மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்! – Part 2 (Post No.10,784)

PICTURES OF TREE WORSHIP

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY B. KANNAN, Delhi

Post No. 10,784

Date uploaded in London – –     27 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வஸந்த விழா  – மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்! 2

                            Written By B.Kannan, Delhi

உலகளாவியத் தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இப் பதிவில் கவிஞர்களும், புலவர்களும், பெண்கள், மரங்கள், பூங்கொடிகளுக்கு இடையே நிலவும் நட்புறவைப் பற்றி எவ்விதமெல்லாம் தாங்கள் இயற்றியக் காவியங்களில் சிருங்கார ரஸம் தோய்ந்திருக்க வர்ணித்திருக்கின்றனர் என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.

அன்பர்கள் நாடகத்தின் பின்னணியைத் தெரிந்துக் கொள்ள ஏதுவாக இங்குச் சொல் லப்படும் காவியங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும் கொடுத்திருக்கிறேன்

வஸந்த விழா ஆரம்பித்து விட்டாலே மானுடர்கள் மட்டுமின்றி மரம், செடிகொடி களுக்கும் ஒருவிதக் கிளுகிளுப்பு உண்டாகிவிடுகிறதாம். ஆடவர்களின் ஆசாபாசங் களை விருப்பமுடன் களையும் மங்கையர் தங்களின்”தோஹத” எதிர்பார்ப்புகளையும் மனமுவந்து நிறைவேற்றி வைக்க மாட்டார்களா என்று அவைகள் ஏங்கிக் கொண்டி ருக்குமாம். இந்நிலையை விவரிப்பதில் கைதேர்ந்தவர்கள் சம்ஸ்க்ருத / பிராக்ருத மொழி கவிகள். அவர்களுக்கு உதவ இருக்கவே இருக்கிறான் வசந்த ருதுவின் நாயகன் வசந்தனும், உற்ற நண்பன் மலைய மாருதமும்!

மகாகவி சுபந்து ( சுபந்து, பாணர், தண்டின் மூவருமே உரைநடைக் காவிய விற்பன் னர்கள்) 4/5-ம் நூற்றாண்டில் குமார குப்தன்,மற்றும் ஸ்கந்த குப்தன் அரசவையை அலங்கரித்த கவிஞர்களுள் மிகச்சிறந்தவராகக் கருதப்படுகிறார். உரைநடை காவியப் படைப்பில் ‘நடந்த சம்பவங்களை உள்ளபடி எடுத்துச்சொல்லும்’ (ஆக்யாயிகா) பாணி யில் இயற்றப்பட்டது தான் இவரது வாஸவதத்தைக் காவியம். பாணரின் ஹர்ஷ சரிதம், தண்டின் தசகுமார சரிதம் இவ்வகையைச் சேர்ந்தவையாகும். காதம்பரி உரைநடை கற்பனை கலந்த ‘கதை’ப் பின்னணியைக் கொண்ட காவியம். நாயகியின் பெயரைத் தவிர, இதற்கும் உதயணன்-வாஸவதத்தை கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இளவரசன் கந்தர்பகேது, தான் கனவில் கண்ட அழகி, குசுமபுரா நாட்டின் இளவரசி வாஸவதத்தையைப் பல இன்னல்களுக்கிடையே தேடிக் கண்டுபிடித்து மணப்பதுதான் சிருங்கார ரசமிகுந்தக் கதைக் கரு. இதில், பேசும் பறவைகள், பறக் கும் புரவிகள், முனிவரின் சாபத்தால் கல்லாகச் சமைந்த இளவரசியை நாயகன் தொட்டதும் உயிர்த்தெழுவது போன்ற சாகச நிகழ்வுகளுக்குக் குறைவில்லை!,

வசந்த ருதுவுக்கானச் சம்பவங்களும் ரசிக்கும்படிக் கூறப்பட்டுள்ளன. (பூக்களின் தற்காப்புக் காவலர்கள் போல் மாந்தளிர் மொட்டுகளைச் சுற்றிப் பாதுகாப்பு வளை யம் அமைத்து ரீங்காரமிடும் கருநீல வண்டுகள் மகளிர் கழுத்தில் அணியும் அழகிய நெக்லெஸ் போல் தோன்றுகிறதாம் ; உடலைத் தழுவிச் செல்லும் தென்றல், தேகம் மெலிந்து,ஆழ்ந்த தியானத்திலிருக்கும் யோகிகளையும் முறுவலிக்க வைத்து விடும்!) தோஹதக் கிரியைச் சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பது பாரதத்தில் மிகவும் பிரபல மானது, சில குறிப்பிட்ட மரம், செடிகொடிகளை, முக்கியமாக, சாமுத்ரிகா லக்ஷணம் பொருந்திய நால்வகையானப் பெண்கள் ஸ்பரிசித்து, நுகர்ந்து, ஆலிங்கனம் செய்து முத்தமாரிப் பொழிந்து, உரியபடி வழிபட்டால் அவற்றின் எதிர்மறைச் சக்திகள் அழிந்து, பூப்பூத்து மணம் பரப்பும் என்பதை விவரிக்கிறார். அது மட்டுமா?

வாசனைத் திரவியங்கள் தடவிக் கூந்தலை நன்றாகச் சீவிசிங்காரித்தும், சரிந்த முன்நெற்றியில் விழும் முடிக்கற்றைகள் முகப் பொலிவை மேலும் அதிகரிக்க, தலைவனுடன் சல்லாபமிட ஆவலுடன் காத்திருக்கும் ‘லாதா’ (தெற்கு குஜராத்) பெண்கள், குங்குமப் பூக்கரசலைத் தங்கள் கலசம் போன்ற ஸ்தனங்களில் பூசிக் கொண்டு மணம் வீசும் கர்நாடக மங்கையர், முடி அலங்காரத்தில் தேர்ச்சிபெற்றவர் களும், மலர்ச்செண்டு அணிந்துள்ளக் கேசத்தைச் சுற்றி ரீங்காரமிடும் வண்டுகளை விரட்ட எத்தனிக்கும் அழகியக் ‘குந்தலா’ (இன்றையத் தெலுங்கானா பிரதேசம்) மங்கலமங்கையரும்,முகம் முழுவதும் சந்தனக் கரைசலைப் பூசி வசீகரிக்கும் கேரளப் பெண்மணிகளும், 64 கலைகளில் கைதேர்ந்தவர்களும், உருண்டுத் திரண்டப் பெரிதா னப் பிருஷ்டபாகத்தை உடைய ‘மாலவா’ (ம.பி.) இளம் கன்னிகளும், பருத்த மார்ப கங்கள் வேகமாய் நடப்பதற்கு இடையூறாக இருந்து வியர்வைத் துளிர்க்க வைக்க நாயகனின் வரவை ஆவலுடன் எதிநோக்கிக் காத்திருக்கும் ஆந்திர மகளி ரும்…..என இப்படிப்பட்டவர்கள் சூழ்ந்திருக்க, அவர்களைத் தீண்டியவாறு எங்களிடம் (மரங்கள்) வரும் மலைய மாருதமே! உன் இச்செய்கையால் எங்களது ‘மசக்கை’ தொந்தரவு அதிகரிக்கத் தான் செய்கிறது. அவர்கள் பார்வை எங்கள் மீது விழுமா? எங்கள் ஆசையைத் தீர்த்து வைத்தால் தானே மலர்ந்து பலனளிப்போம்…எனப் போகிறது வர்ணனை! படித்து இன்புற வேண்டியக் காவியம்!

அடுத்து, காஷ்மீரத்தைச் சேர்ந்தவரும்,5-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்தவம்ச ஆட்சியின் அந்திமக் காலத்தில் வாழ்ந்துள்ளதாகவும் அறியப் படுகிறவர் மற்றொரு மகாகவி சியமிலகா எனும் சியாமிளன்.

கவிஞர்கள் வரருசி, ஈஸ்வரதத்தா, சூத்ரகர் ஆகியோருடன் சேர்ந்து சதுர்பாணி (பாணம் என்கிற ஒரே கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ஓரங்க நாடகம்) இலக்கியக் கர்த்தாவாகத் திகழ்ந்தவர் .நால்வரில் இவர் மட்டுமே ‘மகாகவி’ பட்டம் பெற்றவர். பாணம் என்பது ஒருவரே பல குரலைத் தானே எழுப்பி, வினா-விடை இரண்டையும் சொல்லியவாறுப் பேசிக் கொண்டேப் போவது. அன்றாட வாழ்வில் காணப்படும் போலிச் சித்திரங்கள் நகச்சுவையுடன் கூறப்படும். இதற்கு “ஆகாசபாஷிதம்” (அசரீரி யாக எழும் எதிர்தரப்பு வாதம்) எனவும் பெயர்.

இவர் இயற்றிய நாடகமே “பாததாடிதகம்” (பாதத்தால் எட்டி உதைத்தல்). உஜ்ஜயி னியை மறைமுகமாகக் குறிக்கும் சார்வபௌமா கற்பனை நகரம் நாடகக் களம். ஊதாரித்தனமாகத் தன் செல்வத்தையெல்லாம் இழந்து, இப்போது அன்றாடங் காய்ச்சியாக வாழ்க்கையை ஓட்டிவரும் ஓர் ‘அதி மேதாவி’ தான் ஓரங்க நாயகன். ஊரிலுள்ளத் தன-கனவான்கள், அவர்களின் இல்லக்கிழத்திகள் ஆகியோருக்கிடையே பாலமாக இருந்து, ஏவல் செய்து பிழைப்பை ஓட்டி வந்தான்.,அது வசந்தகாலம், கேளிக்கைகளுக்குக் கேட்கவா, வேண்டும்? 

அந்நாட்டு மந்திரி தௌண்டிகோகி விஷ்ணுநாகா என்பவன் தாசி ஒருவளுடன் சல் லாபத்தில் இருந்தபோது திடீரென்று ஏற்பட்ட ஊடலால் அவனைக் காலால் எட்டி உதைத்துத் துரத்தி விடுகிறாள். (நாடகத்தின் காரணப்பெயர் இதுவே). இந்த அடாதச் செயலுக்குப் பரிகாரமாக அவள் தன் மது நிறைந்த வாயால் என் சிரசில் உமிழ்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் (இப்படியும் ஒரு காதல் பைத்தியம்!) இதை ஊர் ஜனங் களிடம் கூறி ஆதரவு திரட்டு’ என்று அதிமேதாவியிடம் சொல்கிறான். அவனும் அப் படிச் செய்தவாறு ஒவ்வொருவரிடமும் “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ எனக் கேட்க லானான்.

அவையெல்லாமே ரசிக்கத்தக்கச் சம்பாஷணைகள்! அங்கே இளம்பெண்கள் மரங்களின் தோஹத-மசக்கை-ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அதையும் வர்ணிக்கிறான். “பெண்களின் காலடி பட்டாலே மலருமே அசோக மரம்; நறுமண வாசனைத்திரவியத்தில் முக்கியெடுத்தப் பூக்களால் தெளிக்க உடனே சம்பா மரங்கள் மொட்டு விரித்து பூத்திடுமே; காஷ்மீரத்து கேசர் (குங்குமப் பூ) மரங்கள் கன்னியரின் கடைக்கண் பார்வையில் சிக்கி வேறுவழியின்றி பூத்துக் குலுங்குமே!’

அவர்களிடமும் மந்திரியின் நிலைமையைக் கூற அவர்கள் ,”அந்தோ, பரிதாபம்! அம்மணி மதுவை அவர் சிரசின் மீது உமிழ்ந்தால் தலைமுடி, என்ன, பகுள மரமா உடனே பூத்துக் குலுங்க?” எனக் கேட்காமல் கேட்டு வாய்விட்டு, விலாப் புடைக்க நகைத்தார்களாம்!….என்று போகிறது நாடகம். மந்திரிக்கு ஆதரவு கிடைத்ததா? அந்த ‘அதிமேதாவி’ க்கே அது வெளிச்சம்!

மகாகவி காளிதாசன் தனது முதல் சிருங்கார நாடகமான மாளவிகாக்நிமித்ரத்தில் நாயகி மாளவிகா வாயிலாக இப்படிக் கூறுகிறான்: ‘வெறும் வெற்றுக் கால்களைக் கொண்டு, பட்டமகிஷியின் செல்லமான அசோக மரத்தைத் தொடுவது தகுமோ? அடர்த்தியான சிவப்பு நிற மருதோன்றியால் அழகாக வடிவமைத்து அலங்கரிக் கப்பட்டப் பாதங்களில் கிலுகிலுக்கும் கொலுசணிந்து, வலிக்காமல் மெதுவாக உதைப்பதால், அல்லவோ, அது ரம்மியமானப் பூ உடை தரித்து எங்களை மயக்கும்?!

ஏறக்குறைய மற்றவர்களைப் போன்றுதான் ஶ்ரீ ஹர்ஷதேவரும் தனது “ரத்னாவளி” நாடகத்தில் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

‘வாய் நிறைய வைத்துள்ள மதுரசத்தை உற்சாகமுடன் பகுளமர வேர்களில் உமிழ,  அது உவகை மிகுதியால், மதுவின் மணத்தைத் தன் மொட்டுகளில் உறிஞ்சிக் கொண்டு விகசிக்கிறது, போலும்!

மது ருசித்த உதடுகளும், நாவும் சிவந்திருக்கும் ‘சந்திரமுகி’ கன்னியர் கலகலவெனச் சிரிப்பதைக் காணும் சம்பக மரங்கள் வெகு நாட்களுக்குப் பிறகு மலர்ந்து, பூச் சொரிந்து புன்முறுவல் பூக்குகிறதாம்.

கொலுசு அணிந்த காலால் அசோகமரத்தை உதைக்கையில் உண்டாகும் ‘ஜிலுங் ஜிலுங்’ ஓசைக்கேற்ப,உடனே பூத்துக் குலுங்கும் மரத்தைச் சுற்றி வண்டுகள் இடும் ரீங்காரம் பாடல் பாடுவது  போல் உள்ளதாம்!’ ( 1:18 )

கடைசியாக நாம் காண இருப்பது முழுக்க முழுக்க மகாராஷ்ட்ரி பிராகிருத மொழி யில் கவி ராஜசேகராவால் இயற்றப்பட்ட “கற்பூர மஞ்சரி” நாடிகாவாகும். பாட்டும், நாட்டியமும் (சட்டகா=ச+ஆட்ட,ஆடல்=நாட்டியம்,கூடி வருவது பாடல்) கலந்து வரும் நான்கு அங்கங்கள் கொண்ட ஒரு சிறு  உபகாவியம். பிராகிருத மொழி நாடகங்கள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.சட்டகாவின் பிரிவுகள் அங்கம் என்பதற்குப் பதில் ‘ஜவனிகாந்தரா’ (திரைச்சீலையால் பிரிக்கப்பட்ட / முக்கியச் சம்பவங்களைத் திரைக் குப் பின்னால் காட்டும் உத்தி))என அழைக்கப்படுகிறது. இந்த விளக்கமெல்லாம் ஆரம்பத்திலேயே சூத்திரதாரியால் சொல்லப்பட்டு விடுகிறது.

மாயாஜாலம்,மந்திரவாதியின் பங்களிப்பும் இருக்கும். பொதுவாக நாயகியின் பெயரே நாடகத்துக்கு வைக்கப்படும். ராஜசேகராவின் காலம் 8-10ம் நூற்றாண்டுக்குள் இருக் கலாம் என்பது அனுமானம். கன்னோஜை ஆண்ட அரசன் மகேந்திரபாலனின் ராஜ குருவாக விளங்கியவர். யாயா வராயப் பிரிவைச் சேர்ந்த சைவ அந்தணர் ஆவார். ஆளுமைத் திறமையும், மதியூக மும் நிறைந்த ராஜபுதன இளவரசி அவந்திசுந்தரி இவரது மனைவி. கவியின் இலக் கியப் பணியில் பெரிதும் உறுதுணையாக இருந் ததை அங்கீகரிக்கும் வகையில் அவளைச் சந்தோஷப்படுத்த இந்த நாடிகாவை எழுதியுள்ளார்.

இதன் கதைக் கரு– குந்தலா (தற்போதிய தெலுங்கானா) நாட்டின் அரசன் வல்லப ராஜன்-ராணி சசிபிரபாவின் மகள் கற்பூர மஞ்சரி.,தக்காணத்தின் ராஜா சந்திரபாலா வின் ஆஸ்தான மாயாஜாலக்காரன் பைரவாநந்தா தன் அதீத சக்தி மூலம் இளவர சியை அரசன், ராணி முன் வரவழைக்க ராணி விப்ரபலேகா இளவரசி உண்மையில் தனது ஒன்று விட்ட சகோதரிதான் என்பதை அறிந்து, ஒரு பட்சகாலம் தன்னுடன் தங்கியிருக்க அனுமதிக்கிறாள். அவள் மீது காதல் கொள்கிறான் ராஜா சந்திரபாலா. இதற்குப் பெரிதும் விதூஷகன் கபிஞ்ஜலா, மாயாஜாலக்காரன் இருவரும் உதவினா லும், அவன் ராணி விப்ரபலேகா பல இடையூறுகள் விளைவிக்கிறாள். அவற்றை யெல்லாம் ஒருவாறு சமாளித்துத் திருமணம் செய்துகொள்வது தான் கதை. இதில் பல சாகச நிகழ்வுகள், வசந்தகால கோலாகலங்கள் சுவாரசியமாகச் சொல்லப்பட் டுள்ளன. மகளிர் பங்கேற்கும் தோஹத நடவடிக்கைகள் 8 சுலோகங்களுக்கு மேல் விவரிக்கப் பட்டுள்ளன (2;43-50).

 குரபகதிலக அசோகா ஆலிங்கன தர்சனாக்ர சரணஹதா:|

 விகசந்தி காமினீனாம் தத் ஏஷாம் தேஹி தோஹதகம்|| (2-43), அதாவது,

வெவ்வேறு மரங்களின் மசக்கை ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் வழிமுறைகள் இதில் கூறப்படுகின்றன.

பார்க்கப் பரவசமளிக்கும் அமுதம் நிரம்பியக் கலசம் போன்ற  மார்பகங்களைக் கொண்ட இளம் பெண்கள் அமரந்த மரத்தை ஆர அரவணைத்துத் தன் இச்சையைத் தீர்த்து வைத்ததால்அது மனமகிழ்ந்துப் பூமாரிப் பொழிந்ததாம். மலர் வாசனையால் ஈர்க்கப்பட்டத் திரளான வண்டுகளும் ரீங்காரமிட்டவாறு கூடிவிட்டனவாம்! (2, 44).

உதிர்ந்துள்ளக் குரவகா பூ மொட்டுகளைத் திரட்டிக் கைகளில் பெண்கள் பொத்திக் கொண்டதும், மன்மதனின் காதற்கணைகளைப் போல் அவை மொட்டவிழ்ந்து மலர்ந்து விட்டதாம்! (2,45).

காமனின் வளைந்த வில் போன்ற புருவம், அஞ்சனம் தீட்டிய மானின் மருண்ட பார்வை கொண்ட இளம் கன்னியர் திடீரெனத் தங்களைக் கூர்ந்து பார்த்ததால் திலகம் மரம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிற்றாம். அதன் உச்சியில் கொத்துக் கொத்தாக பூக்கள் மலர்ந்து மலர் ஆடை அணிந்திருந்ததாம். (2,46). என்று ராஜா சந்திரபாலனும்,,விதூஷகனும் வியந்து போகிறார்கள்.

அவர்கள் மட்டுமா, நாமும் தான்!

நல்ல கதை அம்சம், கதாபாத்திரங்களின் ஹாஸ்ய நடிப்பாற்றல், பொருள் பொதிந்த அக்கால நாட்டு நடப்பை எடுத்துரைக்கும் பாடல்கள், பண்பாடு, கலாச்சாரத்தை விரி வாக விளக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இக்காவியங்களை ஒவ்வொருவரும் படித்து இன்புறவேண்டும்.

சுபம்.

        —————————————————————————————————–

tags- மங்கையர், மரங்கள், பூங்கொடிகள், part 2, வஸந்த விழா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: