IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,783
Date uploaded in London – – 27 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 23-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய இரண்டாவது உரை
2
காலத்திற்கு உகந்த கழிவுப் பொருள் மேலாண்மை
ச.நாகராஜன்
கழிவுப் பொருள் என்பதை முகம் சுளித்துப் பார்த்து அருவறுப்படைந்த காலம் போய் கழிவுப் பொருளை எப்படி சமாளித்து அதையும் கூட பயனுள்ளதாக எப்படி ஆக்குவது என்பதை ஆராயும் காலமாக இன்றைய காலம் அமைந்து விட்டது.
இதற்கென கழிவுப்பொருள் மேலாண்மை பல வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது.
என்றாலும் கூட, இந்தியாவில் கழிவுப் பொருளை எதிர்கொண்டு சமாளிப்பது ஒரு சிக்கலான விஷயமாகவே அமைந்துள்ளது.
ஈ வேஸ்ட் (E Waste) எனப்படும் மின்னணுக் கழிவுகளைத் தனியே பிரித்து எடுத்து மறுசுழற்சிக்கு உள்ளாக்குவது அதிகரித்துக் கொண்டே போனாலும் கழிவுப் பொருள்கள் அதிகரிப்பதும் கூடிக் கொண்டே போகிறது. 2019-2020 ஆண்டில் மட்டும் 1015 டன்கள் என்ற அளவை இது எட்டியுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு 34.7 லட்சம் டன்னாக இது உள்ளது. மறு சுழற்சிக்கு உள்ளாவதோ 15.8 லட்சம் டன்கள் மட்டுமே.
சாக்கடை நீரைத் தூய்மைப்படுத்துவது என்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சாத்தியமாக உள்ளது. ஒரு நாளைக்கு ஏழு லட்சத்து இருபதினாயிரம் லிட்டர் என்ற அளவில் அசுத்த நீர் ஏற்பட்டு வருகிறது.
மத்திய அரசு பிளாஸ்டிக் கழிவை எதிர்கொள்ள தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதோடு புதிய வழிகாட்டு நெறிகளை அறிவித்துள்ளது.
இந்த கழிவுப் பொருள்களை அப்படியே விட்டு விடாமல் மறு சுழற்சி செய்தல் காலத்தின் கட்டாயமாக ஆகி விட்டது.
ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டுவதை மக்களே தடுத்து வருகின்றனர்.
பெரு நகரங்களில் 20 மாடிகள், 30 மாடிகள் என்று கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடிக் கட்டிடங்கள் தமக்குத் தாமே ஒரு தனி அமைப்பை உருவாக்கி கழிவுப் பொருள்களைத் தனித் தனியே இனம் பிரித்து மறு சுழற்சிக்கு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன.
தொழிற்சாலைகளில் ஏற்படும் கழிவுகளை அபாயத்தை ஏற்படுத்தாத அளவில் அங்கேயே சுத்தப்படுத்தும் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வரவேற்க வேண்டிய ஒரு அம்சமாகும்.
விவசாயிகள் ஆங்காங்கே ஒருங்கிணைந்து அமைப்புகளை உருவாக்கி நீர் ஓடும் நீரோடைகள், குளங்கள் ஆகியவற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருவதும் ஒரு நல்ல அம்சமாக அமைந்து வருகிறது.
இது போல கழிவுப் பொருள்கள் உருவாகும் வீடு, நிறுவனம், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் ஆரம்பத்திலேயே உரிய கவனம் செலுத்தினால் உலகம் கழிவுப் பொருள்களால் சிதையாமல் வளம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் அல்லவா!
***
அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 24-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய மூன்றாவது உரை
3
விருக்ஷ தேவி துளஸி கௌடாவிற்கு பத்ம ஸ்ரீ பட்டம்!
ச.நாகராஜன்
நாளுக்கு நாள் இயற்கைச் செல்வமான மரங்கள், வெட்டப்பட்டும், அழிக்கப்பட்டும் வரும் உலகத்தில், மற்றவர் செயல்பட வேண்டிய விதத்திற்கு எடுத்துக்காட்டாக சிலர் அமைகின்றனர்.
அவர்களை உரிய விதத்தில் அரசும் பாராட்டவே மக்களும் உத்வெகம் அடைகின்றனர்.
இந்த வகையில் அனைவரும் மகிழும் ஒருவராக அமைபவர் துளஸி கௌடா.
2021 ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த துளஸி கௌடாவும் ஒருவர்.
அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பற்றிய செய்திகள் சுவையானவை; ஆச்சரியகரமானவை.
உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஹளகி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஹொன்னளி என்ற கிராமத்தில் வாழ்பவர்.
இவருக்கு இப்போது வயது 72.
அவர் நமது ஜனாதிபதி அவர்களிடமிருந்து பத்ம ஸ்ரீ விருதைப் 8-11-2021 அன்று பெற்ற போது கர்நாடகா மட்டும் மகிழவில்லை; இந்தியாவே மகிழ்ந்தது.
30000 மரங்களை அவர் இதுவரை நட்டிருக்கிறார்!
மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகளில் இவரது ஞானம் அபாரமானது.
காடு பற்றிய என்சைக்ளோபீடியா இவர்.
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது கணவனை 17ஆம் வயதிலேயே இழந்து விதவையானார்.
பின்னர் தன்னார்வலராக வனத் துறையில் சேர்ந்தார். சில காலம் கழித்த பின்னர் இவரது வேலை வனத்துறையால் உறுதிப் படுத்தப்பட்டது.
அறுபது ஆண்டுகளாக 30000 மரங்களை இவர் நட்டிருக்கிறார்.
நீரின் தரம் அதிகரிக்க வேண்டுமா, நீர் வளம் சிறந்து இருக்க வேண்டுமா அப்போது மரங்கள் அதிகமதிகம் தேவை என்பதே இவரது தாரக மந்திரம்.
அதே போல மண் வளம் சிறக்கவும் காடுகளே காரணம் என்கிறார் இவர்.
சுற்றுப்புறச் சூழல் சிறக்கவும், காற்றின் நச்சுத் தன்மை நீங்கி அது சுத்தமாக இருக்கவும் காடுகள் இன்றியமையாதது என்று கூறும் இவர் மரங்களின் பால் அலாதி அன்பு கொண்டவர்.
தினமும் நூற்றுக் கணக்கான மரங்களை அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வெட்டித் தள்ளுகிறோம். அதே அளவோ அதற்கு அதிகமாகவோ மரங்களை நட்டு வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமை அல்லவா என்று கேட்கிறார் இவர்.
மரங்களின் பால் இவர் கொண்டுள்ள அன்பைப் பார்த்த மக்கள் இவருக்கு ‘விருக்ஷ தேவி’ என்ற செல்லப் பெயரைச் சூட்டி அழைக்கின்றனர்.
நமது நாடு அதிகம் துளஸிகளை வேண்டி இருக்கும் தருணத்தில் முன்னோடியாக இருந்து அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பாராட்டிப் போற்றுவது அனைவரின் கடமையாகும்!
***