
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,777
Date uploaded in London – – 25 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
22-3-2022 மாலை மலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
உலகை வலம் வருவோம்!
பூலோக சொர்க்கம் ஸ்விட்ஸர்லாந்து!
ச.நாகராஜன்
மகிழ்ச்சியின் தாயகம்!
இன்று உலகில் உள்ள யாரை வேண்டுமானாலும் பார்த்து, ‘நீங்கள் உல்லாசமாகச் செல்ல விரும்பும் ஒரு நாட்டைச் சொல்லுங்கள் என்றால்’ அவர்களிடமிருந்து வரும் ஒரே பதில் : ஸ்விட்ஸர்லாந்து என்பது தான்!
மத்திய ஐரோப்பாவில் உள்ள மிக அற்புதமான அந்த நாடு தான் சமாதானத்தின் நிரந்தர உறைவிடம்! மகிழ்ச்சியின் தாயகம்!!
நிம்மதியாக ஓய்வெடுக்கச் சென்று உற்சாகத்தின் ஊற்றாகத் திரும்பி வர வேண்டுமா? அது ஸ்விஸ் சென்றால் மட்டுமே முடியும்!
சாகஸ செயல் செய்ய,, வயதான காலத்தில் நிம்மதியுடன் நேரத்தைக் கழிக்க, ஒரு பண்பாட்டு மையத்தைப் பார்க்க, லஞ்சமில்லாமல் நேர்மையாக பிஸினஸ் செய்ய, புதிய தொழில் துவங்க, மிக சிறந்த தரம் வாய்ந்த வாழ்க்கையைப் பெற, பணத்தைப் பத்திரமாக பாதுகாப்புடன் நம்பகமாக வைக்க எது உகந்த இடம்?
இப்படி எந்தக் கேள்விக்கும் ஒரே பதில் ஸ்விட்ஸர்லாந்து தான்.
ஆல்ப்ஸ் மலை உருவான விதம்!
இயற்கை எழில் கொஞ்சும் ஆல்ப்ஸ் மலையைப் பார்ப்பதே ஒரு சுகமான அனுபவம்.
7000 ஏரிகள் ஸ்விஸ்ஸில் உள்ளன என்பது நம்ப முடியாத ஒரு உண்மை. 580 சதுர கிலோமீட்டர் கொண்ட ஜெனிவா ஏரிதான் அங்குள்ள மிகப் பெரிய ஏரி. அதன் ஒரு பகுதி பிரான்ஸிலும் உள்ளது. அங்குள்ள ஆறுகள், ஏரிகள் ஆகியவற்றின் நீரை அப்படியே பருகலாம்.
பளிங்கு போன்ற நீரை உடைய அவற்றின் ஆழமான அடிப்பகுதியை அப்படியே பார்க்கலாம். அப்படிப் பார்க்க முடியாத ஏரி தான் சற்று அழுக்கு கொண்ட ஏரி என்று சொல்லப்படும். உலகில் உள்ள மக்கள் நீந்துவதற்கு உகந்த முதல் தரமான நீர் வளத்தைக் கொண்டவை இவையே.
உள்ளத்தைக் கொள்ளும் ஆல்ப்ஸ் மலையின் அழகைச் சொல்லவே வார்த்தைகள் கிடைக்காது. அப்படி ஒரு அழகு.
சண்டை போடாத ஒரு பெரும் நாடு அது தான். 500 வருடங்களுக்கும் மேலாக அந்த நாட்டவருக்கு போர் என்றால் என்ன என்றே தெரியாது.
அங்கு ராணுவத்தில் கத்தியைக் கையில் வைத்திருப்பவர்கள் சோடா பாட்டிலைத் திறக்கத்தான் வைத்திருப்பார்கள் என்பது உண்மை கலந்த ஜோக்!
மேற்கு ஐரோப்பாவிலேயே மிக உயரமான மலைச் சிகரமான ‘வெள்ளை மலை’ – மாண்ட் ப்ளாங்க் என்பது 15771 அடி உயரமுடையது. எந்த சக்தி மாண்ட் ப்ளாங்கை உருவாக்கியதோ அதுவே தான் ஆல்ப்ஸ் மலையையும் உருவாக்கியது எனலாம்!
400 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ‘டெக்டோனிக் ப்ளேட்ஸ்’ எனப்படும் இரு தளங்கள் பூமியின் மேலிருந்து ஒன்றை ஒன்று நோக்கிச் சரிந்தது. ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய ஒரு பகுதி மெதுவாக முன்னேறி ஐரோப்பா மீது மோதியது.
இரண்டு பெரும் ராட்ஸச பகுதிகள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டால் என்ன நடக்கும்?
இரண்டிற்கும் இடையே இருந்த மலைப்பாறைகள் மடிந்து செங்குத்தாக உயர்ந்தது. இந்தப் பாறைகள் பழைய கால கடலின் அடித்தளத்தில் அமைந்தன. கருங்கல் பாறைகள் மற்றும் இதர பாறைகள் இணைந்து ஆல்ப்ஸ் மலைத் தொடரை உருவாக்கியது.
இயற்கை சக்திகளின் மூலமாக உருவாகும் இயற்கைச் சரிவுகளை இந்தப் பாறைகள் தடுத்ததோடு, பெரிய மலைச் சிகரங்களான ‘மாண்ட் ப்ளாங்க்’ மற்றும் ‘மெதர்ஹார்ன்’ உருவாக காரணமாகின.
ஆல்ப்ஸ் மலையை ஒட்டி அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மென்மையான சுண்ணாம்பு மற்றும் மணல் பாறைகள் உள்ளன.
ஐஸ் யுகத்தில் இவை உருகி 10000 ஆண்டுகளுக்கு முன்னர் ‘U’ வடிவில் மலைப் பள்ளத்தாக்குகளையும் சமவெளிகளையும் உருவாக்கின. உலகின் அற்புதமான இயற்கைக் காட்சிகள் இதனால் தான் நமக்கு இன்று கிடைத்துள்ளன.
ஆல்ப்ஸ் மலை உருவான வரலாறு இது தான்!
உல்லாசப் பயணிகள் உற்சாகமாக நாடும் ஸ்விஸ்!
இங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் மரத்தால் ஆன வீடுகளிலேயே வசித்து வந்தனர். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியில் ஏராளமானோர் குடியேற ஆரம்பித்தனர். இவர்களுக்கு வழிகாட்டிகளாக மாறிய ஆதிவாசிகள் தாங்கள் குடியிருந்து வரும் தங்கள் சொந்த பிரதேசத்தின் அற்புதமான வளத்தை அறிய ஆரம்பித்தனர்.
ஸ்கையிங் உலகின் மிகப் பெரும் விளையாட்டு! மலை ஏறுதல் என்பது இன்னும் ஒரு பெரிய சாகஸ விளையாட்டு. இவை ஸ்விட்ஸர்லாந்தின் ஆகப் பெரும் அருமையான உல்லாச விளையாட்டுகளாகவும் சாகஸம் புரிய வாய்ப்பு தருவதாகவும் அமைந்துள்ளன.
இங்கு வருவோர் ஸ்கையிங் செய்யாமல் திரும்ப முடியாது; மலை ஏறும் சாகஸத்தை அனுபவிக்காமல் உளமார்ந்த ஒரு நினைவலையைக் கொண்டு செல்ல முடியாது.
வருடா வருடம் 23 லட்சம் உல்லாசப் பயணிகள் இங்கு வருகின்றனர். இப்போது இங்கு குறைந்த பட்சம் 40000 ஸ்கையிங் மையங்கள் உள்ளன. தட்ப வெப்ப நிலையைப் பொறுத்து ஸ்கையிங் சீஸன் ஆரம்பிக்கும். பொதுவாக நவம்பரில் ஆரம்பித்து ஏப்ரல் முடிய ஸ்கையிங்கை மேற்கொண்டு மலைத் தொடர்களில் சறுக்கலாம்.
ஸ்கையிங்கில் நிபுணரானவர்கள் ஸ்நோபோர்டிங் எனப்படும் காலில் இணைக்கப்படும் போர்டைக் கட்டிக் கொண்டு சறுக்கத் தொடங்குவர். இது எவ்வளவு தூரம் விரும்பப்படுகிறது என்றால், 1998 முதல் இது அங்கீகரிக்கப்பட விண்டர் ஒலிம்பிக் கேம் ஆகி விட்டது என்பதைச் சுட்டிக் காட்டலாம்.
அற்புதமான 208 மலைத் தொடர்கள் இங்கு உள்ளன. ஐரோப்பாவில் உயரமான மலைச் சிகரங்கள் இங்கு தான் உள்ளன. அவற்றில் 40 மட்டும் சுமார் 4000 மீட்டர் (13120 அடி) உயரம் உள்ளவை.
சாக்லட் நாடு
ஸ்விஸ் நாடு சாக்லட்டிற்குப் பெயர் பெற்றது. செல்வம் கொழிக்கும் நாடு என்று உலகப் புகழ் பெற்றது.
நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் தாயகம் இது தான்.
இதைப் பற்றிய ஜோக் ஒன்று உண்டு. அந்த நாட்டு மக்களை நோக்கி, ‘நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள்’ என்றால் அவர்கள் பதிலே சொல்லமாட்டார்களாம். ஏன்?
அவர்கள் வாய் நிறைய சாக்லட் இருக்கும்; கையிலோ பணக்கட்டுகள் இருக்க அதை எண்ணுவதிலேயே கவனத்துடன் இருப்பார்களாம்? அப்புறம் எப்படிப் பேச முடியும்?
உலகின் முதல் தரம் கொண்ட சாக்லட் எங்கே உற்பத்தி ஆகின்றன?
ஸ்விஸ்ஸில் தான்! புள்ளிவிவரம் ஒன்றின்படி அங்கு 180,000 டன் சாக்லட் உற்பத்தி ஆகியிருக்கிறது. அங்கு ஒவ்வொருவரும் சராசரியாக சாப்பிடும் சாக்லட்டின் அளவு 11 கிலோ!
நோபல் பரிசு பெரும் விஞ்ஞானிகளின் நாடு!
அப்படியானால் தொழில் நுட்ப அறிவு, அறிவியல் முன்னேற்றம் அங்கு இல்லையா என்ற கேள்விகள் எழ சான்ஸே இல்லை!
உலகில் நோபல் பரிசு பெற்றோர்களை அதிகப்படியாக உருவாக்கியவை ஸ்விஸ் பல்கலைக் கழகங்களே. இப்படி நோபல் பரிசு பெற்றவர்கள் அறிவியல் துறையில் பிரகாசித்த விஞ்ஞானிகளே.
செர்ன் என்ற உலகப் புகழ் பெற்ற டன்னல் – சுரங்கமானது – (CERN Tunnel) காலம் பற்றிய ஆராய்ச்சியின் தாயகம். கடவுள் பார்டிகிள் எனப்படும் கடவுள் துகள் பற்றிய நம்பமுடியாத விந்தை மிகு செய்திகள் இந்த ஆய்வு மையத்திலிருந்து தான் எழுகின்றன.
நமக்குப் பெருமை தரும் ஒரு செய்தி : பிரபஞ்ச நடனத்தைச் சொல்லும் நமது சிதம்பர நடராஜர் மீது விஞ்ஞானிகளுக்கு ஒரு அலாதி பிரியம் உண்டு. செர்னின் முகப்பு வாயிலில் நமது நடராஜர் இருக்கிறார் என்பது நம்மை பெருமிதத்தில் ஆழ்த்தும் ஒன்றாகும்.
வாழ்க்கைச் செலவு அதிகம்!
கள்ளப் பணமோ சொந்தப் பணமோ, எதானாலும் சரி, இங்குள்ள வங்கிகள் தாராளமாக அவற்றைப் பெற்று டிபாசிட் செய்து கொள்ளும்;யாரும் அறிய முடியாத ரகசியத்தை நம்பகமாகப் பாதுகாக்கும். ‘
நீ என்ன ஸ்விஸ் பாங்கிலா பணம் போட்டு வைத்திருக்கிறாய்?’ என்று உலக மக்கள் கிண்டல் பேசிக் கொள்ளும் அளவு நம்பகத் தன்மை கொண்டவை ஸ்விஸ் வங்கிகள்.
இங்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்தது என்பதால் செலவும் சற்று அதிகம் தான்! பிரேஜிலில் ஒரு கப் காப்பி இந்திய மதிப்பில் 120 ரூபாய் என்றால் இங்கு ஒரு கப் காப்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டியது சுமார் 500 ரூபாய் தான்!
உலகில் மாமிச உணவின் விலை இங்கு தான் அதிகம். அனைவருக்கும் இங்கு வேலை வாய்ப்பு உண்டு. வேலை பற்றிய பாதுகாப்பும் உண்டு.
ஜப்பானுக்கு அடுத்தபடியாக மக்கள் நீண்ட நாள் வாழும் இடம் ஸ்விஸ் தான்!
சுத்தமான நாடு!
உலகில் வாட்சைக் கையில் கட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஸ்விஸ்ஸை நினைக்காமல் இருக்க முடியாது. காலத்தைக் கையில் கட்டிக் கொள்ள வைக்கும் ஸ்விஸ் தொழிற்சாலைகள் 1541ஆம் ஆண்டிலிருந்தே இதில் நிபுணத்வம் பெற்றவையாக ஆகி விட்டன.
‘ஒய்ங், ஒய்ங்’ என்று உலகெங்கும் சாலைகளில் சத்தம் போட்டு அனைவரையும் வழி விடச் சொல்லி போகும் ஆம்புலன்ஸ்களும் அவற்றால் உயிர் பிழைக்கும் நோயாளிகளும் தமது முதல் நன்றியைச் சொல்வது ஸ்விஸ் நாட்டிற்கே தான்.
ரெட் கிராஸ் என்ற அடையாளத்தைச் சிறு குழந்தைகள் கூட உலகெங்கும் அறியும் அது பிறந்த இடமே ஸ்விஸ் தான். அந்த நாட்டின் கொடியும் அந்த அடையாளத்தைக் கொண்டதே என்பது ஒரு நெஞ்சம் நிறை செய்தியாகும். 1863இல் ஜெனிவாவில் அமைக்கப்பட்ட ரெட் கிராஸ் அமைப்பு இன்று 970 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது.
வணிக சம்பந்தமாக உருவாகும் சர்வதேச அளவிலான சச்சரவுகள் தீர்க்கப்படும் கோர்ட் ஜெனிவாவில் தான் அமைந்துள்ளது.
சுற்றுப்புறச் சூழலைக் காப்பதிலும் ஸ்விஸ் பெரும் ஆர்வம் கொண்டுள்ள நாடு.
ஜோக் ஒன்று உண்டு. ஸ்விஸ் நாட்டுப் பெண்மணிகள் எப்போதும் துடைப்பமும் கையுமாகத் தான் இருப்பார்களாம். அதனால் தான் அந்த நாடு அவ்வளவு சுத்தமாக இருக்கிறதாம். சரி, குப்பையை எங்கு கொட்டுவார்களாம்? இத்தாலியில் கொட்டுவார்களாம்!
மிகச் சிறிய நாடான ஸ்விஸ் 41285 சதுர கிலோமீட்டரைக் கொண்டுள்ளது. 26 பகுதிகள் கொண்ட ஸ்விஸ்ஸின் ஜனத்தொகையோ 86.4 லட்சம் தான். அதைச் சுற்றி தெற்கில் இத்தாலியும், மேற்கில் பிரான்ஸும், வடக்கில் ஜெர்மனியும், கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லிச்டென்ஸ்டைனும் உள்ளன.
பெர்ன் இதன் தலைநகரம். ஆல்ப்ஸ் மலைக்கு அருகில் உள்ளது இது.
நகர்ப்புற வாழ்க்கை விரும்புவோரும் ஷாப்பிங் செய்ய விரும்புவோரும் ஜூரிச் ஏரியைப் பார்க்க விரும்புவோரும் செல்ல உகந்த இடம்-ஜூரிச்! பெர்னை விட இங்கு செலவு கொஞ்சம் அதிகமாகும்.
மலையை எளிதில் கடக்க ஒரு மலைச் சுரங்கம்!
கி.மு.218இல் கார்த்தேஜ் தளபதியான ஹனிபால் தனது யானைப் படை, 41000 வீரர்களுடன் சென்று ஆல்ப்ஸ் மலைத் தொடரைக் கடக்க 15 நாட்கள் எடுத்துக் கொண்டார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அந்த மலையைக் கடக்க 18 மணி நேரமே போதுமானதாக இருந்தது.
மாண்ட்ப்ளாங்க் மலையில் 1946இல் ஒரு சுரங்கப்பாதை அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பாதை ஏற்படுத்தப்பட்டால் அதை உபயோகித்து இத்தாலி அரசும் பிரான்ஸ் அரசும் ஒன்றை மற்றொன்று தாக்குமோ என்று சந்தேகப்பட்டன. ஆகவே இது நிறுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் 11.61 கிலோமீட்டர் நீளமுள்ள இது 1959இல் முடிவுற்றது. இப்போது இந்தப் பாதை வழியே மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சென்று சில நிமிடங்களில் இந்த மலையை எளிதில் கடந்து விடலாம்.
ஸ்விஸ் நாட்டைப் பற்றி ஒரே வரியில் ஏராளமானோர் சொல்வது இது தான் : உலகின் பூலோக சொர்க்கம் தான் ஸ்விட்சர்லாந்து!
***
உண்மை தான், என்ன பெட்டி படுக்கையுடன் கிளம்பத் தயார் ஆகி விட்டீர்களா?.
***
கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு:
5000 கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர். 94 டிஜிடல் வடிவிலான மின்னணு புத்தகங்களையும் 18 அச்சுப் பதிப்பு புத்தகங்களையும் பல்வேறு பொருள் பற்றி எழுதி வெளியிட்டவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கு பெறுபவர்.
தொடர்பு எண் : 9148046774
snagarajans@yahoo.com
tags- – பூலோக சொர்க்கம், ஸ்விட்ஸர்லாந்து,