WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,821
Date uploaded in London – – 8 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
தமிழ் என்னும் விந்தை
பிறிதுபடு பாட்டு!
ச.நாகராஜன்
சொல்லணி இயலில் தண்டியலங்காரம் சுட்டிக் காட்டும் ஒரு வகை பிறிதுபடு பாட்டு என்னும் சுவை மிக்க ஒரு பாடல் வகை ஆகும்.
பிறிது படு பாட்டு என்றால் வேறு ஒரு பாட்டித் தன்னிடத்தே உண்டாக்கும் பாட்டு என்று பொருள் படும்.
ஒரு செய்யுளில் அடியும் தொடையும் வேறுபடுத்திப் பார்த்தால் முந்தைய நிலை மாறி வேறு ஒரு செய்யுள் ஆகும் படி பாடப்படுவது பிறிதுபடு பாட்டு ஆகும்.
எடுத்துக் காட்டாக தண்டியலங்காரம் தரும் செய்யுள் இது:
கட்டளைக் கலித்துறை
தெரிவருங் காதலிறி சேர்ந்தோர்
விழையும் பரிசு கொண்டு
வரியளி பாட மருவரு
வல்லி யிடை யுடைத்தாய்த்
திருதருங் காமர் மயிலிய
லாயநண் ணாத்தேமொழி
அரிவைதன் னேர் எனல் ஆகும் எம்
ஐய யாம் ஆடிடமே!
பாடலின் பொருள் :
ஐய – ஐயனே
தெரிவு அருமை பரிசு கொண்டு – அகத்தில் உள்ளார் புறத்தில உள்ளார்க்குப் புலப்படாத தன்மையை உடையதாய்
காதலில் சேர்ந்தோர் விழையும் பரிசு கொண்டு – காதலால் கூடியவர்கள் விருப்பத்தோடு சேர்ந்து விரும்பும் தன்மையோடு
வரி அளி பாட – இரேகைகளை உடைய வண்டினங்கள் ஒலிக்க
மருவரும் வல்லி இடை உடைத்தாய் – மணம் பொருந்திய பூங்கொடிகளை இடையிடையே உடையதாய் விளங்கும்
திரிதரும் காமர் மயில் இயல் ஆயம் நண்ணா – ஆங்கே சஞ்சரிக்கும் மயில்களாகிய விரும்பத்தக்க அழகமைந்த கூட்டம் பொருந்தப் பெற்று உள்ள சோலை
என்று இப்படி சோலையை விசேஷமாகக் கூறி விட்டு அச்சோலையானது எப்படி விளங்குகிறது எனில்,
தெரிவு அருமை காதலில் சேர்ந்தோர் – பிறர்க்கு இன்ன தன்மை என்று புலன் ஆகாத மனம் ஒத்த காதலோடு புணர்ந்த தலைவன் – தலைவி (காதலன் – காதலி)
விழையும் பரிசு கொண்டு – விரும்பும் தன்மையை மேற்கொண்டு
வரி அளி பாட மருவரும் வல்லி இடையுடைய – வரிப்பாடல்களைப் பாடும் வண்டுகள் ஒலிக்கும் பொருந்துதற்கரிய பூங்கொடி போன்ற இடையினை உடைய
திரிதரும் காமர் மயில் இயல் ஆயம் நண்ணாத் தேன் மொழி அரிவை தன் நேர் எனலாகும் – சோலையில் திரியும் விரும்பத்தக்க மயில் போன்ற சாயலை உடையவளாய்த் தனது பாங்கியர் கூட்டத்தைச் சேராது தனிப்பட்ட இனிய மொழியினை உடைய பெண்ணாகிய தலைவிக்குச் சமானமாக விளங்கும்.
இப்படி சிலேடையுடன் சொல்லும் பொருளும் பிறிது பட்டு அமைந்துள்ளது இந்தப் பாட்டு.
இந்தக் கட்டளைக் கலித்துறை பாடலை நேரிசை ஆசிரியப்பாவாகவும் மாற்றலாம் இப்படி:-
தெரிவ்ருங் காதலிற் சேர்ந்தோர் விழையும்
பரிசு கொண்டு வரியளி பாட
மருவரு வல்லியிடை யுடைத்தாய்த் திரிதருங்
காமர் மயிலிய லாய நண்ணாத்
தேமொழி யரிவைதன் னேரென
லாகுமெம் மைய யாமா டிடமே
ஆக இப்படி ஒரு பாடலே இரு பாடலாக மாறும் விந்தையைக் கொண்டது தமிழ்!
***
tags- தண்டியலங்காரம், சொல்லணி, பிறிதுபடு பாட்டு