WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,768
Date uploaded in London – – 22 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை!
கரந்துறைப் பாட்டு – 2
ச.நாகராஜன்
கரந்துறைப் பாட்டு என்பது ஒரு செய்யுளுக்குள் இன்னொரு செய்யுளானது கரந்து உறைவது அதாவது மறைந்து இருப்பது என்று சொல்லப்பட்டதைப் பார்த்தோம்.
இன்னொரு வகையான விளக்கத்தை வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் தனது சித்திர கவி விளக்கத்தில் தருகிறார்.
“ஒவ்வோர் எழுத்து இடைவிட்டுப் படிக்கும் போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துக்கள் அமைய, செய்யுள் செய்வது கரந்துறைப் பாட்டு – கரந்துறைவதை உடைய பாட்டு.”
இப்படிக் கூறும் அவர் இதற்கான மாறனலங்காரப் பாடலை எடுத்துக் காட்டுகிறார்.
“முதலொரு செய்யுண் முடித்தத னீற்றின்
பதமத னிறிதியிற் பயிலெழுத் துத்தொடுத்
திடையிடை யிட்டதி ரேறாய் முதலய
லடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங்
குறைவது கரந்துறைச் செய்யு ளாகும்.”
இதன் பொருள் :
ஒரு செய்யுளில் கடைசி அடியில் கடைசி வார்த்தையை விட்டு விட்டு அதற்கு முன்னால் உள்ள வார்த்தையில் ஒரு எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததை விட்டு விட வேண்டும்.
இப்படித் தொடர்ந்து செய்தால் வருவது இன்னொரு பாடலாக இருக்கும்.
எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்.
“தாயே யெனையவி யவாவீ ருதிமன்ன
பின்னை வெருவா வருவதொ ரத்தப
வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
தாவா வருங்கல நீ யே.”
இப்பாடலின் பொருள் :
தாயே – தாய் போன்றவனே!
எனை அவி – என்னை வருத்துகின்ற
அவா ஈருதி – ஆசையை ஒழிப்பாயாக
மன்ன – நாங்கள் நிலை பேறு அடையும் படி
பின்னை வெருவா வருவது ஓர் – பின்பு நீ வரும் ஆற்றிடையுள்ள
ஏதத்திற்கு அஞ்சாது வருவதனை ஆலோசித்துப் பார்
அ பய – அந்த அபாய நிலை கெடுவதற்காக
எம் புகல் வேறு இருத்தி – எமக்குப் பற்றுக்கோடாக உள்ள வேறு ஓர் இடத்தில் எம்மைச் சேர்த்து வைப்பாயாக
இச்சை கவர் – எமது வேண்டுகோளை ஏற்று அங்கீகரித்துப் பூர்த்தி செய்வாயாக
தாவா அருங்கலம் நீயே – எமக்குக் கெடாத கிட்டுதற்கு அரிய ஆபரணம் போன்றவன் நீயே ஆவாய்!
இது பாங்கி தலைவனுக்கு ஆற்றிடை வரும் ஏதம் கூறி வரைவு கடாயது.
இனி இதற்குள் எந்தச் செய்யுள் மறைந்திருக்கிறது என்று பார்ப்போம்.
கடைசி அடியில் கடைசி சொல்லாக அமைவது ‘யே’.
அதற்கு முன் இருக்கும் சொல் – வருங்கல நீ
இதில் கடைசி எழுத்தை விட்டு அதற்கு முன் உள்ள எழுத்து ல.
ஆனால் ல என்ற எழுத்து மொழிக்கு முதலாக வராது என்பதால் அதை விடுத்து அதற்கு முன் உள்ள எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த எழுத்து ‘க.’
க என்பது கரந்து இருக்கின்ற செய்யுளின் முதல் வார்த்தையில் முதல் எழுத்து.
இதிலிருந்து ஒரு எழுத்து விட்டு அடுத்த எழுத்தை எடுத்து இணைத்துக் கொண்டே போனால் வருவது இந்தப் பாடல்:
கருவார் கச்சித்
திருவே கம்பத்
தொருவா வென்ன
மருவா வினையே
“தாயே யெனையவி யவாவீ ருதிமன்ன
பின்னை வெருவா வருவதொ ரத்தப
வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
தாவா வருங்கல நீ யே.”
தடித்த எழுத்தில் சிவப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்களைக் கண்டால் பாடல் அமைந்திருப்பது தெரியும்.
இது தேவாரச் செய்யுள் ஆகும்.
திருக்கச்சிஏகம்பத்தில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் இது.
திரு இருக்குக்குறள் என்று பெருமையோடு அழைக்கப்படும் இது 3ஆம் திருமுறையில் வரும் திருப்பாடல் ஆகும்.
பண் : கொல்லி
tags- கரந்துறைப் பாட்டு – 2