WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,749
Date uploaded in London – – 16 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காதல் காட்சி
காதலுடன் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்த நிலை!
ச.நாகராஜன்
அகத்துறையில் அருமையான 400 பாடல்களைக் கொண்ட நூல் அகநானூறு.
காதலர்களின் பல்வேறு நிலைகளை பல்வேறு உவமைகளுடன் சுட்டிக் காட்டும் பாடல்கள் இவை.
எயினந்தை மகனார் இளங்கீரனார் என்ற புலவர் பாடிய பாடல் 399வது பாடலாக அமைகிறது.
திணை : பாலை
துறை : தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
காதலன் காதலியை விட்டுப் பிரிந்து நெடுந்தூரம் சென்றுள்ளான்.
காதலி வாடுகிறாள்.
அவள் வாட்டத்தைக் கண்ட அவளது தோழி அவளைத் தேற்றுகிறாள்.
அவள் அழகை வர்ணித்து இப்படிப்பட்ட அழகுடையாளை அவன் பிரிந்து நெடு நாள் இருப்பானா, என்ன, சீக்கிரமே வந்து சேர்வான் என்கிறாள் தோழி.
அவள் தலை உச்சியிலே பூங்கொத்து. அது மயிர்ச் சாந்து பூசப் பெற்றுள்ளது.
இருட்சி உடையது.
சந்தன மரக் காற்றை உள் வாங்கிக் கொண்டு இமயமலைக் காட்டினைப் போல் நறுமணம் கமழ்வது, அவளது கூந்தல்!
நல்ல நெற்றி வேறு அமைந்த அழகி அவள்!
கற்கள் இருக்கும் காட்டினைச் சார்ந்த இடம்.
அதில் குந்தாலியினால் தோண்டிய ஒரு குழி.
நெடிதும் கீழேயுமாக ஊறி வரும் நீர்.
அதை உண்ணும் இனிய தெளிந்த ஒலியினைக் கொண்ட மணிகளை அணிந்திருக்கும் பெரிய ஆநிரைக் கூட்டம்.
அக்கூட்டம் வறட்சியுற்ற பாலை நிலத்தே புகுகிறது.
ஊது கொம்பினால் ஒலி எழுப்பி அவற்றை அந்த இடத்திலிருந்து அகற்றி, தளர்ந்த தன்மையை உடைய கொன்றையின் நிழலில் தங்குபவர் பசுக்கூட்டங்களைக் கொண்டவர்களான ஆயர்கள்.
அவர்கள் அறியாது ஊதும், சிறிய மூங்கிலால் செய்யப் பெற்ற குழல்.
அது தனித்த தெளிவான ஒலியை எழுப்பும்.
அதை அழகிய மான்கள் கேட்கும்.
அத்தைகைய காட்டிலே மலைப் பாறைகளைக் கடந்து சிகரங்களைக் கடந்து அவன் சென்றிருக்கிறான்.
இனிமை ஊறும் மார்பகங்கள் கொண்டவள் தலைவி.
அதைப் பருகுதல் போன்ற காதல் கொண்ட உள்ளத்துடன் அவளைப் பிணைந்து தழுவி இன்பம் நுகர்வதைத் தவிர்த்து தான் சென்ற இடத்தில் அவனால் நெடுநாள் இருக்க முடியுமா, என்ன!
என் தலைவியே ! நீ வருந்தாதே. சீக்கிரமே அவன் வந்து சேர்வான்!
இது தான் திரண்ட பொருள்.
இனி பாடலைப் பார்ப்போம்:
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
இமையக் கானம் நாறும் கூந்தல்,
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு,
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் 5
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, 10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி,
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், 15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
வேய் கண் உடைந்த சிமைய,
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. 18
‘பருகு வன்ன காதல் உள்ளமொடு ஆகம் திருகுபு முயங்கல்’ என்ற சொற்கள் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு பின்னிப் பிணைந்து தழுவிக் கிடக்கும் நிலையைச் சொல்கிறது.
அழகியின் கூந்தல் வனப்பும் அழகுற விளக்கப்படுகிறது.
இமையக் கானம் என்பது இமய மலையைக் குறிக்கிறது.
நல் நுதல் அரிவை என்பது அவளது அழகிய நெற்றியைப் போற்றிப் புகழ்கிறது.
அழகிய பல இயற்கை வர்ணனையைக் கொண்டதோடு அழகியின் வனப்பைச் சுட்டிக் காட்டும் பாடலில் தலைவியைத் தோழி தேற்றுவதைப் புலவர் அழகுறப் பாடியுள்ளார்.
இமயத்தைச் சுட்டிக் காட்டி குமரிச் செல்வியின் அழகைச் சேர்த்து இணைக்கும் பாடல் இது.
இப்படி நானூறு பாடல்களைக் கொண்ட காதல் காவியம் அகநானூறு.
தமிழுக்கே உரித்தான அகம். புறம் ஆகிய இரண்டிலும் மொத்தம் 800 பாடல்கள் உள்ளன.
இன்பமும் சுரக்கும்; வீரமும் பெருகும்.
tags– அகநானூறு, சிமையக் குரல சாந்து,