WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,801
Date uploaded in London – – 2 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 29-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய எட்டாவது உரை
8
பெரிய நகரங்களில் சூழல் கேடுகள்!
ச.நாகராஜன்
சமீபத்தில் க்ளாஸ்கோவில் நடந்த சூழல் மேம்படுத்தும் மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளை மனதில் கொண்டு நமது நாட்டில் உள்ள பெரிய நகரங்களை முதலில் நம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
தலைநகரமான டில்லியில் மட்டும் ஒரு நாளைக்கு 8000 முதல் 9000 டன்கள் வரை கழிவுப் பொருள்கள் உருவாகின்றன.
இதன் Air Quality Index திகைப்பூட்டும் 999 என்ற அளவை எட்டியுள்ளது.
காற்றுத் தரக் குறியீட்டு எண் எனப்படும் ஏர் க்வாலிடி இண்டெக்ஸில் பூஜ்யம் முதல் 300க்கும் அதிகம் என
ஆறு மட்டங்கள் உள்ளன.
இதில் 50 என்ற எண் அளவு உலகளாவிய விதத்தில் ஏற்புடைய அளவாகும். இந்த குறியிட்டில் ஒவ்வொரு 50 எண்ணும் கூடுதலாக ஆக ஆக அது மிக மோசமான அளவைக் குறிப்பதாகும். 350 என்ற அளவு காற்றின் மிக மிக மோசமான நிலையைக் குறிப்பதாகும்.
400க்கு மேற்பட்ட நிலையில் ஆரோக்கியமான ஒருவர் கூட சுவாசக் கோளாறை அடைவர். ஆக 999 என்ற எண் அளவு நச்சு நிரம்பிய அறையில் இருப்பது போலாகும்,
ஆக இதே போல காற்றின் தரம் குறைவு பட்டு மாசுபட்ட நிலையைப் பல நகரங்களிலும் காண்கிறோம்.
இந்த அபாயகரமான நிலையை மாற்ற பெரிய நகரங்களில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும்.
பெரிய நிறுவனங்களும், சூழல் மேம்பாட்டு அமைப்புகளும் இணைந்து தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரை சுத்திகரித்து வெளியேற்றச் செய்தல் இன்றியமையாதது.
காற்றை மாசுபடுத்தும் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட நச்சுப் புகை வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வாகனப் பயன்பாட்டை குறைத்தல் வேண்டும். கூட்டு முயற்சியாக ஒரு வாகனத்தில் இணைந்து செல்வது, பேருந்துகளை அதிகம் பயன்படுத்துவது, குறுகிய தூரம் செல்ல சைக்கிளில் செல்வது அல்லது நடந்து செல்வது உள்ளிட்ட ஏராளமான வழிகள் உள்ளன.
பிளாஸ்டிக் கழிவை தவிர்ப்பதோடு, திடக் கழிவை முடிந்த அளவில் குறைத்தல் வேண்டும். இதற்கான முயற்சியை ஒவ்வொரு இல்லமும் மேற்கொண்டால் நகரத்தின் சூழ்நிலை காக்கப்படும்.
பசுமைப் பூங்காக்களை ஆங்காங்கே அமைத்து அவற்றை உரிய முறையில் பாதுகாப்பது, மரங்களை வீட்டளவிலும் கூட வளர்ப்பது போன்ற எளிய வழிகள் ஏராளம் உள்ளன.
சுற்றுப்புறச் சூழல் ஆர்வலராக ஒவ்வொருவரும் மாறி குழுக்களை அமைத்து போர்க்கால அடிப்படையில் சூழலை மாசுபடுத்தும் அனைத்து விவரங்களையும் சேகரித்து அவற்றைத் தவிர்க்கவும் குறைக்கவும் உள்ள வழிகளை இனம் கண்டு பரிந்துரைத்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு நகரமும் காற்றுத் தரக் குறியீட்டு எண்ணில் லட்சிய அளவான 50 என்ற எண்ணை எட்ட வேண்டும்.
நச்சுப் புகை வாழ்விலிருந்து நல்ல வாழ்விற்கு மாறுவது நம் ஒவ்வொருவரின் கையிலும் தான் உள்ளது என்பதை உணர்வோமாக. உயர்வோமாக!
**
அகில இந்திய வானொலி நிலையம் சென்னை நிலையத்திலிருந்து 30-3-22 அன்று காலை 6.56 மணிக்கு ஒலிபரப்பாகிய சுற்றுப்புறச்சூழல் பற்றிய ஒன்பதாவது உரை
9
இமயம் முதல் குமரி வரை பாதிப்பு!
ச.நாகராஜன்
புவி வெப்பமயமாதலால் இமயம் முதல் குமரி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
வெப்ப அலைகளால் பாதிப்பு ஒரு புறம் என்றால் திடீர் திடீரென ஏற்படும் வெள்ள அபாயம் இன்னொரு புறம்; அத்துடன் மழை பெய்வதில் சீரற்ற தன்மை உருவாவது ஒரு புறம் என இப்படி பல வழிகளிலும் தீவிர பாதிப்புகள் வரவிருப்பதை அறிவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர்.
வெளியிடங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அதிக வெப்ப நிலையில் வேலை பார்ப்பது இயலாது என்பதால் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல வேலைகள் தடைப்படுகின்றன.
ஆக இப்படி ஒரு ஆண்டுக்கு இந்தியா இழக்கும் மனித மணி நேரங்கள் (Man hours) மலைக்க வைக்கும் 100 பில்லியன் மணிகள் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும். ஆக நூறு நூறு கோடி மதிப்புவாய்ந்த மனித மணி நேரங்களை நாம் இழக்கிறோம்.
ஆகவே இந்த வெப்ப உயர்வைப் பல்வேறு வழிகளாலும் முனைப்புடன் தடுக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை.
பசுமைக் கட்டிடங்களை அமைப்போம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் இலட்சிய கோஷமாக ஆக வேண்டும்.
பசுமைக் கட்டிடங்கள் கார்பன் டை ஆக்ஸைடு ஏற்படுத்தும் நச்சைத் தடுக்கும். மழை நீர் சேகரிப்பு மூலம் நீர் வளத்தைச் சீராக்கும். நிலத்தடி நீரைச் சேமிக்கும்.
வீட்டில் LED விளக்குகளைப் பொருத்துவதால் பெருமளவு ஆற்றல் சேமிக்கப்படும். Incandescent எனப்படும் வெண்சுடர் குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக LED விளக்குகளைப் பொருத்தும் போது நாம் 75 விழுக்காடு அளவு ஆற்றலைச் சேமிக்கிறோம். செலவும் குறைக்கப்படுகிறது.
அத்துடன் வீட்டிற்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் போது VOC – Volatile Organic Compounds – எனப்படும் துரிதமாக ஆவியாகும் கரிமச்சேர்மங்களினால் ஆன வண்ணங்களை ஒரு போதும் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தல் கூடாது. குறைவாக உள்ள VOC அல்லது அறவே VOC இல்லாத வண்ணங்களை வீட்டிற்கெனப் பயன்படுத்தல் வேண்டும்.
இவை மிக எளிதில் ஆவியாகி சுற்றுப்புறச் சூழலில் கலந்து சுற்றுப்புறத்தை நச்சுத் தன்மை வாய்ந்ததாகச் செய்து விடுகிறது.
சில வண்ணங்கள் தலைவலி, மயக்கம் ஆஸ்த்மா ஆகியவற்றை உருவாக்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் நீடித்து இருந்து வந்தால் ஆரோக்கியத்திற்குக் கேடு ஏற்படும். ஆகவே VOC அளவைப் பார்த்து வண்ணங்களை வாங்கிப் பயன்படுத்தல் வேண்டும்.
பெரிய கட்டிடங்களில் சோலார் எனப்படும் சூரிய ஆற்றல் விளக்குகளைப் பொருத்தலாம்.
பசுமைக் கட்டிடம் கட்டுவதற்கான பொருள்கள் என்றே ஒரு பெரும் பட்டியல் இருப்பதால் அவற்றை வீடு கட்ட விழைவோர் முதலில் அறிந்து அவற்றைப் பயன்படுத்தலாம்.
இவை எல்லாம் புதிதாக வீடு கட்டுவோருக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடிய குறிப்புகள் மட்டும் அல்ல:
இப்போது வாழ்கின்ற வீட்டில் கூட இந்தக் குறிப்புகளையும் வழிகளையும் மேற் கொள்ளலாம் என்பதும் முக்கியமான ஒன்று.
மொத்தத்தில் இந்தியாவெங்கும் உள்ள கட்டிடங்கள் இயற்கைச் சூழலுக்கு உகந்த கட்டிடங்களாக மாற்றப்பட்டால் பெருமளவு வெப்பமயமாதல் என்னும் அபாயம் குறையும் அல்லவா!
இந்தச் சூழ்நிலையை ஏற்படுத்துவது இல்லங்களில் வாழும் ஒவ்வொருவரது கடமையாகும்!
**