IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,787
Date uploaded in London – – 28 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 25-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய நான்காவது உரை
4
புதிய வழிகளைக் காண்பிக்கும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள்!
ச.நாகராஜன்
சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டும் தான் என்று மெத்தனமாக இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் முனைந்து இதில் ஈடுபட வேண்டும் என்பது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களின் ஒரு மித்த கருத்தாகும்.
இதற்கென இந்தியாவெங்கும் உள்ள சூழல் ஆர்வலர்கள் வெவ்வேறு விதத்தில் தக்க செயல்களைச் செய்து எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.
இதில் ஒரு வழி நமது வீட்டையும், நமது பயணத்திற்கான சூட்கேஸ், நாம் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லும் பை ஆகியவற்றைத் தணிக்கை செய்து பார்ப்பதாகும்.
பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ எடுத்துச் செல்லும் பையில் பிளாஸ்டிக் அல்லது சூழலுக்குக் கேடு பயக்கும் பொருள்கள் இல்லாமல் இருக்கிறதா என்று பலரும் தங்களைத் தாங்களே தணிக்கை செய்து பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு கடற்கரைக்கோ அல்லது உல்லாச பயண தலத்திற்கோ செல்லும் போது பயணிகள் நிச்சயமாக கழிவுப் பொருள்களை ஆங்காங்கே போடாமல் தம்முடனேயே உடனுக்குடன் எடுத்துச் செல்ல, கழிவுப்பொருள் பைகளை எடுத்துச் செல்வது அதிகமாகி வருகிறது.
பயணம் முடிந்த பின்னர் சூட்கேஸை சுய தணிக்கை செய்து பார்த்தால் எவ்வளவு கழிவுப் பொருள்களை அனாவசியமாக நாம் உருவாக்குகிறோம் என்பது தெரிய வரும்; மேற்கொண்டு வரும் பயணங்களில் இவை படிப்படியாக குறைக்க இந்த தணிக்கை முறை உதவும்.
மறுசுழற்சி செய்யக் கூடிய பாட்டில்களை மட்டுமே எடுத்துச் செல்வது என்ற பழக்கம் வாழ்க்கை முறை பழக்கமாக ஆக வேண்டும்.
விடுதிகளில் தரப்படும் குளியல் அறை பொருள்களை ஏற்காது, நமது சொந்தப் பொருள்களையே எடுத்துச் செல்வது ஒரு நல்ல பழக்கமாகும்.
பயணத்தை இனிய ஜீரோ வேஸ்ட் டிராவலாக (ZERO WASTE TRAVEL) – கழிவுப்பொருளே இல்லாத பயணமாக இருப்பதை விரும்புவோரின் எண்ணிக்கை இப்போது பெருகி வருகிறது. ஆங்காங்கே குடிநீர் பாட்டில்களை வாங்காமல் ஒரே ஒரு பாட்டிலிலேயே ஆங்காங்கே பருகத் தக்க நீரைப் பிடித்துப் பயன்படுத்துவது சூழல் ஆர்வலர் வற்புறுத்தும் பழக்கமாக அமைகிறது.
பேப்பர் உபயோகத்தைக் குறைக்கும் வகையில் டிஜிடல் முறையிலான பயணச் சீட்டைக் கொண்டு செல்வது இன்றைய நல்ல பழக்காமாக மாறி வருவது வரவேற்க வேண்டிய ஒரு அம்சமாகும்.
நொறுக்குத் தீனிகளை பிளாஸ்டிக் பைகள், பெட்டிகளில் போடாமல் மறு சுழற்சிக்கு உள்ளாகும் பைகள், பெட்டிகளில் போட்டு வைப்பது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் ஒரு வழியாகும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்படி நூற்றுக் கணக்கான வழிகளை மேற்கொண்டு பிறருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.
நாமும் இவர்களைப் போல பயணம் ஒவ்வொன்றையும் ‘ஜீரோ வேஸ்ட்’ பயணமாக ஆக்கி சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கலாமே!
**
அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 26-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஐந்தாவது உரை
5
தட்பவெப்பம் சீராக இருக்க மீத்தேன் வாயுவைக் கட்டுப்படுத்துவோம்
ச.நாகராஜன்
சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் தொழிற்புரட்சி ஏற்பட்டது.
அதன் பின்னர் நமது பூமியின் வெப்பம் ஒரு டிகிரி செல்ஸியஸ் கூடி இருப்பதை அனைவரும் அறிவோம்.
இப்படி வெப்பம் கூடிக் கொண்டே போவதற்கு கார்பன் டை ஆக்ஸைடு போன்ற நச்சு வாயு மட்டுமே காரணமல்ல. இன்னொரு காரணமாக மீதேன் வாயுவையும் கூறலாம். இது சற்று குறைவு தான் என்றாலும் நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாக அமைகிறது.
மீதேன் வெளிப்பாடு ஆண்டொன்றுக்கு 380 மில்லியன் டன்கள் என்ற அளவில் இப்போது இருந்து வருகிறது. ஆகவே இது கார்பனுக்கு அடுத்த அபாயமாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியான மக்கென்ஸி அறிக்கை (McKinsey Sustainablility report) இது பற்றிய பல விவரங்களைத் தருகிறது. நாம் இன்று காணும் வெப்பத்திற்கு, 30 விழுக்காடு இது காரணமாக அமைவதாக இந்த அறிக்கை அறிவிக்கிறது.
இதில் ஒரே ஒரு நல்ல அம்சம் என்னவெனில், இந்த மீதேன், வளி மண்டலத்தில் பத்து வருடங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகவே இதைக் குறைத்தால் அதன் பலனை உடனடியாகக் காண முடியும் என்பது தான்.
மீதேன் முக்கியமாக மனிதச் செயல்பாடுகளினாலேயே ஏற்படுகிறது என்பதோடு முக்கியமாக ஐந்து துறைகளினாலேயே 98 விழுக்காடு மீதேன் வெளிப்பாடு அமைகிறது என்பதையும் அறிய முடிகிறது.
இவற்றில் கவனம் செலுத்தி மீதேனைக் கட்டுப்படுத்தி வருடத்திற்கு 2 விழுக்காடு என்ற அளவில் குறைத்து விட்டால் 1.5 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் பூமியின் உஷ்ண அதிகரிப்பைக் குறைத்து விடலாம்.
விவசாயம், எண்ணெய் மற்றும் எரிவாயு, நிலக்கரிச் சுரங்கம், Sold Waste எனப்படும் திடக்கழிவு, கழிவு நீர் ஆகிய ஐந்தைக் கட்டுப்படுத்தினால் 2030 ஆம் ஆண்டு வாக்கில் 20 விழுக்காடு மீதேனைக் கட்டுப்படுத்தியவர்களாவோம்.
கால்நடை மற்றும் செம்மறி ஆடுகள் மட்டுமே உலகளாவிய விதத்தில் விவசாயத் துறையில் 70 விழுக்காடு மீதேன் வெளிப்பாட்டிற்கான காரணமாக அமைகிறது. இவற்றின் தீனியைச் சற்று மாற்றினாலேயே மீதேன் வெளிப்பாடு வெகுவாகக் குறையும் என்பது விஞ்ஞானிகளின் பரிந்துரை.
வாகனங்கள் வெளியேற்றும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தினால் எண்ணெய் மற்றும் எரிவாயுவினால் ஏற்படும் தீங்கைக் கட்டுப்படுத்தியவர்களாவோ,.
அடுத்து நிலக்கரிச் சுரங்கம் பத்து முதல் பதினைந்து விழுக்காடு மீதேன் வெளிப்பாடிற்கான காரணம் என்பதால் இதைக் கட்டுப்படுத்தினால் வரும் முப்பது ஆண்டுகளில் 13 விழுக்காடு மீதேன் வெளிப்பாடைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
திடக்கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மையை நவீன தொழில்நுட்ப உதவி கொண்டு சீரமைத்து கழிவு நீரைத் தூய்மைப்படுத்தினால் நாம் இன்னும் 14 விழுக்காடு மீதேனைக் கட்டுப்படுத்தலாம்.
கால்நடைகளின் தீனியை மாற்றுவது, வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்துவது, திடக்கழிவைக் குறைப்பது, நீர்க்கழிவைச் சுத்தப்படுத்துவது ஆகிய இவற்றில் சாமானியரின் பங்கு நிறையவே இருப்பதால் ஒவ்வொருவரும் மீதேன் புகை வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த உறுதி பூண வேண்டும்.
இதனால் பெருமளவு புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும் என்பது
ஒரு நல்ல செய்தி அல்லவா?!
**
TAGS- மீதேன், மறுசுழற்சி