WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,761
Date uploaded in London – – 20 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
எழுத்து வருத்தனம் – 1
ச.நாகராஜன்
எழுத்துக்களை வைத்து சொற்களில் விளையாடும் ஒரு விளையாட்டு எழுத்து வர்த்தனம்.
பொருள் பயக்கின்ற ஒரு மொழியை எடுத்துக் கொள்ள வேண்டியது.
அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள் படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பது தான் எழுத்து வருத்தனம் என அழைக்கப்படுகிறது.
இதை நன்கு விளக்கி, ‘சித்திர கவி விளக்கம்’ என்ற தனது நூலில் (1939ஆம் ஆண்டு வெளியீடு) வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் (பரிதிமால் கலைஞர்) தரும் உதாரணப் பாடல் இது :
ஏந்திய வெண்படையும் முன்னா ளெடுத்ததுவும்
பூந்துகிலு மாலுந்தி பூத்ததுவும் – வாய்ந்த
வுலைவி லெழுத்தடைவே யோரொன்றாச் சேர்க்கத்
தலைமலைபொன் றாமரையென் றாம்.
பாடலின் கடைசி அடியில் தலை, மலை, பொன், தாமரை என்ற சொற்கள் அமைவதற்குரிய வழி மேலே உள்ள மூன்று அடிகளில் இருப்பதைப் பாடல் கூறுகிறது.
விளக்கத்தைப் பார்ப்போம்:
மால் – திருமால்
ஏந்திய வெண்மை படையும் – கையில் ஏந்திய படைக்கலமாகிய வெள்ளிய சங்கும்
முன் நாள் எடுத்ததுவும் – முன்னொரு காலத்தில் (இந்திரன் பொழிந்த மழையைத் தடுக்க) மேலே உயரத் தூக்கிப் பிடித்ததும்
பூ துகிலும் – அழகிய ஆடையும்
உந்தி பூத்ததுவும் – நாபியில் மலர்வித்ததும்
(ஆகிய இவற்றில்)
வாய்ந்த – பொருந்திய
உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றா சேர்க்க – குற்றமற்ற எழுத்துக்களை முறையே ஒன்றன் மேல் ஒன்றாகச் சேர்க்க
(அது முறையே)
தலை, மலை, பொன், தாமரை என்று ஆம் – தலை, மலை, பொன், தாமரை என்ற எழுத்துக்களாக ஆகும்.
திருமால் ஏந்திய வெண் படை – சங்கு – அது கம்பு
இந்த கம்பு என்பதில் எடுத்துக் கொண்டது ‘கம்’.
இதன் பொருள் தலை.
இதனுடன் ‘ந’ என்னும் எழுத்தை முன்பு சேர்க்க அது ‘நகம்’ என்ற சொல்லாக ஆகும்.
நகம் என்பதன் பொருள் மலை.
இதனுடன் ‘க’ என்ற எழுத்தைச் சேர்க்க அது ‘கநகம்’ என்ற சொல்லாக ஆகும்.
இதன் பொருள் பொன் என்பதாம்.
இந்தக் கநகம் என்ற சொல்லுக்கு முன்பாக ‘கோ’ என்ற எழுத்தைச் சேர்க்க வருவது ‘கோகநகம்’ என்ற வார்த்தை.
இதன் பொருள் தாமரை.
ஆக, கம், நகம், கநகம், கோகநகம்’ என்று எழுத்து வருத்தனமானதைக் காணலாம்.
சித்திர கவி வரிசையில் எழுத்து வருத்தனம் என்பதும் ஒன்றாகும்.
tags- சித்திர கவி