Post No. 10,791
Date uploaded in London – – 29 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எலி மயிரில் ஆடை -2; தமிழர் கண்டுபிடிப்பு -2
தமிழர்கள் அணிந்த ஆடைகள் , சிந்து சமவெளி யோகி முத்திரையில் காணப்படும் பூ ஆர் ஆடை போல , பூக்கள் நிறைந்ததாக (மலர் டிசைன்) இருந்ததைக் கண்டோம். அவை பல வண்ணங்களில் இருந்த செய்தியையும் சங்க இலக்கியங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
இந்திர கோபப் பூச்சி போல சிவப்பு நிற ஆடைகளை காண்கிறோம்.
கோபத்தன்ன தோயாப் பூந்துகில் –
முருகு -14
பெரும்பாணாற்றுப் படையில், சிலந்தியின் நூலுக்கு , துகில் நூல் ஒப்பிடப்படுகிறது. அவ்வளவு மெலிதாம்!!.
துணங்கை யம்பூதந்துகிலுடு த்தவை போற்
சிலம்பி வாநூல் வலந்த மருங்கில் ….
-பெரும்பாண் ; வரி-235/6
xxx
பல மலர்களின் நிறத்தையும் வடிவங்களையும் குறிப்பிடும் வரிகள் இதோ :-
போ துவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
அகன்றுமடி கலிங்கம் – புறம். 393
அதே பாட்டில் கோடைப் பஞ்சு மூட்டை போல வயிறு பெருக்கும்படி உணவு தருவாயாக எனறு வேண்டுவதும் குறிப்பிடத்தக்கது. அதே போல பாணர்கள் வறுமை பற்றிப் பாடும்போது கந்தைத் துணிகள் பற்றிய விஷயங்களும் அம்பலத்தில் ஏறுகின்றன.
XXX
பிராமணப் பெண்கள் தாலி காட்டுவதற்கு முன்னால் அணியும் அரக்கு போன்ற சிவப்புநிறப் புடவை கூறைப் புடவை எனப்படும். இதிலும் நிறம் முக்கியமானது தெரிகிறது.
நார்மடி என்னும் நாரால் செய்யப்பட்ட ஆடையை பிராமணர்கள் ‘மடி’- ஆக பயன்படுத்திக்கிறர்கள். நார்ப் பட்டு என்றும் இதை அழைப்பர் .
‘மடி’ என்பது, பிறர் அணிந்த தீட்டுத் துணிகளால் பாதிக்கப்படாத என்று பொருள்.இதை ‘கோடி’ என்றும், அதாவது புதுத்துணிகளுக்குத் தீட்டு இல்லை- என்ற பொருளிலும் சொல்லுவர்.
தார்ப்பாய்ச்சு – வேட்டியின் முன் முனையைப் பட்டையாக மடித்து கால்களுக்கு இடையில் கொடுத்துப் பின்பக்கம் இழுத்துச் செருகுதல்
பஞ்சகச்சம் — வேட்டியை மூன்று முனைகளாக ஆக்கி இரு முனைகளை இடுப்பின் முன்புறத்தில் செருகி மற்றோர் முனையை கால்களுக்கு இடையில் கொடுத்து இடுப்பின் பின்புறத்தில் செருகிக் காட்டும் முறை ; பிராமணர்கள் எல்லா பூஜை முதலிய சடங்குகளில் உடை அணியும் முறை.
(From Cre-A Dictionary)
xxx
உடுக்கை, ஆடை, அறுவை , துகில், கச்சு, கச்சை போன்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றன.
நெசவாளர், தையற்காரர் என்பதற்குள்ள சொற்கள்:- கைக் கோளர் , அத்த கோளர், காருகர், வேதகார் , வேமையர் , துருவியர் , தந்துவாயர் , சாலியர், பொருத்தர்
தையற்காரர்
தூசுதைப்போர், பொல்லர் , துன்னர், தாந்துவீகர் , தோல் தைப்போர் , செம்மார்
மதுரையில் நெசவு வேலை செய்யும் செளராஷ்டிர சமூகத்தினரை பட்டு நூல்காரர் என்பார்கள்.
சாலியர் பற்றி ‘அபிதான சிந்தாமணி’ ஒரு தகவல் தருகிறது:-
சாலியர் – இவர்கள் வடநாட்டு நெசவுத் தொழிலாளர். இவர்கள் தங்களை சேனாபதிகள் என்பர். பட்டுச் சாலியர், பத்ம சாலியர் என்று இவர்களில் இரு வகையினர் உண்டு. பட்டுச் சாலியர் பூணுல் தரிப்பர். மாமிசம் சாப்பிட மாட்டார்கள் . பத்மசாலியர் மது, மாமிசம் சாப்பிடுவர். பூணுல் அணியமாட்டார்கள்
துணி என்பதற்கு ஆனந்த விகடன் அகராதி கொடுக்கும் சொற்கள் —
கந்தை, சீலைத் துணி, துண்டு, ஆடை, தொங்கல், மரவுரி, சீலை , கஞ்சுகம் /சட்டை, புடவை.
சங்க காலத்துக்குப் பின்னர் வந்த மணிமேகலை நூலில் புகார் நகர உபவனம் சித்திரத் துணி போர்த்தியது போல விளங்கியதைக் காட்டும்,
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கை படா அம் — மணி மேகலை 3-168
நூல் நூற்கும் தொழிலில் , வேத காலம் போலவே, தமிழ் நாட்டிலும் பெண்கள்தான் அதிகம் ஈடுபட்டனர். கணவனை இழந்த பெண்கள் இதைச் செய்ததாக சங்கப் புலவர்கள் பாடுகின்றனர்.
பருத்தி என்ற சொல் புறநானூற்றில் மட்டும் 7 இடங்களில் காணப்படுகிறது புறம் 326, புறம் 125 etc.
பஞ்சி, பஞ்சு என்பன குறைந்தது 10 இடங்களில் காணப்படுகிறது. இவை தவிர படாம் போன்ற சொற்களும் துணிகளைக் குறிப்பன ஆகும்.
ஆட்டு ரோமத்தாலும், எலி மயிரினாலும், பட்டு நூலாலும் நெய்யப்பட்ட துணிகளை நூலாக்கலிங்கம் என்று அழைத்தனர்.
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ – பதிற்று.12
சிலப்பதிகார உரை எழுதிய அடியார்க்கு நல்லார் நிறைய விஷயங்களைச் சொல்கிறார்.
ஆடைகளின் ஓரங்களில் அழகிய குஞ்சங்களை அமைப்பதுண்டு. இதை வம்பு நிரை முடினர்– என்ற வரியால் அறியலாம்.
பட்டுப் புடவைக்குக் குஞ்சம் கட்டுவது பற்றி பொருநர் ஆற்றுப்படையில் படிக்கலாம் :
கொட்டைக்கரைய பட்டுடை நல்கி — வரி 155
தாமரை, மல்லிகை, பிச்சி, மாவிலை, மாம்பிஞ்சு வடிவங்களை துணியின் கரைகளில் அமைத்தனராம் ; துகில் என்பது வெண்மை கலந்த சிவப்பு நிறத்திலும், பூந்துகில் என்பதுமலர் வடிவம் வரையப்பட்ட துணி என்றும் அடியார்க்கு நல்லார் உரை செப்பும்.
Xxxx
துணிகளுக்கு கஞ்சி
துணிகளுக்கு கஞ்சி போட்டு, அவைகளை வண்ணார் மனைவியர் , மடித்துக் கொடுத்த செய்தியும் பல சங்க நூல்களில் வருகிறது –
‘சோறமை வுற்ற நீருடைக் கலிங்கம் ‘
‘வறனில் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகார் கொண்ட புன் பூங்கலிங்க மொடு’ – நற்றிணை 90
‘கள ரப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழி இய தூ வெள்ளறுவை’ – புறம் 311
‘நலத்தகைப் புலத்தி பசை தோய்ந்தெடுத்து – குறுந்.330
பசைகொல் மெல்விரல் பெருந்தோட் புலைத்தி’ — அகம் 34
என்ற வரிகளால் துணி வெளுப்போர் தொழில் பற்றியும் அறிகிறோம்.
முடிவுரை:
பெண்களுக்கு முக்கிய வேலை கொடுத்தது நெசவுத் துறை. தமிழ் நாட்டிலுள்ள காஞ்சீபுரம், திருபுவனம், தர்மாவரம் , சின்னாளப்பட்டி சேலைகள் இன்றும் உலகம் முழுதும் பாராட்டப்படுகின்றன. இது போல நாகர்கோவில் வேட்டி , கருடாழ்வார் கரை வேட்டி என்பன துணிமணிகள் சிறப்பை எடுத்து ஓதுகின்றன .
–சுபம் –
TAGS- சேலைகள், துணிகளுக்கு கஞ்சி, சாலியர், பஞ்சகச்சம், கூறைப் புடவை, தார்ப்பாய்ச்சு, நார்மடி