராகா³ருணை:= சிவந்த பொடிகள், ஜனேன சரணன்யாஸை: =ஆண்களின் பாதச் சுவடுகள், ஸாந்த்³ர விமர்த³ கர்த³ம= மெல்லிய காலடி பதிப்புகளால் சேர்ந்த சேறு, புர: குட்டிமம் =தரை மற்றும் சுற்றுப்புறம், ப்ராங்க³ணே பூர: ப்லுதே ஸர்வத:= கூடும் அங்கணம் எங்கும் நிரம்பி ஸௌந்தூ³ரிக்ரியதே= அழகூட்டுகிறது.

பொருள்:
பீச்சாங்குழல் மூலம் நீரைப் பீய்ச்சியடிக்கும் ஜனங்களிடமிருந்துத் தப்பித்து ஓடும் பெருமைமிகு பெண்களின் பாதச்சுவடுகள் அவர்கள் கன்னங்களில் இருந்து விழும் சிந்துரத் துகள்கள், நீரில் கலந்த வாசனைப் பொருட்கள் இவையெல்லாம் வாச லெங்கும் பரவி வண்ணமயமான சேறாகி விட்டன!

இதனை அடுத்து ராணி வாஸவதத்தை, நன்றாக அலங்கரிக்கப்பட்ட நந்தவனத் திலுள்ள அசோகமரத்தின் கீழ் அனங்கனின் மறுபிறப்பாகக் கருதப்படும் கிருஷ் ணரின் புத்திரன் பிரத்யும்னனின் உருவச் சிலையை வைத்துப் பூஜிக்கிறாள். பிறகு அதே மாதிரி தனது பதி உதயணனை மரத்தின் கீழ் அமரவைத்து, புஷ்பாஞ்சலி செய்து தூப-தீபாராதனைக் காட்டி வணங்க மாறன் பூஜை நிறைவடைகிறது. ஆனால் நகர வீதிகளில் ஆரவாரத்துடன் விழாக் கொண்டாட்டம் தொடர்கிறது.

மேலே பார்த்தது வடநாட்டில் வாழ்ந்த அரசகவியின் மதனோற்சவத்தை விவரிக்கும் கவிதை. அடுத்து பதினான்காம் நூற்றாண்டில் தென்னாட்டில் வாழ்ந்த வைணவ சமயப் பெரியவரும், நிகமாந்த மஹாதேசிகன், சர்வதந்திர ஸ்வதந்திரர் என்று அழைக்கப்படும் ஶ்ரீ வேதாந்த தேசிகரின் கவிதை மொழியில் இப்பண்டிகையைக் குறித்துப் பார்ப்போம். வேதாந்த தேசிகர். நூற்றுக்கு மேற்பட்ட தத்துவ, கவிதை, நாடக நூல்கள் பலவற்றை ஒரு சமய குருவாக இருந்து இயற்றியுள்ளார். கவிதை இயற்றுவதில் காளிதாசன், பாரவி போன்ற பெறும் கவிஞர்களுக்குச் சற்றும் குறைந் தவர் அல்ல இவர். பரம அத்வைதியான கிருஷ்ண மிஸ்ரர் ஞான மார்க்கத்தினால் பெறுகிற அத்வைத சாந்த நிலையைப் பற்றி எழுதியுள்ளார். அதில் பல தத்துவங் களை உருவக (ALLEGORY)பாணியில் கதாபாத்திரங்களாக உலவ விட்டிருக்கிறார். ஞானத்தைத் தேடுகிற ராஜன் ‘விவேகன்’ மஹாமோஹன் எனும் ‘மாயை’யை வென்று ஞானத்தை அடைவதாக “பிரபோத (ஞானம்) சந்திரோதயம்” நாடகக் கதை போகிறது. தனது வசிஷ்டாத்வைதக் கொள்கைக்கு ”பிரபோத சந்திரோதயம்” ஒத்து வராது எனக் கருதியவர் அதே பாணியில் “சங்கல்ப சூரியோதயம்” என்ற நாடகத்தை, அதே உருவக கதாபாத்திரங்களுடன் இயற்றியுள்ளார். மனிதனின் குணங்களான ‘த்ருஷ்ணை (ஆசை), குஹனை (வஞ்சம்),அசூயை, ‘டம்பன்’ (தற்புகழ்ச்சி) ஆகியவை இதில் அடங்கும்.
பத்து அங்கங்கள் கொண்ட இந்த மிகப்பெரிய நாடகத்தின் காட்சிகள் நடைபெறும் அரங்கம் ஸ்ரீரங்கம். அங்கே மருத்வ்ருதா நதிக்கரையில் காமன் பண்டிகை நடைபெறு வதாக ஒரு வருணனை, இடம்பெறுகிறது.

மருத்வ்ருதா என்பது காவிரிதான். மருத் என்றால் காற்று.(மலைய மாருதம்) காற் றால் வளர்பவள் என்ற அர்த்தத்தில் காவிரிக்கு சம்ஸ்க்ருதத்தில் இந்தப் பெயர். அக்காலத்தில் சிறிது காற்றடித்தாலும் போதும் காவிரியில் வெள்ளம் வந்து விடும் (!!) என்பதால் இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சங்கல்ப சூர்யோதய நாடகத்தின் துவக்கத்தில், ‘ஸ்த்ரீகளின் உடலமைப்பை ஒத்த வில், நாண்,அம்பு ஆகியக் கொடியகணைகளால் உள்ளங்களை வெல்ல வல்ல மன்மதனும் ரதியும்’ காமன் பண்டிகை நடைபெறும் இடத்துக்கு வருகிறார்கள். கூடவே வசந்தன் என்ற வசந்தகாலமும் மன்மதனுக்கு நண்பனாக வருகிறான். “நண்ப! நமது மகாமந்திரி மகாமோஹனுக்கே மங்கலம் உண்டாகுமாறும்,ராஜா விவேகனுக்குப் பீதியை விளைவிக்கும் படியும் மன்மத மகோத்சவமாம் உனது திருவிழாவை இப்போதே நான் தொடங்கப் போகிறேன்” எங்கிறான்.
காமன் பண்டிகை அழகிய சொல்லாட்சியுடன் கூடிய கவிதையாக கண்முன் விரிகிறது.

चूडा वेल्लित चारुहल्लक भरव्यालम्बि लोलम्बका:
क्रीडन्त्यत्र हिरण्मयानि दधत: शृङ्गाणि श्रुङ्गारिण: |
तन्वङ्गी करयन्त्र यन्त्रणकला तन्त्रक्षरद् भस्त्रिका
कस्तूरी परिवहमेदुर मिलज्जम्बाल लम्बालका: ||

சூடா³ வேல்லித சாருஹல்லக ப⁴ரவ்யாலம்பி³ லோலம்ப³கா:
க்ரீட³ந்த்யத்ர ஹிரண்மயானி த³த⁴த: ஶ்ருʼங்கா³ணி ஶ்ருங்கா³ரிண: |
தன்வங்கீ³ கரயந்த்ர யந்த்ரணகலா தந்த்ரக்ஷரத்³ ப⁴ஸ்த்ரிகா
கஸ்தூரீ பரிவஹமேது³ர மிலஜ்ஜம்பா³ல லம்பா³லகா: ||
பொருள்:
வண்டுகள் சூழும், அழகிய செந்நிறப் பூக்கள் அள்ளி முடிந்த கூந்தலைக் கொண்ட பெண்கள் கஸ்தூரி முதலிய வாசனைப் பொருட்கள் கலந்த நீரைத் தோற்பைகளில் அள்ளித் தெளித்து, அங்கே பொன்மையமான கொம்புகளில் நீரைத் தாங்கி வீசும் அழகிய இளைஞர்களுடன் விளையாட அவர்களின் தலை முழுவதும் முடிக்கற்றை கள் சேறாகி துவளுகின்றன…

சூடா³ வேல்லித சாருஹல்லக பர= தலையில் கட்டப்பட்ட நல்ல சிவந்த ரோஜா மலர்கள், கூட்டமாகத் தாங்கிய, வ்யாலம்பி³ லோலம்ப³கா= சுற்றி வரக்கூடிய வண்டுகள், ஶ்ருங்கா³ரிண:= அழகிய இளைஞர்கள், அத்ர க்ரீட³ந்தி= அங்கே விளையாடுகிறார்கள், ஹிரண்மயானி ஶ்ருʼங்கா³ணி =பொன்வண்ணமான கொம்பு களை, த³த⁴த:= தாங்குகிறார்கள், தன்வங்கீ³= அழகிய பெண்கள், கரயந்த்ர= கையி லிருக்கும் யந்த்ரணகலா =சிறு தோற்பையைக் கொண்டு அடிக்கிறார்கள், தந்த்ரக்ஷரத்³ ப⁴ஸ்த்ரிகா= அதிலிருந்து வெளிவரும், கஸ்தூரீ பரிவஹ மேது³ர மில= கஸ்தூரி போன்ற வாசனை திரவியங்கள் கலந்த, ஜம்பா³ல= சேறு போல செறிந்த நீரால், லம்ப அலகா:= கற்றையாய் தொங்கும் குழலை, முடிக்கற்றை உடையவர்கள்.

காவிரிக் கரையில் மதனோற்சவம் நடைபெறுகிறது. அங்கே பெண்கள் கஸ்தூரி, சந்தனம் முதலான வாசனை திரவியங்கள் கலந்த நீரை தோற்பைகளில் அள்ளி, ஆண்கள் மீது வீசுகிறார்கள். ஆண்கள் தங்கள் பங்குக்கு, தங்க மயமான கொம்பு களில் நீரை நிரப்பி பெண்கள் மீது வீசி விளையாடுகிறார்கள், என்று இப்படி காமன் பண்டிகை களை கட்டுகிறது…….

இன்னும் இம்மாதிரியானச் சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்…………

அடுத்து வசந்தவிழாவில் மங்கையருக்கும், மரங்களுக்கும் இடையே நிலவும் அன்புப் பிணைப்பைப் பற்றி பார்ப்போம்…….

    ------------------------------------------------------------------------------------------------------ 

TAGS, காம தகனம்-2, மதனோற்சவம் – 2, B.KANNAN

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: