IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,796
Date uploaded in London – – 31 MARCH 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
29-3-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
சூரியன் முதலில் உதிக்கும் நாடு!
ச.நாகராஜன்
நிப்பன் – சூரியன் உதிக்கும் நாடு!
உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு என்ற பெருமையைப் பெற்ற நாடு ஜப்பான். இது நிப்பன் என்று உச்சரிக்கப்படும். நிப்பன் என்றால் சூரியன் உதிக்கும் இடம் என்று பொருள்.
ஆகவே, ‘சூரியனின் அருளைச் சிறப்பாகப் பெற்ற மக்கள் நாங்கள்’ என்று ஜப்பானியர் பெருமைப் படுகின்றனர். ஜப்பானின் தேசீயக் கொடியிலும் சூரியன் இடம் பெற்றிருக்கிறது.
சூரியன் நீடித்த ஆயுளைத் தருபவன் என்று இந்திய அறநூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவியலும் கூட சூரியன் உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் ஆதார சக்தி என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறது.
அது முதலில் உதிக்கும் நாடு என்பதாலோ என்னவோ உலகிலேயே அதிக ஆயுளைப் பெற்றிருப்பவர்கள் ஜப்பானியரே!
பார்க்க வேண்டிய இடங்கள்!
ஜப்பானைப் பற்றிய வியத்தகும் சுவையான செய்திகள் ஏராளம் உள்ளன. பார்க்க வேண்டிய இடங்களும் இங்கு ஏராளம், ஏராளம்!
ஆசியாவில் 6852 தீவுகளைக் கொண்டு விளங்கும் இந்த நாட்டைப் பார்ப்பதற்காக ஆண்டு தோறும் லட்சக் கணக்கில் பயணிகள் வந்து சுற்றிப் பார்த்து மகிழ்கின்றனர். ஜப்பானில் முக்கிய நிலப்பரப்பில் அமைந்துள்ள நான்கு தீவுகள் முதன்மை இடத்தைப் பெறுகின்றன : 1) ஹொக்கிடோ, 2) ஹோன்ஷூ, 3) க்யூஷூ 4) ஷிகோகு
மவுண்ட் ஃப்யூஜி
ஜப்பான் என்ற உடனேயே அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது மவுண்ட் ஃப்யூஜி தான். 3776 மீட்டர் (12388 அடி) உயரமுள்ள இந்த மலையை இதன் தலை நகரமான டோக்கியோவிலிருந்தே பார்க்கலாம். இந்த மலையில் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஏறி மகிழ்கின்றனர். அடிவாரத்திலிருந்தும் ஏறலாம் அல்லது பாதி தூரத்தில் உள்ள ஐந்தாம் நிலையிலிருந்தும் ஏறலாம். இங்கிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் மக்களுக்கு ஏற்படுகிறது.
ட்ரெக்கிங் என்பது உலகளாவிய விதத்தில் அனைவரையும் கவர்வது குறிப்பிடத்தகுந்தது. அதற்கு உகந்த ஒரு இடமாக இந்த மலை அமைகிறது.
டோக்கியோ
டோக்கியோவை அறியாதவர்களே இருக்க முடியாது. பண்டைய பாரம்பரியம் கொண்ட ஜப்பானின் தலை நகரம் இது.
ஆகப்பெரும் உலகின் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் டி வி சீரியலான மணி ஹெய்ஸ்ட் -இன் (Money Heist) முக்கிய கதாபாத்திர பெண்மணி ஒருவருக்குப் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரை இதன் புகழ் சொல்லி மாளாது.
இங்குள்ள இம்பீரியல் பாலஸின் பல பகுதிகளைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு. இங்கு அனைவரும் விரும்பும் பாலம் நிஜுபஷி பிரிட்ஜ் – தண்ணீரில் பிரதிபலிக்கும் ஒன்று என்பதால் இதை இரட்டைப் பாலம் என்கின்றனர்.
ஷாப்பிங் பிரியர்களுக்கு டோக்கியோ ஒரு சொர்க்கம். ஹை டெக் தயாரிப்புகள், எலக்ட்ரானிக் பொருள்கள், ஃபேஷன், மேக்-அப் பொருள்கள் என எதை வேண்டுமானாலும் வாங்க பத்துக்கும் மேற்பட்ட ஷாப்பிங் மையங்கள் உள்ளன. (அவரவர் நேரத்தையும் பணத்தையும் பொறுத்து) மக்கள் கூட்டம் இங்கு அலை மோதும்.
நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா மூலம் டோக்கியோவை ஒரு சுற்று சுற்றி விடலாம். ஹெலிகாப்டரிலிருந்து கூடப் பார்க்கலாம்.
டோக்கியோ டிஸ்னிலேண்ட்
அமெரிக்கா சென்று அங்கு டிஸ்னிலேண்டைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் கொண்டுள்ளவர்கள் டோக்கியோவில் உள்ள டிஸ்னிலேண்டைப் பார்த்துக் களிக்கலாம். 115ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தீம் பார்க் இது.
ஒஸாகா யுனிவர்ஸல் ஸ்டுடியோ
இதே போல அமெரிக்கா சென்று யுனிவர்ஸல் ஸ்டுடியோவைப் பார்க்க முடியாதவர்கள் ஒஸாகா நகரில் உள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோவைக் கண்டு களிக்கலாம். இதன் பெருமைகள் சொல்லி முடியாது!
டிஸ்னிலேண்டும் யுனிவர்ஸல் ஸ்டுடியோவும் மெதுவாகப் பார்த்து அனுபவிக்க வேண்டிய தீம் பார்க்குகள். அவசரமே படக் கூடாது.
ஹிரோஷிமா சமாதான நினைவுப் பூங்கா
இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. அதன் உச்ச பட்ச கொடுமையாக ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இரு நகரங்களின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அணுகுண்டு போடப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் மடிந்ததும் வரலாறு தரும் உண்மை.
இன்னொரு அணுகுண்டு உலகின் எந்தப் பகுதியிலும் எந்தக் காலத்திலும் யாராலும் போடப்படக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அந்த நல்ல கருத்தை வலியுறுத்தும் வண்ணம் ஹிரோஷிமா சமாதான நினைவுப் பூங்கா திகழ்கிறது.
அணுகுண்டின் பாதிப்பு பற்றிய ஏராளமான செய்திகளை இங்கு உள்ள அருங்காட்சியகத்தில் பார்க்க முடிகிறது.
பாரம்பரிய நகரம் க்யோடோ
ஜப்பானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் க்யோடோ. ஆண்டுக்கு ஒரு கோடி பேர் இங்கு வந்து இதன் சிறப்பைக் கண்டு மகிழ்கின்றனர். பழங்காலக் கட்டிடங்கள், பழைய வீதிகள் ஒரு புறமிருக்க, சிற்பங்கள், ஓவியங்கள், புத்தமத செல்வாக்கினால் உருவாக்கப்பட்ட கலைக் கட்டிடங்கள் ஜீவனுடன் இன்றும் இலங்குவதைப் பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்படும்.
இங்கு பார்ப்பதற்கு நிஜோ கோட்டை, மூங்கில் வனம், அரண்மனை உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.
ஹிரோஷிமா நகரிலிருந்து பயணப்பட்டு அனைவரும் பார்க்க விரும்பும் இடம் மியாஜிமா தீவாகும். இங்கு இட்சுகுஷிமா ஆலயம் புனிதமான ஒன்று. இங்கு பாரம்பரியமான நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
கோவில் நகரம் நரா
வரலாற்றுச் சிறப்புக் கொண்ட கோவில்கள் பல கொண்ட கோவில் நகரம் நரா.
கோஃபுகு-ஜி ஆலயம் உள்ளிட்ட எழு பெரும் ஆலயங்களின் வரலாறு பிரமிக்க வைக்கும் ஒன்று; ஆயிரத்திமுன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை இவை. 25 அடி உயரமுள்ள சிலைகள், பிரம்மாண்டமான தூண்கள் என வியக்க வைக்கும் பல அமைப்புகள் உள்ளத்தைக் கவர்ந்து இழுப்பவை.
இப்படி ஏராளமான இடங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
வாழ்க்கைத் தரமும் செலவும்!
ஆங்காங்கே தங்க நல்ல ஹோட்டல் வசதிகளையும் சிறப்பான சுற்றுலா முகமைகளையும் கொண்டுள்ளது ஜப்பான்.
வாழ்க்கைத் தரம் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகில் மிக அதிக செலவு ஆகும் இடம் ஜப்பான் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்தக் கருத்திலிருந்து மாறுபடும் வகையில் இப்போது இது முதலிடத்திலிருந்து பத்தாவது இடத்திற்கு வந்து அனைவரையும் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட வைத்திருக்கிறது இப்போது!
செலவினத்தை ஒப்பீடு செய்யும் நிபுணர்கள், இந்தியாவில் இருக்கும் செலவை விட 62 விழுக்காடு அதிகம் செலவு ஜப்பானில் ஆகும் என்று சுலபமாக கூறுகின்றனர்.
ஜப்பானிய நாணய முறை (பணம்) யென் எனப்படுகிறது. (yen)
ஒரு யென்னின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு?
ஒரு யென் = 0.62 ரூபாய்
மக்கள் கடுமையான உழைப்பாளிகள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கும் இவர்கள் அன்பாகவும் பண்புடனும் பாரம்பரியத்துடனும் உபசரிப்பவர்கள்.
தரத்தின் தாயகம்
‘மேட் இன் ஜப்பான்’ என்று முத்திரையிடப்பட்ட பொருள்களை ஏளனமாகச் சிரித்து லாயக்கில்லாத குப்பை என்று சொன்ன காலம் ஒன்று உண்டு. அதை ஏற்க முடியாத ஜப்பானியர் உறுதியான கொள்கை ஒன்றை மேற்கொண்டு எந்தப் பொருளிலும் தரத்தை முன்னேற்ற ஆரம்பித்தனர்.
விளைவு, தரத்தை மேம்படுத்தும் ஏராளமான உத்திகளைக் கண்டு பிடித்தனர். டோடல் க்வாலிடி கண்ட்ரோல், (முழுத் தரக் கட்டுப்பாடு Total Quality Control) ஜஸ்ட்-இன்–டைம் (Just In Time), கான் பான் (Kanban) வழிமுறை, க்வாலிடி சர்க்கிள் எனப்படும் தர வட்டம் (Quality Circle), உள்ளிட்ட ஏராளமான ஜப்பானிய வழிமுறைகளை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்தன.
ஜப்பானில் தயாராகும் கார்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக விளங்க ஆரம்பித்தன; விளங்கி வருகின்றன.
உலகிலேயே ரொபாட் வடிவமைப்பிலும் உற்பத்தியிலும் முதலிடத்தைப் பிடித்து உலகை அசத்தும் நாடாக ஜப்பான் இன்று இலங்குகிறது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களையே ஈர்த்து உலகம் சுற்றும் வாலிபனை இயக்கித் தயாரிக்க வைத்த ஈர்ப்பு நாடு ஜப்பான். 1970இலேயே எக்ஸ்போ உலகைக் கவர்ந்தது என்றால் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஜப்பானின் முன்னேற்றம் எப்படி இருக்கும் என்பதை எளிதில் ஊகித்து உணரலாம்.
ஜப்பானில் உங்களுக்கு எது வேண்டுமோ அதை வெண்டிங் மெஷினில் பெறலாம். இப்படி நாடெங்கும் 50 லட்சம் வெண்டிங் மெஷின்கள் உள்ளன. பத்திரிகை, உணவுப் பொருள்கள், கறிகாய் என எதை வேண்டுமானாலும் இவற்றிலிருந்து பெற முடியும்.
மலர்களை அலங்காரம் செய்வது ஜப்பானியரின் பாரம்பரிய பழக்கம்.
இங்கு இளைஞர்கள் குறைவு. வயதானவர்கள் அதிகம். நூறு வயதைத் தாண்டியவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.
டோக்கியோவில் மட்டும் மூன்றே முக்கால் கோடிப் பேர் உள்ளனர். ஜப்பானின் மொத்த ஜனத்தொகை 12.58 கோடி. பரப்பளவு : 3,77,975 சதுர கிலோ மீட்டர்!
கிரிமினல் குற்றங்கள் குறைவாக உள்ள உலக நாடு ஜப்பான் தான்!
சுத்தம் என்பது கல்விப் பாடத் திட்டத்தின் ஒரு அங்கமாகும். ஒரு கழிவறைக்குச் சென்று வெளியே வருபவர் கூட அதை புதிதாக இருப்பது போல சுத்தமாக்கி விட்டுத் தான் வர வேண்டும் என்பது அங்கு எழுதப் படாத விதி.
பொழுதுபோக்கில் தனி இடத்தைப் பிடிப்பவை ஜப்பானிய அனிமேஷன் படங்கள். இதற்கனவெ 150 பள்ளிகள் உள்ளன.
தாமதம் இல்லாத ரயில்கள்!
ஜப்பானின் புல்லட் ட்ரெயினைப் பார்ப்பதற்காகவே அங்கு ஒரு முறை போகலாம். மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் (பறக்கும்) இவை குறித்த நேரத்தில் விநாடி சுத்தமாக இயங்குபவை. தாமதம் என்றால் எப்போதாவது ஏற்படும்; அதுவும் அதிக பட்ச தாமதம் 18 விநாடிகள் தான்!
புதிய கவிதை!
உலகிற்கே கவிதையில் ஒரு புது வடிவம் கொடுத்தது ஜப்பானே!
ஹை கூ என்ற அந்தக் கவிதை மூன்று அடிகளைக் கொண்டது.
முதல் அடியில் 5 அசை, அடுத்த அடியில் 7 அசை, கடைசி அடியில் 5 அசை என வார்த்தைகளைக் கொண்டிருக்கும். பொருளோ கடல் அளவு இருக்கும்.
எடுத்துக்காட்டிற்கு உலகப் புகழ் பெற்ற இரு ஹை கூ இதோ:-
அமைதியான ஒரு பழைய குளம்
அதில் ஒரு தவளை பாய்ந்து குதித்தது
ப்ளிச்! மீண்டும் அமைதி!
இன்னொன்று :-
பனித்துளி உலகம்!
ஒவ்வொரு பனித்துளியிலும்
ஒரு உலகப் போராட்டம்!
ஹை கூவின் பொருளை ஆழ்ந்து ஓர்ந்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.
இவற்றிற்கான விளக்கவுரைகள் ஏராளம் இருக்கும்!
ஒரு வரியில் ஜப்பான்!
இப்படிப்பட்ட அருமையான நாட்டை ஒரு வரியில் சொல்லி விட முடியுமா? முடியுமே!
உலகின் எந்த நாட்டிலிருந்தாலும் சூப்பராக வாழும் தனது நண்பருக்கு ஒருவர் செய்யும் தொலைபேசி இது தான்:-
“என்ன நண்பரே! பிரமாதமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன், ஜப்பான் எப்படி இருக்கிறது?!”
****
கட்டுரையாளர் 5000 கட்டுரைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரது 18 நூல்கள் அச்சுப்பதிப்பாகவும் 95 நூல்கள் மின்னணு நூல்களாகவும் வெளி வந்துள்ளன. பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்பவர்.
.tags– ஜப்பான், புல்லட் ட்ரெயின், ஹை கூ