WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,827
Date uploaded in London – – 9 APRIL 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
திருநெல்வேலியிலிருந்து மாதம் தோறும் வெளி வரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர். அதில் 2022, ஏப்ரல் மாதம் வெளிவந்துள்ள கட்டுரை.
100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 4
ச.நாகராஜன்
(86 முதல் 100 முடிய)
86. மருந்துகள் உட்கொள்ளாத வாழ்க்கை : மருந்துகள் உடலுக்குத் தீங்கு என்பது அனைவருக்கும் தெரியும். மருந்துகள் படைப்பாற்றலை அழிப்பவை. அவை மூளை செல்களை வெறுமை ஆக்குகின்றன. மருந்தின் தன்மையைப் பொறுத்து மூளையில் ரத்தப் போக்கு, செல் இழப்பு, மூளை வளர்ச்சிக் குறைவு உள்ளிட்ட தீய விளைவுகள் ஏற்படக்கூடும். மருந்தே உட்கொள்ளா வாழ்வை மேற்கொண்டால் மூளை சக்திவாய்ந்த ஒன்றாக ஆற்றலுடன் திகழும்.
87. புதிய பழச்சாறு அருந்துங்கள் : புதிதாகத் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மூளை செல்களை வலுப்படுத்தும். ஊட்டச் சத்தை நல்கும். பெரும்பாலான பழச்சாறுகள் இப்படி செல்களை வலுப்படுத்துவதால் கவன ஆற்றல் கூடும். மனோ சக்தி அதிகரிக்கும்.
88. ஜிங்கோ பிலோபா : (Ginkgo Biloba) ஜிங்கோ பிலோபா மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆற்றலை கூட்டும் என்பது அறிவியல் ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
89. கொழுப்பு அமிலங்கள் (Fatty Acids) : Archidonic Acid – அர்சிடொனிக் அமிலம் என்பது மூளையில் உள்ள கொழுப்பு அமிலங்களில் ஒன்று. இது மூளை ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று. ஹிப்போகாம்பஸில் செல் மெம்ப்ரேனைக் கட்டமைத்து மூளையை இது காக்கிறது. நியூரான்கள் வளர்ச்சிக்கும் அவற்றினைப் பழுது பார்க்கவும் இது தேவை.
90. பாஸ்பாடிடைல்செரின் (Phosphatidylserine) : இது நியூரல் திசுக்களில் காணப்படுகிறது. செல் மெம்ப்ரேனின் கட்டமைப்பில் உதவுவது இது. இதைக் கொண்ட மாத்திரைகள் அதிக விலை கொண்டவை என்பதால் கடல் உணவு வகைகளை உட்கொண்டால் இது உடலுக்கு வலு கொடுக்கும். செலவும் இருக்காது.
91 விடமின் கே 2 (Vitamin K2) : நமது உடலெங்கும் உள்ள விடமின் கே 2, மூளையிலும் இருக்கிறது. இங்கு மூளை நியூரான்களைப் பாதுகாக்கும் மைலின் (myelin)-ஐ மூளை செல்களைச் சுற்றி உற்பத்தி செய்கிறது. கே 2 இயற்கையாகவே அமைந்துள்ள உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது நல்லது. மாத்திரைகள் வேண்டாம்.
92. விடமின் சி : காலம் காலமாக நம்பப்படும் விடமின் சி மூளையின் விரைவான இயக்கத்திற்குத் தேவை. அதை மறந்து விடக் கூடாது.
93.ப்ளூபெர்ரிஸ் : அமெரிக்காவின் டஃப்ட் பல்கலைக் கழக (Tufts University of US)ஆய்வு ஒன்று ப்ளூபெர்ரிகளைச் சாப்பிடுவதால் குறுகிய கால நினைவாற்றல் இழப்பைத் தடுக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறது.
94. தக்காளிப் பழம் : லைகோபீன் எனப்படும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட்(lycopene, a powerful antioxidant) தக்காளிப் பழத்தில் இருக்கிறது. இது டெம்னிஷியாவை – குறிப்பாக அல்ஜெமிர் வியாதியைத் தடுக்கிறது. ஆகவே தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
95. புகை பிடிப்பதை விடுங்கள் : புகை பிடிப்பதானது மூளைக்கு ஆக்ஸிஜனை அனுப்புவதற்கு பதில் கார்பன் மானோ ஆக்ஸைடை அனுப்புகிறது. இதனால் மூளை தனது திறனை இழக்கிறது. இது பக்கவாதத்தை ஏற்படுத்தவும் செய்யும். புகை பிடித்தலானது, கான்ஸரையும் உருவாக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
96.பறங்கிக்காய் விதைகள் : (Pumpkin) அரசாணிக்காய் விதைகளை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் தேவையான அளவு துத்தநாகம் (Zinc) உடலில் சேரும். இது சிந்திக்கும் ஆற்றலைக் கூட்டும். நினைவாற்றலை மேம்படுத்தும்.
97. ப்ராக்கோலி : ப்ராக்கோலி (Broccoli). விடமின் கே (Vitamin K)-ஐ மூளைக்குத் தர வல்லது. மூளை ஆற்றலைக் கூட்ட வல்லது.
98. மனக்கண்ணில் காணுங்கள் : வெற்றிக்கு ஒரு வழி வெற்றிச் சித்திரங்களை மனக்கண்ணில் காண்பதாகும். (Visualise) . ஐன்ஸ்டீன், லியனார்டோ டா வின்சி, நிகோலா டெஸ்லா, மொஜார்ட் உள்ளிட்ட மேதைகள் கூறும் வழி இது. சித்திரங்களை மனதில் உருவாக்கி “Combination Play” செய்யுங்கள் என்கிறார் ஐன்ஸ்டீன்.
99. சுற்றுப்புறத்தை உற்றுப் பார்த்து கேள்விளைக் கேட்டுப் பழகுங்கள் : வளர வளர நாம் இயல்பாகவே கேள்விகள் கேட்பதை நிறுத்தி விடுகிறோம். சுற்றுப் புறத்தை உற்று நோக்கி பல கேள்விகளைக் கேட்டுப் பழகுங்கள். இது உங்களின் மூளை ஆற்றலை வளர்க்கும். ஆர்வம் ஒன்றே தான் இதற்குத் தேவை.
100: சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் : இறுதியாக ஒன்றே ஒன்று. எண்ணங்களே நிஜமானவையாக பின்னால் உருவெடுக்கின்றன. Thoughts becomes Things. நல்ல எண்ணங்களை எண்ணுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதற்குத் தக மூளை ஆற்றல் வளர்ந்து நன்மையை நல்கும்.
மூளை ஆற்றலை வளர்க்க இன்னும் பல வழிகள் உள்ளன. அவற்றைக் கற்பதை வாழ்க்கைப் பழக்கமாக ஆக்கிக் கொண்டால் நமது வாழ்க்கை சிறப்பானதாக அமையும், இல்லையா!
***
இந்தத் தொடர் இத்துடன் நிறைவுறுகிறது