WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,818
Date uploaded in London – – 7 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 49
கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்!
ச.நாகராஜன்
சிவப்பிரகாசர் பெரும் அருளாளர். ஒரு சமயம் நவகோடி சித்தவாசபுரமான திருவாவடுதுறையில் எழுந்தருளி இருந்த அவர் திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்தார்.
வரும் வழியில் அவர் பல அற்புதங்களை நிகழ்த்தினார். அதைக் கண்ட மக்கள் மனம் மகிழ்ந்தனர். அவர் புகழ் எங்கும் பரவியது.
இதைக் கண்ணுற்ற சில அறிவிலிகள் அவர் மீது பொறாமை கொண்டனர்.
‘அப்படி நிஜமாகவே அவர் அற்புதங்கள் நிகழ்த்தி இருப்பாரேயானால் இங்குள்ள கோவிலில் துவஜ ஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள கல் இடபத்தை எழச் செய்து நாங்கள் வைத்திருக்கும் கடலையை உண்ணச் செய்யட்டும் பார்ப்போம்’ என்று சவால் விடுத்தனர்.
அருகிலிருந்த சிவப்பிரகாசரின் அடியார்களுக்கு இந்த இழி வசனம் பொறுக்க முடியாது போயிற்று,
உடனே அவர்கள் தம் ஆசிரியரான சிவப்பிரகாசரை வேண்டினர்.
உடனே சிவப்பிரகாசர், ‘சிவபெருமான் அருள் இருப்பின் இது ஒரு பெரிய காரியமா என்ன’ என்று சொல்லி விட்டு விபூதியைக் கையில் எடுத்துக் கொண்டார்.
வில்லார் பொதுச் சபையின் வித்தகா நீயுமுனங்
கல்லானைக் கிக்கருத்திக் காட்டியவன் – வல்லாண்மை
கட்டுரையே யாயினிந்தக் கல்லே றெழீஇக் கடலை
இட்ட இவர் முன்றினச் செய் யே
என்ற வெண்பாவை இயற்றிப் பாடினார்.
உடனே கல் நந்தியானது அனைவரும் திடுக்கிடும்படி எழுந்தது.
அங்கு வைக்கப்பட்டிருந்த கடலையை உண்டது. மீண்டும் பழையபடியே படுத்தது.
இந்த சம்பவத்தை கொங்கு மண்டல சதகம் 49ஆம் பாடலில் கூறிப் புகழ்கிறது.
பண்பார் சிவப்பிர காசனைத் துட்டர் பழிக்கவவர்
கண்பார்க்க ‘வில்லார் பொதுச்சபை யின்வித்த கா’ வெனவோர்
வெண்பா சொலக் கல் விடபங் கடலையை மென்று தின்னும்
வண்பா வலர் வரு செங்கோடை யுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள்:
சிவப்பிரகாசரை யார் என்று உணராத சில துஷ்டர்கள் அவரைப் பழித்தனர். உடனே அவர்கள் நேரில் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “வில்லார் பொதுச்சபையின் வித்தகா’ என்ற ஒரு வெண்பாவை இயற்றிப் பாடினார். உடனே கல் இடபமானது எழுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த கடலையை மென்று தின்றது. அப்படிப்பட்ட மகிமையைப் பெற்ற திருச்செங்கோடு தலமும் கொங்கு மண்டலமே என்பதாம்.
இந்த அரிய சம்பவத்தை திருச்செங்கோடு குறவஞ்சியும் பெருமையுடன் இப்படிக் குறிப்பிடுகிறது:
பொன்னின் மழை பொழிந்த தெங்கள் நாடு – வண்ணப்
பூமலரின் மாரிமிகப் பொழிந்த தெங்கள் நாடு
கன்னி யுமைக்கிடம்பகர்ந்த நாடு – நல்ல
கல்லிடபங் கடலை தின்று சொல்லுயர்ந்த நாடு
வில்லார் என்று தொடங்கும் வெண்பா ‘அத்துவித வெண்பா’ முகவுரையாக அமைகிறது.
வேலூரில் இருந்த விருபாக்ஷிராயர் மந்திரியைக் காணுமாறு வீர சைவ தீக்ஷையை இவர் பெற்றதாகச் சரித்திரம் தெரிவிக்கிறது.
இதனால் இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு கி.பி. 1467 முதல் 1485க்கு இடைப்பட்ட காலமாக இருத்தல் வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சரிதத்தின் விரிவு அத்வைத வெண்பா – திருச்செங்கோட்டு மான்மியத்திலும் , சேலம் ஜில்லா கெஜட்டிலும் காணலாம்.
***
Tags- திருச்செங்கோடு, சிவப்பிரகாசர், கல் ரிஷபம் , கடலை